April 19, 2014

பொதுபல சேனாவை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை தவறானது - சிறிரெலோ உதயராசா

(Vi) 

பொதுபலசேனா அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பு என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். ஆன்மிக ரீதியிலான ஜனநாயக நடவடிக்கையில் ஈடுபடும் இத்தகைய அமைப்பினை இவ்வாறு பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை தவறானதாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பொதுபல சேனா அமைப்பானது ஆன்மிகவாதிகளினால் செயற்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பிலுள்ளவர்கள் ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமது மத விவகாரங்கள் தொடர்பில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இத்தகைய அமைப்பினரை ஜனநாயக விரோத அமைப்பாக கருதி பயங்கரவாத பட்டியலில் இணைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. இந்த செயற்பாடு ஜனநாயக உரிமைகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு மீள்பரி சீலனை செய்வது நன்றாகும்.

நாட்டில் மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை - அடித்துக்கூறுகிறார் மஹிந்த


நாட்டின், மத சுதந்திரம் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சகல மதங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலர், நாட்டின் அபிவிருத்தியை கேலிக்கு உட்படுத்தி, இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டை இன்னல்களுக்கு உட்படுத்த முயல்வதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந் திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

கிராந்துரு கோட்டை மகாவலி பிரதேச பி, சீ வலயத்தில் வாழும் 5,500 பேருக்கு காணி உறுதி வழங்கும் வைபவம் மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி தனதுரையில் மேலும் கூறியதாவது;

இப்போது இல்லாத பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கு கின்றனர். நல்லிணக்கம் பற்றிக் கூறுகின்றனர். மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். அரசியல் அமைப்பில் கூறப்பட்டவாறு எந்தவொரு பிரஜைக்கும் எந்த இடத்திலும் வாழும் உரிமை உண்டு. அதேபோன்று தமது மொழியைப் பேசும் உரிமை உண்டு, எதையும் பின் பற்றும் சுதந்திரமும் உண்டு. அத்துடன் புத்த மதத்தை அரச அனுசரணை யோடு பாதுகாக்க வேண்டும் என்று அதே அரசியல் யாப்பில் கூறப் பட்டுள்ளது. அப்போது உருவாக்கப்பட்ட அதே அரசியலமைப்புத்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. எனவே இது தொடர்பில் எவரும் கலவரப்படத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=iCYYg9U5n4U

துப்பத்தான் வேண்டும்...!


(கவிஞர் நாகூர் ழரீஃப்)

ஞானம் சாரா
ஞானசாரவின்
பித்தலாட்டங்களில்
முஸ்லிம்கள்
துப்பத்தான் வேண்டும்!

அன்னியர்களின்
உணவுகளில்
பாணங்களில்
மூன்று முறை
துப்பவேண்டும்
என்று அல் குர்ஆனில்
உள்ளதாகச் சொல்லும்
பொய்கள் மீது
துப்பத்தான் வேண்டும்!!

அன்னியர்களின்
காணிகளை
அபகரிக்குமாறு
அல் குர்ஆனில்
'தகிய்யா' என்ற
பகுதியில் கூறப்பட்டுள்ளதாக
சார கூறும்
பொய்கள் மீது சாரி சாரியாக 
துப்பத்தான் வேண்டும்!!

இனவாதத்தை 
தூண்டி நிற்கும்
இனவாதிகளின்
ஈன வாதத்தின் மீதும்
ஈனச் செயல்களின் மீதும்
துப்பத்தான் வேண்டும்!!

ஹலால் வேண்டாம்
என்று உலரிக்கொண்டு,
ஹலால் நாடுகளை
நோக்கி அலையும்
ஹராமிகளின்
கோஷங்களின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

சர்வதேச பயங்கரவாதம்
தேசத்துள் உள்ளதாக
உலரிக் கொண்டு,
சர்வதேசத்தை ஏமாற்றும்
பாது. செயலாளரின்
பாதுகாப்பற்ற பேச்சின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

எல்லாச் சமூகமும்
பொல்லாங்கின்றி
வாழ்வதாய் பொய்யுரைத்து,
வாழ்வாதாரம் தேடும்
தலைகளின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

சமூகம் எக்கேடு
கெட்டாலும்
என்கதிரை எனக்கென்ற
அமைச்சர்களின்
ஆசனங்களில்
அவர்களது பதவிகளில்
துப்பத்தான் வேண்டும்!!

முஸ்லிம் அமைப்புக்களை குற்றம் சுமத்தும் தினகரன் பத்திரிகை

(20-04-2014)

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் மூலமாக அரசியல் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகளில் முஸ்லிம் அமைப்புக்கள் சிலவும், முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு எனக் கூறிவரும் அமைப்பு ஒன்றும் ஈடுபட்டுவருவதாக முஸ்லிம் புத்திஜீவிகளும். கல்விமான்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமது தனிப்பட்ட, தாம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் தாம் சார்ந்த எதிரணிக் கட்சிகளினதும் வளர்ச்சிக்காக நடக்கும் சிறு சம்பவங்களை பெரிதாக மிகைப்படுத்தி ஊடகப் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் புத்திஜீவிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி யுள்ளனர். அத்துடன் முஸ்லிம் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் இந்த முஸ்லிம் அமைப் புக்கள் மற்றும் அந்த அமைப்புக்களின் தலைமைகள் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளாகவும், ஆதரவாளர்களாகவும்., அங்கத்தவர்களாகவும் இருந்து வருவதால் இவர்களது செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் ஒரேயொரு கொள்கையே காணப்படுகிறது.

இதனால் அவர்கள் தமது சமூகத்தை மறந்து செயற்படுகின்றனர் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மையாக சமூகத்திற்காகக் குரல்கொடுக்கும் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்போர் கட்சி சார்பில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே காணப்படும் பிரதானமான பலரும் எதிரணியைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். 

இதன் மூலம் இவர்கள் மீதான நம்பகத்தன்மை இழக்கப்பட்டுள்ளதாகவும் கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத் தரப்பிலுள்ள அமைச்சர்களான ரிசாத் பதியுத்தீன். ஏ. எச். எம். பெளஸி, ஏ, ஆர். எம். ஏ. காதர் ஆகியோர் நிதானமாகவும், பக்குவமாகவும் அதேவேளை எவ்விதமான விட்டுக் கொடுப்புமில்லாது சமூகத்திற்கு எதிரான சவால்களைக் கையாண்டு வருகையில் முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு எனக் கூறிக்கொள்ளும் சில சக்திகள் தமது பிரசாரத்திற்காகவும், தாம் சார்ந்த எதிர்க்கட்சிகளின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுதலுக்காகவும் பிரச்சினைகளை ஊதிப் பெருப்பிப்பதாகவும் புத்திஜீவிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். உணர்ச்சிவசப்படாது. நிலைமையை அமைதியாகவும், சமாதானமாகவும் பேசித் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இத்தகைய அமைப்புகளின் போலிப் பிரசாரங்களைச் செவிமடுக்க வேண்டாமெனப் பொது மக்களிடம் கேட்டுள்ளனர். இவர்கள் முற்றுமுழுதாக தமதும், தாம் சார்ந்த அமைப்புக்களினதும், எதிரணியினதும், பிரசாரத்திலேயே குறிப்பாக இருப்பதாகவும் அதற்காக சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளிவிட்டு அதில் குளிர்காய முயல்வதாகவும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அவர்களுடனும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடனும் பேசியே தீர்வு காணப்பட வேண்டும். எனவே எரியாத வீட்டிற்கு எண்ணை ஊற்றி பற்றவைத்து அதில் உங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டாமெனவும் புத்திஜீவிகள் கேட்டுள்ளனர். உண்மையில் பல முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு என்ற ஒன்று நாட்டில் இருக்குமானால் அது சமூகத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸ் அரசியல் கட்சிகூட நிதானமாகச் செயற்பட்டு வருவதை புத்திஜீவிகள் பாராட்டியுள்ளனர்.

உலக சாதனை படைக்க தயாராகும் சவூதி அரேபியா..!

துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் தான் இதுவரை உலகத்திலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடமாகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. அக்கட்டிடத்திற்கு தற்போது கிங்டம் டவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

“அடுத்த வாரம் கட்டுமான பணிகள் துவங்க உள்ள இக்கட்டிடமானது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 3280 அடி உயரத்தில் கட்டப்பட உள்ளது. 200 மாடிகளை கொண்டு கட்டப்படும் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க சுமார் 1.23 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 5.7மில்லியன் பரப்பளவில் கட்டப்படும் இக்கட்டிடப்பணியில் 80000 டன்கள் இரும்பு பொருட்கள் பயனனபடுத்தப்பட உள்ளன.

இக்கட்டிடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இக்கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தால் செங்கடல் முழுவதையும் காணலாம்“ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடம் தற்போதைய உலக சாதனை கட்டிடத்தை விட 568அடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


வருடத்திற்கு 2 இலட்சம் ஏப்பமிடும் இங்கிலாந்து முயல்

இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் வசித்து வரும் 62 வயதான அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் டேரியஸ் என்ற முயலை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படும் இந்த முயல் சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம் கொண்டதாகும். இது உணவாக தினமும் 12 கேரட்டுகளை சாப்பிடுகிறது. அப்படியெனில் இது வருடத்திற்கு சுமார் 4000 கேரட்டுகளை சாப்பிட்டு வருகிறது. 

இது குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில்,

"டேரியஸை பராமரிப்பதற்கு மட்டும் வருடத்திற்கு 2500 யூரோ செலவாகிறது. இது மிகவும் பேராசை பிடித்தது. சாப்பிடுவதை ஒருபோதும் இது நிறுத்தாது. ஆனாலும் டேரியஸ் ஆரோக்கியமாக உள்ளது" என்று தெரிவித்தார். 

இதற்கான உணவுச் செலவு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சம் இருக்கும். இம்முயல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய விமானத்தை தேடுவதில் எவ்வித பலனும் கிட்டவில்லை - அவுஸ்திரேலியா


காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் சென்று தேடும் பணிகள் கடந்த 7 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் எவ்வித பலனும் கிட்டவில்லையென்பதால் எதிர்வரும் 5 முதல் 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

239 பயணிகளுடன் மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன எம் எச் 370 விமானம் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை.

பிக்குவின் தாக்குதலில், தலைமை பிக்கு மரணம்

பிக்கு ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி தாக்கப்பட்ட குறித்த தேரர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நகரை கண்காணிக்க சீ.சி.டீ.வீ கமராக்கள்

நீர்கொழும்பு நகரை கண்காணிக்கும் வண்ணம் சீ.சி.டீ.வீ கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தலைமையில், நீர்கொழும்பு காவற்துறை நிலையத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் உள்ள நகையகம் மற்றும் வெளிநாட்டு நாணய பரிமாற்ற நிலையம் ஆகியவற்றில் ஆயுதாரிகள் கொள்ளையிட்டிருந்தனர்.

அதேவேளை, கடந்;த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள தங்க ஆபரண மற்றும் வெளிநாட்டு பரிமாற்று நிலையங்களில் ஒன்றரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

வில்பத்து காடு அழிந்து போவதற்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் அல்ல - JVP

நாட்டில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் அனைத்து நாட்டில் வாழும் சகலருக்கு சொந்தமானது என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் இவை சொந்தமானவை.

குடியிருக்கவும் காணிகள் வேண்டும். உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகள் வேண்டும். இதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும்.

காணியற்ற மக்களுக்கு காணியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இதனை நிறைவேற்ற வேண்டும்.

சரியான முறையில் காணிகளை மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

வில்பத்து வனம் அழிந்து போகிறது என்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமே அன்றி அப்பாவி முஸ்லிம் மக்கள் அல்ல.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது முஸ்லிம் மக்களுக்கோ வேறு நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரயோசனமில்லை.

பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்களை பாதுகாத்து கொள்வது போல் காணியற்றவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் லால் காந்த கூறியுள்ளார்.

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளனர் - பிரதமர் டி.எம். ஜயரத்ன

புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன அமைச்சரான பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமையானது பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.

அப்படியான நபர்களை புத்தசாசனத்தில் இருந்து நீக்கும் வகையில் குறித்த சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்திற்கு 31 தலைமை பௌத்த பிக்குகளில் உதவியும் கிடைத்துள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா சிக்குமா..?


பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, ஆலோசகர்கள் சிலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்நிய மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் பௌத்த மதம் அடிப்படைவாத மதம் என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் சர்வதேச சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக இலங்கையை அவமதிப்புக்கு உட்படுத்துவதே இந்த சதித்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி குரல் கொடுத்துவரும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் கிடைக்கும் விதம், நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்படும் விதம், இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ள வெளிநாட்டு அமைப்புகள், ஆலோசனை வழங்கும் தரப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆலோசகர்கள் அரசாங்கத்திடம் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

பொதுபல சேனா உட்பட புதிததாக முளைத்துள்ள பௌத்த அமைப்புகளுக்கு சில வெளிநாடுகள் உதவியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பொதுபல சேனா அமைப்பு அமெரிக்கா மற்றும் நோர்வே நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்


(ஏ.எல்.ஜனூவர்)

மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் 19.04.2017 (இன்று) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இவ் நடமாடும் சேவை அட்டாளைச்சேனை 03,04,05,12,13,14,15,16 ஆம் பிரிவு மக்களுக்கு நடாத்தப்பட்டது. பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அக்கரைப்பற்று கல்வி வலயப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.சமாதான நீதவான்

மடவளையைப் பிறப்பிடமாகவும் மாத்தலை மண்தண்டாவலையை வசிப்பிடமாவும் கொண்ட யூ.யஹியான் அகில இலங்கை சமாதான நீதவான அண்மையில் மாத்தலை மாவட்ட நீதிபதி விராஜ் ரனதுங்க முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மடவளை பள்ளி வீதியைச் சேர்ந்த இவர் தற்போது மாத்தலை சாகிரா தேசிய பாடசாலையில் உதவி அதிபராகக் கடமையாற்றி வருகிறார். மகரகம் தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்ப்பட்டு வரும் திறந்த பாடசாலைகள் கல்வி நெறி, மாத்தளை ஹலீமிய்யா அரபுக்கலாசாலை, என்பவற்றில் கணித போதானாசிரியராகக் கடமையாற்றும் இவர் பயிற்றப்பட்ட கணித ஆசிரியரும் மடவளை மதீனா மத்திய கல்லூரியின் பழையமாணவருமாவார்.

இவர் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களில் பொறுப்புள்ள பல பதவிகளை வகித்தார். இவர் மாத்தலை மண்தண்டாவளை ஜூம்மா பள்ளியில் செயலாளர், மற்றும் மடவளை பஸார் வை.எம்.ஏ. இயக்கம், குண்ணேப்பான மடிகே கிராமோதய சபை என்பவற்றின் தலைவராகவும் கடமை யாற்றி உள்ளார். அத்துடன் மடவளை சுப்பானுல் முஸ்லீமீன் இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் மடவளைக்கிளை இளைஞர் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மதீனா மத்திய கல்லூரியில் கிறிகட் குழு அமைப்பதில் முக்கிய பங்காற்றிய இவர் மதீனா கிறிகட் குழு பொறுப்பாசிரியராகவும், பேண்ட் வாத்திய இசைக் குழு பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.

மடவளையைச் சேர்ந்த ஹைரா நிறுவனக் குழுமத்தின் தவைலர் யூ.எம்.பாசில் அவர்களின் சகோதரரான இவர் காலம் சென்ற உவைஸ் - குர்ரத்துல் அய்ன் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். 20.4.2014

புதிய மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்தார்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
  
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பிரதேசத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்முனைப்  பாலத்தை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19-04-2014 சனிக்கிழமை மாலை  மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பிரதித் தூதுவர் ஆசகா ஓகைய் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ஆகியோரினால் பாலம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் ,பாலத்தின் நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பால வேலைத்திட்டம் ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 210 மீற்றர் நீளமும் 9.8 மீற்றர் அகலமும் கொண்ட மண்முனைப் பாலம் மற்றும் மேற்குப்பக்கம் 195 மீற்றர் கிழக்குப் பக்கம் 293 மீற்றர் நீளம் கொண்ட தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கும் குறுக்காக அமைக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்கள் இணைக்கப்படும்.

இப்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் கொக்கட்டிச்சோலை கேந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய பாலத்தின் ஊடாக கொக்கடிச்சோலை, மகிலடித்தீவு, மாவடிமுன்மாரி, அரசடித்தீவு, முதலைக்குடா, தாந்தாமலை, முனைக்காடு, தும்பங்கேணி உட்பட சுமார் 2 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் மிகுந்த பயனைப்பெறவுள்ளனர்.

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகள்..!

யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லீம்களின் காணிகளின் அருகே கவனிப்பாரற்று காணப்படும் ஏனைய காணிகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக கிராம சேவகர் பிரிவுகளா உள்ள ஜே-86,ஜே-87 ஆகிய பகுதிகளில் உள்ள ஆசாத் வீதி,எம்.ஓ வீதி,காமல் வீதி,ஜின்னா வீதி ஆகியவற்றில் முஸ்லீம் மக்கள் வழமை போன்று மீளக்குடியமர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

எனினும் ஏனைய முஸ்லீம் மக்கள் 1990 ஆண்டு விட்டுச்சென்ற தங்கள் காணிகளை இன்றும் சுத்தம் செய்து இன்று வரை மீளக்குடியமரவில்லை.

இதனால் அப்பகுதி காடுகள் போல காட்சியளிக்கின்றதுடன் விச ஜந்துக்கள் உள்ள பகுதியாகவும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சில மீளக்குடியமர்ந்த மக்கள் காணிகளில் மீளவும் வீடுகளை கட்டி ஏனைய சகோதரர்களுக்கு விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

இவ்விடயம் அரசாங்க அதிபர்.யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் இவ்வாறு கவனிப்பாரற்று காணப்பட்டுள்ள காணிகள்  உரிமையாளர்களால் கைவிடப்பட்டதாக கருத்தில் கொண்டு அரசாங்க உடமையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள  முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

(பா.சிகான்)சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்

(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2012/2013ம் ஆண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் பாடசாலை அப்துல் மஜீத்  ஆராதனை மண்டபத்தில்  இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எச்.எம். பாரூக் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில்
பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மருத்துவம்,பொறியியல்,வர்த்தகம் உட்பட ஏனைய துறைகளுக்கு தெரிவான 40 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வைபவத்தின் போது அறுவடை சஞ்சிகை மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை ஒளிபரப்பாளர் சாமசிறி மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.


எகிப்தில் நடைப்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டியில் இலங்கையர் வெற்றி (படம்)

எகிப்தில் கடந்த (6/4/2014) அன்று நடைபெற்ற சர்வதேச கிறாஅத்    போட்டிக்கு 50 நாடுகளிலிருந்து ஹாபிழ்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

இப்போட்டியில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து  பதுளையைச் சேர்ந்தவரும், அட்டுல்கம இன்ஆமுல் ஹசன் அரபிக் கல்லூரி மாணவருமான அல்ஹாபிழ் T.R.M யாசீர் அவர்களும் செய்யப்பட்டிருந்தார். போட்டியில் 10 வது இடத்தைப் பெற்று, ஒரு இலட்சம் ரூபாவை பரிசாக பெற்றுக்கொண்டார். யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிறன்று (20) காலை 9 மணியளவில் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதன்போது யாப்பு அங்கீகாரம் தொடர்பாக இறுதி முடிவு,மாதாந்த சந்தா நிர்ணயம் என்பன குறித்து ஆராயவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(பா.சிகான்)

இத்தாலியில் இலங்கை முஸ்லிம் ஒன்றியம்.


(எம் ரிஸ்வான் காலித்)

இத்தாலியிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம்  ஒன்றியம் என ஒரு சங்கத்தை நிறுவியுள்ளது.

இத்தாலியில் பல நகரங்களிலிருந்து வந்த நுற்றுக்குமதிகமான முஸ்லிம்கள் மிலாநோவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஒன்றியத்தின் தலைவராக ஆதிப் அபுல் ஹசனும் காரியதரிசியாக சாகிர் அப்துசலாமும் பிரதம அமைப்பாளராக ரில்வான் சகரியாவும் தெரிவானார்கள். இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த எந்த இனத்தவருக்கும் ஏதாவது  பிரச்சினை ஏற்பட்டால்  அதனை உடனடியாக தீர்க்க முயற்சிப்பதே தமது நோக்கமென தலைவர் அபுல் ஹசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகள் தேவை..!


புத்தளம் - தில்லையடியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுந்த சம்பளமும் வழங்கப்படும். உரிய ஒப்பந்தங்களின் பின்னர் ஆசிரியைகள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

விண்ணப்பங்களை எதிர்வரும் 01-05-2014 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

Mohamed Sajeeth
48/1 Perci Dias Mawatta,
Mobolla,
Wattala.

சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்


அமெரிக்காவில் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால், 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து நீரை கொண்டு வந்து இயற்கையான சூழலுக்கு மத்தியில் தண்ணீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த புதன்கிழமை நீர்த்தேக்கம் அருகே விலங்கின் கழிவு கிடந்தது. ஆனால், அதை பார்த்த போது மனிதர்கள் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தன. சந்தேகப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சுமார் 18 வயது நிரம்பிய 3 வாலிபர்கள் வேலிக்குள் அத்துமீறி நுழைந்தது தெரிந்தது. அதில் ஒருவர் குடிநீர் தேக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் பதிவாகி இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுகாதாரமற்ற குடிநீரை மக்களுக்கு சப்ளை செய்ய கூடாது என்று அதிகாரிகள் உடனடியாக முடிவெடுத்தனர். முன்னதாக நீர்த்தேக்கத்தில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து நீர்த் தேக்கத்தில் இருந்த சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். பின்னர் நீர்த்தேக்கம் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக நீர் நிரப்பப்பட்டது  என்று நீர்த்தேக்கத்தை நிர்வகித்து வரும் அதிகாரி டேவிட் செப் கூறினார்.ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு இதேபோல் நீர்த்தேக்கத்தில் அசுத்தம் செய்தது தெரிய வந்தது. அப்போது 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்குள் 2வது முறையாக 2 கோடி லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக்கே கதின்னு இருக்கீங்களா..?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று உடல்நிலை சரியில்லை, மனசு சரியில்லை என எல்லாவற்றையும் உடனுக்குடன் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போட்டு விடுகின்றனர்.

இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம்.

எப்போதும் பேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்தபடி இருப்பவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றனவாம்.

தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம்.

இந்த ஆய்வை 881 பெண்களிடம் நடத்தியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்திமுடித்திருக்கிறார்கள்.

எப்போதும் பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் பிறர் தங்களது போட்டோவை ஷேர் பண்ணுவதைப் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்களாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் ஃபேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

இப்படி அதிக நேரத்தைச் சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது.

இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூழ்கிய தென்கொரிய படகில் இருந்து மீட்கப்பட்ட பள்ளி துணை முதல்வர் தற்கொலை

475 பயணிகளை ஏற்றிச்சென்ற செவோல் என்ற தென்கொரியப் படகு கடந்த புதன்கிழமை அன்று காலை அந்நாட்டின் ஜின்டோ என்ற இடத்துக்கு அருகே கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் 352 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். சியோலின் தெற்கே உள்ள அன்சன் நகரத்தில் செயல்பட்டு வரும் டன்வோன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இம்மாணவர்கள் கொரியாவின் தென்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தீவான ஜெஜுவிற்கு சுற்றுலா செல்வதற்காக இந்தப் படகில் ஏறியுள்ளனர்.

படகு கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியபோது அதிலிருந்த 179 பேர் கடலில் குதித்து தப்பித்துள்ளனர். அவர்களில் அந்தப் பள்ளியின் துணை முதல்வரான கங் மின் கியு(52)வும் ஒருவராவார். இந்த விபத்தில் இன்னும் தேடப்பட்டு வரும் 268 பேரின் உறவினர்களும் அங்குள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கியுவும் தங்கி இருந்துள்ளார்.

இன்று காலை அங்கிருந்த ஒரு மரத்தில் இவர் பிணமாகத் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜின்டோ நகரின் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மூழ்கியதாகத் தேடப்பட்டு வருபவர்களில் பெரும்பான்மையான மாணவர்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள நூலகத்திற்கு பின்லேடன் பெயர்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியில் பிரார்த்தனை குருவாக மௌலானா அப்துல் அசிஸ் என்பவர் பணியாற்றி வருகின்றார். போராளிகள் பதுங்குமிடமாக இருந்த இந்த மசூதி கடந்த 2007-ம் ஆண்டில் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் போராளிகளின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த மசூதி மூலம் இரண்டு பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றில் ஆண்களும், மற்றொன்றில் பெண்களும் கல்வி பயின்று வருகின்றனர். 15,000 பெண்கள் பயிலும் பள்ளியில் பெண் ஆசிரியைகளே பணிபுரிந்து வருகின்றனர். இதனையும் சர்ச்சைக்குரிய மௌலானா அப்துல் அசிசே நிர்வகித்து வருகின்றார்.

இவர் பெண்கள் பள்ளியில் அமைந்துள்ள நூலகத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட மறைந்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் பெயரை வைத்துள்ளார்.

இந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவரது தகவல் தொடர்பாளரான டெசின் உல்லா இஸ்லாமிய மதத்திற்காக உயிரை விட்ட ஒரு தியாகியாக ஒசாமாவை அசிஸ் கருதுகின்றார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த நூலகத்திற்கு அவரது பெயரை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற்காக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பல்லவி தவான் (38). கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது 10 வயது மகன் அர்னவ் மர்மமான முறையில் இறந்துவிட்டான். இந்நிலையில், அவரது கணவர் ஊருக்கு திரும்பி வரும் வரை இந்து மத அடிப்படையில் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை நடத்திய போலீசார் பல்லவி தனது மகனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க பல்லவி எழுத்து மூலமான வாக்குமூலத்தை போலீசாருக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிவிட்டதால் எனது மகன் அர்னவ்-வை படுக்கையிலிருந்து எழுப்பினேன். ஆனால் அவன் அசைவற்று கிடந்தான். பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவன் அப்படி நடிப்பதாக நினைத்தேன். பின்னர் அவனை குளிப்பாட்டுவதற்காக எழுப்பிய போதுதான் அவன் இறந்திருப்பது தெரியவந்தது. நான் உடனடியாக அவனது இதயத்துடிப்பை பரிசோதனை செய்து அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவன் உணர்ச்சியற்று கிடந்தான்.

அதன் பிறகு அவனது பள்ளிக்கு போன் செய்து அர்னவ் இனி பள்ளிக்கு வரமாட்டான் என்று தெரிவித்தேன். அவர்கள் அதற்கு காரணம் கேட்டபோது நான் விளக்கம் அளிக்கவில்லை.

எனது கணவர் வேலைக்கு சென்றிருந்ததால் அவர் ஊருக்கு திரும்பி வரும் வரை எனது மகனின் சடலத்தை, வீட்டில் ஃபிரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டிகளை பாலித்தீன் கவர்களில் நிரப்பி குளியல் தொட்டிக்குள் வைத்தேன். அதன் மீது சடலத்தை வைத்தேன். பின்பு எனது கணவர் வந்ததும் அவரிடம் மகனின் மரணத்தை தெரிவிப்பதற்காக சென்றபோது அவர் வாசலில் போலீசாருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன். அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. போலீசார் என்னை கைது செய்து ஜீப்பில் ஏற்றி சென்றனர். அப்போது நான் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அது புரியாது என்பதால் நான் எதுவும் பேசவில்லை. 

இந்து மதச்சடங்குகளின் படி அடக்கம் செய்வதற்காகவே எனது மகனை அவ்வாறு ஐஸ் கட்டியில் வைத்திருந்தேன். நான் எனது மகனை கொலை செய்யவில்லை. எனது மகனுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறேன். நான் அவனை மிகவும் நேசித்தேன். நான் ஒருபோதும் அவனுக்கு தீங்கு செய்ய நினைத்ததில்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எனினும், சடலத்தை பரிசோதனை செய்த அந்த மாகாணத்தின் மருத்துவ நிபுணர்கள் இது 'திட்டமிட்ட' மரணம் அல்ல என்றும், பெரும்பாலும் 'இயற்கையான' மரணமாகவே இருந்திருக்க கூடும் என அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; அதிர்ச்சி தரும் CCTV காணொளி

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட அதிர்ச்சி தரும் காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த கொள்ளையர்கள் சுமார் 30 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை நேற்றிரவு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரடங்கிய குழுவினர், தலைக்கவசத்துடன், நகைக் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மரிச்சிகட்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்த ஒரு காணியும் இல்லை - இராணுவம்


வில்பத்து சரணாலயத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கடற்படையினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டை, இராணுவம் நிராகரித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மரிச்சுகட்டு பிரதேசத்தில் யுத்தத்துக்கு முன்னர் 73 முஸ்லிம் குடும்பங்கள் குடியேறி இருந்ததாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த பகுதியில் முள்ளிகுளம் கடற்படை முகாமை நிர்மாணிப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்ட போது, இந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பகுதியில் தற்காலிகமாக முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் ருவான வணிகசூரிய, அமைச்சரால் கூறப்படும் மரிச்சிகட்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்த ஒரு காணியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணி சுவீகரிக்கப்படும் போது, எந்த ஒரு முஸ்லிம் குடும்பமும் தங்களின் காணி சுவீகரிக்கப்படுவது தொடர்பில், தெரியப்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 30 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..?? ஆங்கில நாளிதழ் ஊகம்

(Pp) ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதியின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் நாளுக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

அதேவேளை, வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. 

எனினும், 2016ம் ஆண்டு வரை அதிபர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார். 

எனினும், ஐ.நா விசாரணைகளை முன்வைத்து அரசியல் நலனை அறுவடை செய்வதற்காக தேர்தலை, மகிந்த ராஜபக்ச அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மாநாடொன்று            20-04-2014 நாளை ஞாயிற்றுக்கிழமை  மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னாலுள்ள பஸ்மலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கு அறிவுபூர்வமான மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் பி.எம்.அஸ்பர் (பலாஹி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளதுடன் கலிமாவை அறிந்துகொள்வதன் அவசியம் என்ற தலைப்பில் மௌலவி எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.

இதில் அணைத்து இஸ்லாமிய சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.


பொதுபல சேனாக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கத்தயார் - முபாரக் மௌலவி

புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொதுபல சேனா நிரூபித்தால் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயார் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, 

அண்மையில் கொம்பணித்தெரு பொலிஸ் நிலையம் முன்பாக பேசிய ஞானசேர தேரர் என்பவர் அல்குர்ஆன் பற்றி அடிப்படையற்ற விதத்தில் பேசியுள்ளார். இப்படியானதொரு வசனம் உள்ளதாக தெரிவிப்பது உண்மைக்குப்புறம்பான அப்பட்டமான பொய் என்பதை முஸ்லிம்களும் அறிவார்கள். ஆனால் சிங்கள மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு வேண்டுமென்றெ பொய் சொல்லப்பட்டுள்ளது.  இத்தகைய பொய் வார்த்தைப்பிரயோகத்தை பயன்படுத்தி உலகளாவிய சமாதான சமயத்தை கொச்சைப்படுத்துவதை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
    
அதே போல் இப்படியொரு நேரடி வசனம் குர்ஆனில் உள்ளதா என்பதை அல்குர்ஆனின் அந்த வசனத்தை பொதுபலசேனாவோ அல்லது வேறு எவருமோ காட்டினால் அவருக்கு பத்து லட்சம் சன்மானம் வழங்க உலமா கட்சி தயாராக உள்ளது. ஒரு மாத காலத்துள் இதனை நேரடியாக காட்ட முடியாத போது தமது பொய்யான வார்த்தைக்காக பொது பல சேனா பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும். அதே வேளை இத்தேரரின் குர்ஆன் பற்றிய பொய் பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க ஆளுந்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

பொதுவாக இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாதவர்களையே முஸ்லிம் சமூகம் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதால் இத்தகைய விடயங்களுக்கு இவர்களால் பதில் தர முடியாத கேவலத்தை சமூகம் அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் இது பற்றி தெளிவாக அவர்களால் பேச முடியாது என்றிருப்பின் உலமாக்களிடமாவது எழுதிப்பெற்று வாசிக்க முன்வரவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே  இது விடயத்தை சகல இன மக்களுக்கும் தெளிவு படுத்தியதாக முடியும்.

இதனை விடுத்து பொது பல சேனாவை கண்டிப்பதாக பத்திரிகை அறிக்கைளை விடுவது என்பது அமைச்சரவையில் உள்ள கட்சிகளின் கோழைத்தனமானதும் ஏமாற்றுத்தன்மையுள்ளதுமான நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். பொதுபலசேனாவின் இஸ்லாம் அவமதிப்பு பற்றி உலமா சபையினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலை இன்று தோன்றியுள்ள நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் புண்ணாக்கு விற்கவா அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்றே கேட்கத்தோன்றுகிறது. 

சாரதி தூங்கினார் - வாகனம் ஆற்றில் வீழ்ந்து 5 பேர் மரணம்

கண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று 19-04-2014 அதிகாலை 5.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனம் வீதியை விட்டு விலகி தெட்டகம ஆற்றில் வீழ்ந்துள்ளது. வாகன சாரதி உறங்கியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

ஐந்தரை வயதான குழந்தையொன்று விபத்தில் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

April 18, 2014

மன்னிக்கும் மனப்பான்மையும், பெரும்தன்மையும் ஜெயித்தது - தூக்குத் தண்டனை ரத்தானது


(Vi) கழுத்தில்  தூக்குக்கயிறு  இறுக்கப்பட்டு  மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த  இறுதித்  தருணத்தில் படுகொலைக் கைதியை  அவரால்  கொல்லப்பட்ட  இளைஞனின்  தாய்  முகத்தில்  அறைந்து  மன்னித்து  நெஞ்சை  நெகிழ வைக்கும்  சம்பவம்   ஈரானில்  இடம்பெற்றுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம்  குறித்து   சர்வதேச ஊடகங்கள்  இன்று வெள்ளிக்கிழமை  செய்திகளை  வெளியிட்டுள்ளன. 

பலால்  என சுருக்கப் பெயரால்  அழைக்கப்படும்  மேற்படி படுகொலையாளி  7 வருடங்களுக்கு  முன் ஈரானிய  ரோயன்  நகரிலுள்ள  வீதியொன்றில்  இடம்பெற்ற மோதலின்  போது 18 வயதான அப்துல்லாஹ்  ஹ{ஸைன் சாதேவை 
கத்தியால்  குத்தி படுகொலை  செய்திருந்தார்.  இதனையடுத்து  பலால் கைது செய்யப்பட்டார். 

அவருக்கான மரண தண்டனை  நிறைவேற்றம்  உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை கண்கள்  கட்டப்பட்டு  கதிரையொன்றில்  தூக்குக் கயிறு கழுத்தை  இறுக்க பலால் நாற்காலி ஒன்றின் மீது நின்று கொண்டிருந்தார். இதன்போது அருகில் வந்த அப்துல்லாஹ்  ஹ{ஸைன் சாதேவின் தாயார் பலால்  ஏறியிருந்த  நாற்காலியை தள்ளிவலிடாமல்  பலாலின்  கன்னத்தில்  அறைந்துள்ளார். பலாலின்  உயிர்  பிரியும் தருணத்தை  காண  அங்கிருந்தவர்கள்   திகிலுடன் காத்திருந்த  வேளையிலேயே  மேற்படி  திடீர்  திருப்பம்  இடம்பெற்றுள்ளது. 

பலால்  ஏறியிருந்த  நாற்காலியைத் தள்ளி  அவருக்கான மரண தண்டனையை  நிறைவேற்ற  அப்துல்லாஹ்  ஹின்  பெற்றோர்  வரவழைக்கப்பட்ட  போது அப்துல்லாஹ்வின்  தாயார்  கதிரையை  தள்ளுவதற்கு  பதிலாக  பலாலின்  கன்னத்தில்  மாறி  மாறி  அறைந்து  அவருக்கு  மன்னிப்பளித்தார்.  மரண தண்டனை  நிறைவேற்றப்படவிருந்த  தினத்துக்கு  மூன்று நாட்களின்  முன்  அப்துல்லாஹ் தனது  தாயாரின்   கனவில்  தோன்றி  தான்  தற்போது  நல்ல  இடத்தில்  இருப்பதாகவும் தனது  மரணத்துக்கான பழிவாங்கலில்  ஈடுபட  வேண்டாம்  எனவும்  கூறி இருந்ததாகவும்   அதனாலேயே  அவனது  தாய்  மனம்  மாறியதாகவும்  அப்துல்லாஹ்வின்   தந்தையான  அப்துல் ஹனி   தெரிவித்தார். 

அப்துல்லாஹ்  கொல்லப்படுவதற்கு   சிறிது  காலத்திற்கு  முன்னர்  மேற்படி  தம்பதியினர்  11 வயது இளைய மகனை  வீதி  விபத்தொன்றில்  இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வீதி மோதலின்  போது தற்செயலாகவே  அப்துல்லாஹ்வை  பலால்  கொல்ல  நேர்ந்ததாகவும்  அப்துல் ஹனி கூறினார். 

தனது  மகனைக்  கொன்ற  படுகொலையாளிக்கு  மன்னிப்பளித்த  பின்  விம்மி  அழுது  கொண்டிருந்த  அப்துல்லாஹ்வின்  தாயை  பலாலின்  தாய்  அன்புடன் ஆரத் தழுவி  தனது  நன்றியைத் தெரிவித்தார். 

மன்னிப்பளிக்கப்பட்ட  பலால்  விடுதலை  செய்யப்படுவாரா  இல்லையா ?  என்பது  
தொடர்பில்  தகவல்  எதுவும்  வெளியிடப்படவில்லை. 

அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலி

பொலநறுவை, அரலகங்வில, பிரதேசத்தில் உள்ள அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலியாகினர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக உழவு யந்திரம் பாதையை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குகின்றனர்.

பலியானவர்களின் சடலங்கள் தற்போது அரங்கல பிரதேச மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sfm

தொண்டமானாறு கடல்நீரேரியின் லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கின (படங்கள்)


தொண்டமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இரு மருங்கிலும் இவை கரையொதுங்கியுள்ளன.

கரவெட்டி பிரதேச செயலர் சிவஸ்ரீ, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் மற்றும் படையினர் ஆகியோர் இப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

இந்த மீன்கள் இறந்த கரையொதுங்கியைமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

ஆனால் கடும் வரட்சியால் நீர் உவர்ப்படைந்துள்ளதால் இம் மீன்கள் இறந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்த மீன்கள் திரளி வகையைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கரையொதுங்கிய மீன்களை உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி அவற்றை புதைப்பதற்கான நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை நகரசபையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்ட வருகின்றன.

இதேவேளை - யாழ். மாவட்டத்தில் மீன்களை வாங்கும் பொதுமக்கள் அவற்றை வாங்கும்போது அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறு கரவெட்டி பிரதேச செயலாளர் சிவஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனெனில் கரையொதுங்கிய மீன்களை மீன் வியாபாரிகள் எடுத்துச் சென்றுள்ளதால் அவற்றை குளிரூட்டியில் வைத்து விட்டு விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறந்த மீன்களில் நச்சுத் தன்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.Older Posts