"மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்"
மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவீன உலகின் மர்ம தேசம் என்றால் அது வட கொரியா என்று கூறினாலும் மிகையாகாது. அங்கு எல்லாமே ரகசியம் தான். உலகமே கரோனா பரவலால் கதறிய காலத்திலும் கூட வட கொரியாவின் நிலை பற்றி எதுவும் வெளியே வரவில்லை. கரோன உயிர்ப் பலிகள் குறித்து எந்த செய்தியும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தடுப்பூசியில் கூட அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக எல்லைகளை மூடினர். இதனால் சீனாவுடனான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சீன வர்த்தம் மூலமாகவே உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்து வந்தது வட கொரியா. இந்நிலையில், கரோனா காரணமாக எல்லைகள் மூடல், அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே வட கொரியா அதிகமாக செலவழித்ததால் அங்கே மற்ற பணிகள் முடங்கின. இது ஒருபுறம் இருக்க புயல், பனி போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கொரிய அரசு ஊடகமான ரோடோங் சின்முன் பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கத்தில், “நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தற்சார்பு தான் அவசியம். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற்றால் அவர்கள் உதவியின் போர்வையில் நம்மை அடக்குவார்கள். நம் உள்நாட்டு விவகாரத்தில் அரசியலில் தலையிடுவார்கள். அதனால் வெளிநாட்டு உதவிகள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க நினைப்பதும், அவர்கள் கொடுக்கும் உணவை உண்ண முற்படுவதும் விஷம் தோய்ந்த இனிப்பை உண்பதற்கே சமம்” என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே வட கொரியாவில் இருந்து பெரும்பாலான ஐ.நா. அமைப்புகளும், மேற்குலக தன்னார்வலர்களும் வெளியேறிவிட்டனர். சீனா மட்டும்தான் இப்போதைக்கு வெளியிலிருந்து உணவுத் தேவைக்கு உதவும் ஒரே நாடாக இருக்கிறது. 1990-களில் ஏற்பட்ட பஞ்சம் போன்றதொரு நிலையை அல்லது அதைவிட மோசமான நிலையை வட கொரியா சந்திக்கலாம் என்று அண்டை நாடான தென் கொரியா கவலை தெரிவித்துள்ளது.
தென் கொரிய கிராமப்புற மேம்பாட்டு முகமை வெளியிட்டுள்ள தகவலில், வட கொரியாவின் பயிர் உற்பத்தி 2021-க்குப் பிறகு வெகுவாகக் குறைந்துள்ளது. கோடை காலத்தில் பெய்த கன மழை, அதன் பின்னர் தொடர்ந்த பனி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வட கொரியா உணவுப் பஞ்சத்துக்கு வித்திட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
வட கொரிய மக்களின் முக்கிய உணவு என்றால் அது அரிசிதான். ஆனால் விளைச்சல் குறைந்ததாலும், அப்படியே கிடைத்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும்பாலானோர் மக்காச்சோளத்துக்கு மாறிவிட்டனர். 2023 தொடக்கத்திலிருந்தே மக்காச் சோளத்தின் விலையும் 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
வட கொரியாவுடனான இணைப்புகாக தென் கொரியாவில் இணைப்பு அமைச்சகம் என்று ஒன்று இயங்குகிறது. அந்த அமைப்பு, அண்மைக்காலமாக வட கொரிய மாகாணங்கள் சிலவற்றில் பசி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே அங்கே உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும், அதனால் உணவு வழங்கல், விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளது.
வட கொரியா, தென் கொரியா பகை பின்னணி: ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.
கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950-ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.
1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது.
Post a Comment