Header Adsசீனக் கப்பலை அனுமதித்துவிட்டு, இந்தியாவை சமாளிக்க ரணில் ஆற்றிய உரை


இந்திய அரசாங்கம் நேற்று (15)  வழங்கிய முதலாவது கடல்சார் ரோந்து (டோனியர் 228) விமானத்தை,  இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய முழுமையான உரை


காலங்காலமாக எங்களுக்கு உதவி செய்து வரும் இந்திய அரசுக்கும் இந்திய கடற்படைக்கும் முதலில் நன்றி கூற வேண்டும். எனக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும் போது, நான் முதன்முதலில் ஒரு போர்க்கப்பலில் ஏறியது எனக்கு நினைவிருக்கிறது. அது இந்திய கடற்படைக்கு சொந்தமானது. அப்போது பிரிட்டிஷ் அரச கடற்படை அந்த இந்தியக் கப்பலை இந்நாட்டுக்கு வழங்கியிருந்தது.


விமானப்படைத் தளபதியும் இந்திய உயர்ஸ்தானிகரும் இந்த விமானம் பற்றி நீண்ட விளக்கம் அளித்துள்ளதால், இன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தின் சிறப்புகள் குறித்து சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.


இந்தியாவின் சுதந்திர தினம் குறித்து 'தி ட்விஸ்ட் வித் டெஸ்டினி'  (‘The Twist with Destiny’) என்ற தலைப்பில் பண்டித் நேரு அவர்கள் ஆற்றிய உரையை நேற்று யூடியூப் சமூகத் தளத்தில் பார்த்தேன். அதிலிருந்து ஒரு பகுதியை உங்களுக்கு மேற்கோள் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். “இன்று நாம் கொண்டாடும் வெற்றி ஒரு படி மட்டுமே. சிறந்த பரிசோதனைக்கான வாய்ப்புகளைத் திறப்பதுதான் நாம் எதிர்பார்த்திருக்கும் வெற்றி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எதிர்கால சவாலை ஏற்கும் அளவுக்கு நாம் தைரியமாக இருக்கிறோமா, நிபுணத்துவம் பெற்றிருக்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும்.  இந்தியா அதனைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த எதிர்காலப் பாதையை பண்டித் நேரு அவர்கள் காட்டினார். நீங்கள் பெற்றுக்கொண்டதையே இன்று நீங்கள் அறுவடை செய்கிறீர்கள். இன்று வளர்ந்து வரும் இந்தியா உலக வல்லரசாக மாறி  வருகிறது. நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு சக்திவாய்ந்த இந்தியா உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவத்தை எம்மால் பார்க்க முடியும்.
இந்தியாவின் அரசியல்வாதிகளில் ஒருவரான பிரதமர் வாஜ்பாய் அவருக்குச் செலுத்திய அஞ்சலியை நினைவூபடுத்த வேண்டும். ஒரு நாள் லோக்சபாவில் பேசிய அவர், பண்டித் நேருவைப் பற்றி எப்படிப் பேசினார், அவரை பாதி சர்ச்சில் பாதி சேம்பர்லின் என்று அழைத்தார். அன்று மாலை அவர் பண்டித் நேருவை ஒரு விருந்தில் சந்தித்தார், பண்டித் நேரு அவரிடம் வந்து, ‘நீங்கள் மிகவும் உறுதியான உரையை ஆற்றினீர்கள்’ என்று கூறி, அவரை முதுகில் தட்டிவிட்டுச் சென்றார். அதுவே பண்டித் நேருவின் மகத்துவத்தின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைவதற்கும் அங்கத்துவம் பெறுவதற்கும் பண்டித் நேரு எங்களுக்கு முழு ஆதரவை வழங்கினார்.


ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் பிரதிநிதி, அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையில் இணைப்பதற்கு நியூயோர்க் செல்லவும், அங்கிருந்து செய்ய வேண்டிய பணிகளுக்காகவும் எனது தந்தைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கினார். என் தந்தைக்கு அவரை நன்கு தெரியும்.


அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா ஹவுஸ் (India House) செல்லும் வழியில் அவரின் கார் செல்வதை ஒரு மாணவனாக தூரத்தில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன்.


ஆனால், எனக்கு இன்னும் பல இந்திய அரசியல்வாதிகளை சந்திக்கும் வரப்பிரசாதமும் அதிர்ஷ்டமும், கிடைத்தது. குறிப்பாக பிரதமர் மொரார்ஜி தேசாய், பிரதமர் சரண் சிங், பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரையும் சந்தித்துள்ளேன். விசேடமாக பிரதமர் நரசிம்மராவ் குறித்து கூற வேண்டும். நாங்கள் இருவரும் கல்வி அமைச்சர் பதவிகளை வகித்ததனால் நான் நன்றாக அவரை அறிந்திருந்தேன். பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் மற்றும் பிரதமர் வாஜ்பாய் அவர்களையும் சந்தித்துள்ளேன்.


அவர்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருந்ததோடு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவின் நிதியமைச்சராக அந்நாட்டின் பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரத்திற்கு வழி ஏற்படுத்தினார். 


அதேபோன்று, இந்த விமானத்திற்காக திருமதி சோனியா காந்தி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் நாம் நன்றி கூற வேண்டும்.

 

எனக்குத் தெரிந்த இன்னும் பலர் இருக்கின்றனர். இலங்கையில் வளர்ந்து வரும் அரசியல்வாதிகளுக்கும், உயர் பதவிகளைப் பெற எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கும் எனது அறிவுரை என்னவென்றால், உங்களின் இந்திய நண்பர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அவ்வாறு செய்யாவிடின், பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் ஒருவருக்கொருவர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும். பல்வேறு துறைகளில் எம் இரு தரப்புக்கும் பொதுவான கருத்துக்கள் உள்ளன.


நாம் கடலின் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடாக  இருக்கிறோம்.  இந்தியா, அதன் சொந்த நலன்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில், உலகளாவிய சக்தியாக அதன் பங்கையும் பார்க்க வேண்டும். ஆனால் நாம் அவர்களிடம் பேசுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா எங்களின் நெருங்கிய அண்டை நாடு என்பதுடன், இந்திய-இலங்கை உறவுகள் மட்டுமின்றி, பிராந்தியம் மற்றும் உலகப் பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டிய பொதுவான பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். எனவே இந்தப் பிராந்தியத்தில் எம்மால் அதை செய்ய முடியும்.


இந்தியாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஒரே கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது எங்களுக்கு அநேகமான வாய்ப்புக்களைத் தந்துள்ளன. அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஆனால் இரண்டு அரசுகள், இரண்டு அரசாங்கங்கள் என்பதால் கருத்து வேறுபாடுகள் இருக்கும் நேரங்கள் உள்ளன. அவை சர்ச்சையாக மாறக்கூடாது. ஏனென்றால் நம் உறவு என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். நமது உறவு இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மட்டுமல்ல. எங்கள் உறவு அதையும் தாண்டியது.


வேதங்களால் போதிக்கப்பட்ட சிந்து நதிக்கரையில் உள்ள நமது பொதுவான பாரம்பரியம், கங்கை சமவெளியில் புத்தபெருமானின் போதனைகள் போன்றவை நமக்குப் பொதுவானவை மற்றும் நமக்கே உரியவை. மேலும் அவை இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கு முனைக்குப் பொதுவானவை. இதைத்தான் நாங்கள் கட்டியெழுப்பினோம், ஆனால் இந்த பொதுவான கடந்த காலத்திற்குள் எங்களுக்கும் வெவ்வேறு பக்கங்கள் உள்ளன. உங்கள் நாட்டில் அது இந்து மதம், அது பிரபல்யமான மதம். நமது நாட்டில் பௌத்தம் உள்ளது. இராமாயணத்தில் இந்தியர்களுக்கு இராமர் வீரர், இலங்கைக்கு இராமர், இராவணன் இருவரும் வீரர்கள்.


உங்கள் மொழி அதிகமாக சமஸ்கிருதத்தைச் சார்ந்துள்ளதோடு, நாங்கள் நாகடி மற்றும் பாலியை அதிகம் சார்ந்துள்ளோம். அதனால் நமக்குள் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் நமக்கு இப்படி தொடர்ந்து செல்லலாம்.


மகாத்மா காந்தியின் அகிம்சை உன்னதமானது. சுதந்திரமான அகிம்சை இயக்கத்திற்கு நமக்கும் இவற்றைத் தவிர வேறு வழியில்லை.


ஆனால் 1931-க்குப் பிறகு வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டத்துறையொன்றே நமக்கு இருக்கின்றது. அதனால் நாம் வேறு பாதையில் பயணித்தோம். இந்தியாவில் அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறு வேறாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனவே இந்த பொதுவான அம்சங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன, அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.


நாம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நான் எப்போதும் கூறி வந்தேன். ஒரு முகம் ஒருபுறம் விழும்படியும், மற்றொரு முகம் மறுபுறம் விழும்படியும் நாணயத்தைப் பிரிக்க முடியாது. ஏனென்றால் வரலாறு நம்மை ஒன்று சேர்த்திருக்கின்றது. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உறவு என்ன? அதனை விபரிக்க எனக்கு சரியான சொல் கிடைக்கவில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு சகவாழ்வு தொடர்பை நாம் எட்ட முடியும். எங்கள் இரு நாடுகளின் 75வது ஆண்டு விழாவை நாங்கள் இருவரும் கொண்டாடுகிறோம். நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்போம் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-16

No comments

Powered by Blogger.