Header Ads



புத்தளம் - கொழும்பு வீதி, விபத்தில் ஒருவர் வபாத்


புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார். 


பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.