Header Ads



திசைமாறிச் செல்லும் ஜும்ஆக் கடமைகள்


ஜும்ஆ என்பது ஒரு மகத்துவமான கடமையாகும். ஓர் ஊரில் உள்ள அனைத்து முஸ்லிமான பருவமான ஆண்களும் ஓரிடத்தில் ஒன்றுகூடும் ஒரு வாராந்த மாநாடு ஆகும். 


அதனை விடுத்து ஒவ்வொரு மஹல்லாவும் ஜும்ஆ கடமையை நிறைவேற்றும் இடமாக மாற்றப்படுமாயின் முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியத்தையும் பலத்தையும் வளர்த்தல் என்ற ஜும்ஆவின் இலக்கும் நோக்கும் வீணடிக்கப்படும்.


ஓர் ஊரில் ஒரு ஜும்ஆதான் நிறைவேற்றப்படல் வேண்டும் என்பது ஆண்டாண்டு காலம் நடைபெற்று வரும் ஒரு விடயமாகும்.


எனினும், தவிர்க்க இயலாத கெரோனா தொற்றின் பரவலின் காரணமாக எமது ஜும்ஆக்கள் ஜும்ஆ மஸ்ஜித்கள் தவிர்ந்த ஏனைய மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், மண்டபங்கள் போன்ற இடங்களிலும் நடாத்தி, அதன் மகத்துவத்தைப் பாதுகாக்கும் பொருட்டு  நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு ஒரு வழிகாட்டலை செய்திருந்தது.


அதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் ஜும்ஆக்கள் பரவலாக நடைபெற்றன. 


தற்போது கொரோனாவின் தொற்றின் அபாயம் நீங்கி, மக்கள் பொதுப் போக்குவரத்து, அன்றாட நிகழ்வுகள் போன்றவற்றில் கட்டுப்பாடுகள் இன்றி வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதால், பரவலாக பல இடங்களில் இடம்பெற்று வந்த ஜும்ஆக்களும் வழமைக்கு திரும்ப வேண்டும்.


ஒருவருக்கு வுழு செய்வதற்கு தண்ணீர் இல்லாத போது, அவர் தயம்மும் செய்து கொள்ளலாம்; இது தற்காலிகமான ஒரு சலுகையாகும். தண்ணீர் கிடைத்த பின்னரும் தயம்மும் செய்வதானது அங்கீகரிக்க இயலாத ஒரு விடயமாகும்.


பயணத்தின் போது தொழுகைகளை சேர்த்தும் சுருக்கியும் தொழலாம் என்பது தற்காலிகமான ஒரு சலுகையாகும். மாறாக பயணம் முடிந்த பின்னரும் சேர்த்தும் சுருக்கியும் தொழுவதானது ஏற்றுக்கொள்ள இயலாம ஒரு விடயமாகும்.


ஓர் ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று கூடுவதற்கு அங்குள்ள மஸ்ஜிதில் இடவசதி இல்லை எனும் போது மாத்திரமே மற்றும் ஓர் இடத்தில் வேறு ஒரு ஜும்ஆவை நடாத்துவதற்கு சட்டத்தில் இடம்பாடு உண்டு.


அது தவிர சட்டத்தில் இடம்பாடு அல்லது அனுமதி கிடையாது என்பதுவே மார்க்க சட்டவல்லுனர்களான இமாம்களின் சட்டத் தீர்புகளாகும்.


அதாவது ஓர் ஊரில் இரண்டாவது அல்லது அதற்கு அதிகமாக ஜும்ஆக்களை நடாத்த வேண்டிய கட்டாயத் தேவை அல்லது தங்கடம் ஏதாவது இல்லாத நிலையில் நடாத்தப் படுமாயின் அந்த மேலதிகமான ஜும்ஆ செல்லுபடியாகாது என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.


இரண்டு ஜும்ஆக்கள் போதுமாயிருக்க மூன்றாவது ஜும்ஆவை அல்லது அதற்கு அதிகமான ஜும்ஆக்களை ஆரம்பிப்பது குற்றமாகும். 


எமது மத்ஹபில் நேர்த்தியான கருத்தாவது, ஒரு நகரத்தில் ஒரு மஸ்ஜிதில் மக்கள் ஒன்று கூடுவது சிரமமில்லை என்றிருப்பின் அதற்கு அதிகமாக ஜும்ஆக்களை நடாத்துவது ஆகாது; எனினும் ஒன்றுகூடுவது சிரமாக இருந்து தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்வது ஆகுமாகும் என்பதேயாகும் என்று இமாம் தஹாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (இக்திலாஃபுல் அஇம்மஹ் அல் உலமா, பாகம் : 01, பக்கம் : 156, 157)


மாலிக்கி மத்ஹபினரின் கருத்தைப் பார்க்க (அஷ் ஷர்ஹுல் கபீர், பாகம் : 01, பக்கம் : 374, மினஹுல் ஜலீல், பாகம் : 01, பக்கம் : 427, ஷர்ஹு முக்தஸர் கலீல், பாகம் : 02, பக்கம் : 74)


ஷாபிஈ மத்ஹபின் கருத்தாவது, ஓர் இடத்தில் ஜும்ஆவுக்காக மக்கள் ஒன்றுகூடுவது சிரமமாகவும், அவர்கள் ஒன்றுகூடும் மஸ்ஜிதை விசாலப்படுத்தவும் இடம்பாடு இல்லாத வரையில் மேலதிகமான ஜும்ஆக்களை  அதிகரிக்க முடியாது என்பதாகும். (அல் மஜ்மூஃ, பாகம் : 04, பக்கம் : 585, 591, ஹாஷிஹத்துல் புஜைருமீ, பாகம் : 02, பக்கம் : 194, 195)


ஹன்பலீ மத்ஹபினரின் கருத்தை பார்க்க, (அல் முக்னீ, பாகம் : 02, பக்கம் : 248, ஷர்ஹு அஸ்ஸர்கஷீ, பாகம் : 02, பக்கம் : 196)


மேற்படி சட்டவல்லுனர்கள் அனைவரினதும் கருத்து, அத்தியாவசிய தேவையில்லாமல் மற்றுமொரு ஜும்ஆவை அதிகரிக்க முடியாது என்பதுடன், அவ்வாறு அதிகரிக்கப்படும் ஜும்ஆக்கள் சன்மார்க்க அடிப்படையில் செல்லுபடியற்றதாகும் என்பதுடன் தேவைக்கு மேலதிக ஜும்ஆக்களை நடாத்தும் நிர்வாகங்களும் அவ்விடங்களில் குத்பா உரை நிகத்த்தும் கதீப்மார்களும் பொதுமக்களின் வீணாகப் போகும் ஜும்ஆக்களுக்கு அல்லாஹ்விடம் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


அருமை நபிகளாரின் காலத்தில் மதீனாவில் மட்டுமே ஜும்ஆ நடைபெற்றது; மக்கள் மதீனாவின் ஓரப்பகுதிகளில் இருந்தும் அருகாமையில் இருந்த கிராமங்களில் இருந்தும் வருகை தந்தனர்; அவர்களைப் பார்த்து, அவரவர் பகுதிகளிளோ அல்லது மேலதிகமாக ஜும்ஆக்களை நடாத்திக்கொள்ளவோ அனுமதிக்கவில்லை. (பதாவா அல் லஜ்னத்துத் தாஇமா, பாகம் : 08, பக்கம் : 257, 259)


மேலதிக குறிப்பு 


ஓரிடத்தில் இட நெருக்கடி காரணமாக மாத்திரமே இரண்டாவது ஜும்மா ஆரம்பிக்கலாமே தவிர, எமது பள்ளிவாசல் விசாலமானது அல்லது நாற்பது நபர்களுக்கும் அதிகமாக உள்ளனர் அல்லது சமீபத்திய பள்ளிகளில் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர் அல்லது பலருக்கு ஜும்மா தவறிப் போகிறது போன்ற எந்த காரணமும் ஏற்றுக் கொள்ள தக்கவை அன்று.


மௌலவி நாகூர் ளரீஃப் (அல் புகாரீ)

2022.05.15

No comments

Powered by Blogger.