Header Ads



"உயிர் ஒரு தடவைதான் போகும்" என்று கூறிவிட்டு, குண்டர்களை எதிர்த்துநின்ற ருக்கையா பீபி (நேரடி ரிப்போட்)

- களத்திலிருந்து பிறவ்ஸ் -

மடிகே அனுக்கண கிராமத்தில் தாக்குதல் நடைபெறும்போது, ருக்கையா பீபி என்ற மூதாட்டி, "உயிர் ஒரு தடவைதான் போகும்" என்று கூறிவிட்டு காடையர்களை எதிர்த்து குரல்கொடுத்த பெண்மணியாக பேசப்பட்டார். பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று நாங்கள் பேச்சுக் கொடுத்தோம்.  

"தாக்குதல் நடைபெறும்போது நான் வீட்டுக்குள்தான் இருந்தேன். ஆனால், பிள்ளைகள் என்னை வயலுக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சின்னச் சின்னப் பிள்ளைகள்தான் வந்து அடித்தார்கள். எனது பிள்ளைகளின் திருமண வீடுகளில் பந்தல் நாட்டியவர்களும் எங்களின் வீடுகளுக்கு அடித்தார்கள். இப்படிப் பழகிவிட்டு அடிக்க அவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ" என்று மனம் நொந்துகொண்டார்.

பிள்ளையின் வாயைப் பொத்தினோம்

மடிகே அனுக்கண பிரதேசத்தின் உட்பகுதிக்குள் சென்றபோது வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்று எரிந்து சாம்பலாக காட்சியளித்தது. அதன் உரிமையாளரான என்.எம். சவாஹிரை சந்தித்து, என்ன நடந்ததென்று கேட்டோம். 

"கொழும்பில் துணிகளை வாங்கிவந்து, அதை இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறேன். எனது வானுடன் சேர்த்து, அதற்குள் வைத்திருந்த 25 இலட்சம் ரூபா பெறுமதியான துணிகளையும் காடையர்கள் தீயிட்டுக் கொழுத்திவிட்டனர். இப்போது வானும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வானை எரிக்கக்கூடாது என்றும் இல்லை எரிக்கவேண்டும் வந்தவர்களுக்குள் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் வானை எரித்துவிட்டனர். வீட்டையும் தாக்குவதற்கு முற்பட்டபோது, அவர்களில் சிலர் அதனை தடுத்துள்ளார்கள். எனது மனைவி, குழந்தைகள், தாய் மிகுந்த பயத்துடன் வீட்டுக்குள் இருந்திருந்தனர். பிள்ளை சத்தம் போட்டுவிடும் என்ற பயத்தில் அதன் வாயைப் பொத்திக்கொண்டு வைத்திருந்தனர்" என்றார்.

மீன்தொட்டிக்கு நஷ்டயீடு தாருங்கள்

"சுமார் 20 பேரளவில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் மீன்தொட்டியை உடைத்துவிட்டு, வீட்டையும் உடைத்தார்கள். அவர்களை எங்களை துரத்திக்கொண்டு வந்தனர். நாங்கள் பயத்தில் காட்டுக்குள் ஓடினோம். அப்போது எங்களது வீட்டில் மேசன் வேலை செய்த ஒருவரும் வந்திருந்தார்" என்றார் மடிகே அனுக்கண பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரான முஹம்மட் சம்ரின்.

நாங்கள் இழப்பீடு தொடர்பான படிவத்தை நிரப்பிக்கொண்டிருக்கும்போது, "உம்மா மீன்தொட்டியையும் சொல்லுங்கள்" என்றான் அந்த மாணவன். அதற்கு அவரது தயார் சிரித்துக்கொண்டே, "பாடசாலைக்குச் செல்லும்போது செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமித்துதான் அவர் இந்த மீன்தொட்டியை வாங்கினார். அதை உடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது. அதுதான் வருகின்ற எல்லோரிடமும் மீன்தொட்டிக்கு நஷ்டயீடு கேட்கிறார்" என்று விளக்கமளித்தார். 

தலைகால் புரியாமல் ஒரு இனத்தின் மீது பாரபட்சமின்றி காட்டுகின்ற இனவாதம், உளவியல் ரீதியில் பிஞ்சு நெஞ்சங்களையும் பாதித்துள்ளது. அந்த மாணவனுக்கு மீன்தொட்டி ஒன்றை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், சூழலும் நேரமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை என்பதுதான் எங்களுக்கு மிகப்பெரிய கவலை.

இல்லாத ஆயுதத்தைக் கேட்டு தாக்கினார்கள்

பிரச்சினை நடைபெற்றபோது கினியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் தொழுகை நடாத்திய மெளலவி பதுர்தீன் அஸ்மியை சந்தித்து நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் கேட்டோம்.

“கினியம பிரதேசத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என்று முதலில் தேடினார்கள். பின்னர் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடினார்கள். பாதுகாப்புத் தரப்பினர் எவ்வளவு தேடியும் சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை. மூன்றாவதாக குளத்தில் ஆயுதங்கள் கிடப்பதாக பெரும்பான்மை சமூகத்தினர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தினத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சூழ்ந்திருக்கும் நிலையில் முழுநாளும் குளத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. அன்றையதினம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜும்ஆ தொழுகையை தவிர்த்து, பள்ளிவாசல்களில் ளுஹர் தொழுகையை நடாத்தினோம். மறுநாள் சனிக்கிழமையும் குளத்தை சல்லடை போட்டுத் தேடினார்கள். இரண்டு நாட்கள் தேடியும் அவர்கள் எதிர்பார்த்த எந்த ஆயுதங்களும் அகப்படவில்லை. உங்களது ஊரில் எந்த ஆயுதங்களும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பொலிஸார் சார்பில் எமது பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை, குளத்தில் மீண்டும் ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி சுமார் 30 பேர்கொண்ட குழுவினர் மாலை நேரத்தில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்தனர். பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித அறிவித்தலும் கொடுக்காமல், அவர்களாகவே ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி அவர்களாகவே தேடிக்கொண்டிருந்தார்கள். பின்னர் குளத்திலிருந்து 256 தோட்டாக்கள் கிடைத்ததாக பொலிஸாருக்கு அறிவித்தனர்.

வேண்டுமென்றே தோட்டாக்களைப் போட்டுவிட்டு, எங்களை குற்றவாளிகளாக சித்தரித்து, எங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அவர்கள் தயாராகுவதாக நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்தோம். பின்னர் இரண்டு பொலிஸார் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டனர். பள்ளியின் பாதுகாப்புக்காக பொலிஸாரின் அனுமதியுடன் நாங்களும் குழுவொன்றை நியமித்திருந்தோம்.

பெரிய பள்ளியை தாக்கிவிட்டு, எங்களது பள்ளிவாசலை தாக்குவதற்கு காடையர் கூட்டம் வந்தது. நாங்கள் அவேசமாக சத்தம்போட்டு அவர்களை உள்ளே வரவிடமால் திருப்பியனுப்பினோம். அப்போது பொலிஸாரும் அங்கே சாட்சியாக இருந்தனர். பின்னர் ஒரு மணிநேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாங்கள் சட்டத்தை மதித்து, காவலுக்கு நின்ற எமது குழுவை பள்ளிவாசலுக்குள் அழைத்துக்கொண்டோம்.

அப்போது ஒருசாரார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்க, இன்னொரு சாரார் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டோம். நான்தான் இமாமாக முன்னின்று தொழுகை நடாத்தினேன். பிரார்த்தனை முடியும் தருவாயில், இராணுவத்தினர் முன்னாலும் ஆயிரக்கணக்கான பெரும்பான்மை சமூகத்தவர்கள் கத்தி, தடிகளுடன் பின்னாலும் வந்துகொண்டிருந்தனர்.

கலகக்காரர்களை விரட்டுமாறு வந்திருந்த இராணுவத்திடம் நாங்கள் கூறினோம். ஆனால், உங்களிடம் இருக்கின்ற ஆயுதங்களை வெளியில் போட்டால் அவர்கள் போய்விடுவார்கள் என்று இராணுவத்தினர் பதிலளித்தனர். நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காத நிலையில், உயிரைப் பாதுகாப்பதற்காக வெளியில் ஓடினோம். பின்னர் காடையர்கள் பள்ளிவாசலுக்குள் புகுந்து முற்றாக சேதப்படுத்தினார்கள்” என்று தெரிவித்தார்.

சிங்களக் கிராமங்களுக்கே பாதுகாப்பு

மடிகே அனுக்கண பிரதேசத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.எம். றிஸ்வி மெளலவி கூறியதாவது;

"பழிவாங்கக்கூடிய நிலையில் நாங்கள் அவர்களுடன் பழகவுமில்லை, அவர்கள் எங்களுடன் பழகவுமில்லை. அதனால் எங்களது பள்ளிவாசல் தாக்கப்படாது என்று நினைத்திருந்தோம். ஆனால், ஒரு லொறி, ஒரு வான், ஒரு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் 200 பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் வந்து பள்ளிவாசலை தாக்கினார்கள். 

பள்ளிவாசல் சொத்துக்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். புனித அல்குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தினார்கள். அத்துடன் குர்ஆன் பிரதிகள், வுழூ செய்யும் தடாகம் என்பவற்றுக்குள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தார்கள். பள்ளிவாசலுக்கு அருகில் நின்ற எங்களையும் தூசண வார்த்தைகளால் திட்டி அடிப்பதற்கு விரட்டினார்கள். அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வீட்டைவிட்டு அயலிலுள்ள காடு, வயல்களுக்குள் ஓடினார்கள். 

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் இந்த தாக்குதலை செய்தார்கள். இதில் அதிகமானவர்கள் எங்களது பிரதேசங்களை அண்மித்து வாழ்பவர்கள். பழிவாங்கும் எண்ணம்கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் நோக்கங்கள் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். நாங்கள் விட்டுச் செல்லும் எமது இளம் தலைமுறையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதுதான் இன்று கேள்விக்குறியாக இருக்கிறது.  

இந்த பள்ளிவாசலுக்கு மாத்திரம் 20 மில்லியன் ரூபா சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் விசேட அமல்களை நடாத்துவதற்கு எங்களுக்கு பயமாக இருக்கின்றது. பயத்தின் காரணமாக உரிய நேரத்துக்கு தொழமுடிவதில்லை, நோன்பு நோற்பதற்கு சாப்பாடு வசதிகள் இல்லை. இதனால் நோன்பின் மாண்பை இழந்துவிடுவோமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர்ந்து அவர்களை தாக்கவுள்ளதாக இப்போது பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட கிராமங்களை விடுத்து, பெரும்பான்மை சமூகத்தின் கிராமங்களுக்கே பாதுகாப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. தாக்குதல் நடந்த பின்னரும் முஸ்லிம் கிராமங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.  

அன்றாட கூலித்தொழில் செய்பவர்களை பெரும்பான்மை சமூகத்தினர் அடித்து விரட்டுகிறார்கள். சலாம் கூறினாலோ அல்லது முஸ்லிம் கடை என்று தெரிந்தால் வாங்கிய சாமான்களை வைத்துவிட்டுச் செல்கின்றனர். மடிகே அனுக்கண பிரதேசத்தில் வாழும் 350 குடும்பங்களும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.

1 comment:

Powered by Blogger.