Header Ads



முஸ்லிம்களுக்குரிய நிவாரணங்களை நோட்டமிடும் சிங்களவர்கள், முறைத்து புகைப்படமெடுக்கும் அவலம்

- களத்திலிருந்து பிறவ்ஸ் -

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு பெளத்த பீடங்களோ, அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இறுக்கமானதொரு நிலைப்பாட்டை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஜனநாயக நாடு என்ற ரீதியில், ஒரு இனத்தின் மீது நடாத்தப்படும் இப்படியான தொடர் தாக்குதல்கள் அனுமதிக்க முடியாது.

2014ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டம், கடந்த வருடம் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்கள், தற்போது குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் என முஸ்லிம்கள் மீதான பேரினவாத காடையர் கும்பல்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. இந்த தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் பாரிய பொருளாதார அழிவுகளையும் உயிர்ச்சேதங்களையும் சந்தித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் இஸ்லாத்தின் பெயரினால் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு போருதோட்டையில் முஸ்லிம்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. அதன்பின், பேஸ்புக் பின்னூட்டம் ஒன்றை காரணம் காட்டி சிலாபம் நகரில் தோற்றுவிக்கப்பட்ட பதற்றநிலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இதன்பின்னர் குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிப்பொல, மடிகே அனுக்கண, நிக்கவரெட்டிய, கொட்டம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, பண்டுவஸ்நுவர, கம்மலிய, வீதியவெலி, பூவல்ல, எஹட்டுமுல்ல, அசனாகொடுவ, கினியம, தோரகொடுவ, கல்ஹினியாகடுவ, புத்தளம் மாவட்டத்தில் கொட்டராமுல்ல, தும்மோதர, புஜ்ஜம்பொல, கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

ஊரங்குச் சட்டம் அமுலிலிருந்த நேரத்திலேயே முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டன. இதன்போது அப்பாவி குடும்பஸ்தர் ஒருவரின் உயிரும் அநியாயமாக பறிக்கப்பட்டது. பல இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தாக்குதல்கள் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதுவொன்றும் முதற்தடவையல்ல.

மு.கா. அனர்த்த நிவாரண செயலணி

குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.ஏ. நியாஸ் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனர்த்த நிவாரண செயலணி களத்தில் இறங்கியது.

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த செயலணி பல குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விபரங்களை ஒன்றுதிரட்டியது. இந்த விபரங்கள் கணனிமயப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த தகவல்திரட்டின் மூலம் இழப்பீடுகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு சரியான தகவல்களை வழங்குவதுடன், மக்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக உரிய நஷ்டயீடுகளை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் வீடுகளை இழந்த வறிய குடும்பங்களுக்கு விசேட ஏற்பாடுகள் மூலம் உதவிகளை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

பின்தொடர்ந்த சிங்கள இளைஞர்கள்

பாதிக்கப்பட்ட இடங்களை மதிப்பீடு செய்வதற்காகச் சென்ற எங்களை பல இடங்களில் சிங்கள இளைஞர்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். நாங்கள் ஏன் வருகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அவதானித்துக் கொண்டிருந்தனர். ஏதோ நாங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் போன்றே, அவர்கள் எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் மூலம் நாங்கள் செல்லும் இடங்களுக்கு வந்து, எங்களை நோட்டமிட்டனர். இன்னும் சில இடங்களில் எங்களுக்கு வழிவிடாமல் முறைத்தபடி நின்றுகொண்டிருந்தனர். மேலும் சிலர் எங்களையும், எங்களது வாகனத்தையும் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் வந்த வேலைகளை செய்தோம்.

இவர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்து, இவர்கள் எப்படியானவர்கள், யார் இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. காரணமே இல்லாமல் அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு, இவர்களது மனங்களிலுள்ள முஸ்லிம்கள் விரோத மனப்பாங்கே காரணம் என்பதை யாரும் சொல்லாமலே உணர்ந்துகொண்டோம்.

இந்த விஜயங்களின்போது, ஊடகங்களுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் எம்மிடம் தெரிவித்த கருத்துகளையும் நேரில் கண்ட சம்பவங்களையும் தொகுத்து தருகிறோம்.

நிக்கவரெட்டிய, மில்லகொட பிரதேசத்திலுள்ள பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு செல்லும்போது, நாங்கள் இருந்த வீட்டுக்கு திடீரென இராணுவத்தினர் வந்து குவிந்தனர். எங்களை விசாரித்துவிட்டு, அந்த வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். ஏதும் ஆயுதங்கள் இருப்பதாக வதந்தி போயிருக்குமோ என்று யோசித்தோம். ஆனால் நடந்ததோ வேறு.

குறித்த பிரதேசத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் தனவந்தர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அவற்றை பங்கிடுவதை மாற்று சமூகம் வேறுவகையில் பார்க்கும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கி அங்கிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்கள். அயலிலுள்ள யாரோ ஒருவர் இதுகுறித்து இராணுவத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார். அதனால்தான் இராணுவத்தினர் வந்து வீட்டை சோதனையிட்டனர்.

இதுதவிர, இன்னும் சில பள்ளிவாசல்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாம் வேலைசெய்து சீவியம் நடத்துவோருக்கு இந்த நிவாரணப் பொருட்கள் ஆறுதலாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.


1 comment:

  1. தயவு செய்து சிங்களம் தெரிந்த சகோதரர்கள் பொருத்தமான ஆக்கங்களை சிங்களத்திற்கு மாற்றி சிங்கள மொழி ஊடகங்களில் பரப்புவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.