Header Ads



'ஈராக்கின் இறையாண்மையைக் குலைக்க, எந்நாடு நினைத்தாலும் அதனை வீழ்த்துவோம்'

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இராக்குக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடக் கூறினார்.
இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை டிரம்ப் அவரை வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இராக்குக்கு அமெரிக்கா அளித்து வரும் அனைத்து விதமான ஆதரவுகளும் தொடரும்.
இராக்கில் உள்ள பயங்கரவாதிகளை வீழ்த்த அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்பியது. அமெரிக்க வீரர்கள் அங்கு போயிருக்கவே தேவையில்லை என்ற கருத்து கூறப்படுகிறது.
ஆனால் முந்தைய ஆட்சியில் திடீரென வீரர்களைத் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டது. நமது பாதுகாப்புப் படையினரை அங்கு ஈடுபடுத்தியதற்கான காரணம் முற்றிலும் நிறைவேறாமல் அங்கிருந்து நாம் வெளியேறியிருக்கக் கூடாது. இதனால் அங்கு திடீரென வெற்றிடம் உருவாகியது. இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு தோன்றியது.
இது தொடர்பாக பிரதமர் ஹைதர் அல்-அபாதியுடன் விவரமாகப் பேசினேன். இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழுவைப் பூண்டோடு அழிப்பதே எனது லட்சியம். அதற்கான தாக்குதல் நடவடிக்கைகள்தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று டிரம்ப் கூறினார்.
இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை அழிப்பதில் அதிகத் தீவிரம் காட்டி வருகிறது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில், முந்தைய அரசுடன் ஒப்பிடும்போது, பெரும் வித்தியாசம் தெரிகிறது என்றார்.
டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தை ராணுவ பலத்தால் மட்டும் வென்றுவிட முடியாது. அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான செயல் திட்டங்களும் இணையும்போதுதான் முழு வெற்றி காண முடியும். அதற்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேற்கொள்ளும்.
மத்திய கிழக்குப் பகுதியில் அரசியல் ஸ்திரத்தன்மை நீடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இராக்கின் புனரமைப்பில் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையும் அடங்கியுள்ளது.
பயங்கரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அதனை எதிர்த்து அமெரிக்காவும் இராக்கும் இணைந்து போராடும். இராக்கின் இறையாண்மையைக் குலைக்க எந்த நாடு நினைத்தாலும் அதனை வீழ்த்துவோம்.
இராக்கின் இறையாண்மையையும் ஜனநாயக அமைப்புகளையும் தாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கா செயல்படாமல் இருக்காது. இஸ்லாமிய தேச பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா - இராக் இணைந்து வலுவாக எதிர்கொண்டுத் தோல்வியுறச் செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.