Header Ads



ஞானசாரரை தேரர் என்பதா..? சேர் என அழைப்பதா..??

ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கடந்த காலத்தில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு வந்தமையால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது இருந்த அரசாங்கமும் அதனை கண்டுகொள்ளவில்லை.

அதனால் நாட்டில் சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழி ஏற்படுத்தப்படவேண்டும் என்பதற்காக நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள்.

பொதுபல சேனா அமைப்பு மீண்டும் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதானியான ஞானசார தேரரின் செயற்பாடுகள் பெளத்த போதனைக்கே முரணானவையாகும்.

அத்துடன் அவர் சிறுபான்மை இன மக்களின் மத நம்பிக்கை சார் விடயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதானது புத்தரை அவமானப்படுத்தும் செயற்பாடாகும்.

அவரின் நடவடிக்கையை பார்க்கும்போது அவரை தேரர் என்று சொல்வதா அல்லது சேர் என்று சொலவதா என தெரியவில்லை.

அத்துடன் அண்மையில் என்மீது தாக்குதல் மேற்கொண்ட நபரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நாட்டை காட்டிக்கொடுக்கின்றாய், சிங்கள பிரதேசத்துக்கு நீ வரக்கூடாது என்று தெரிவித்தே என்னை தாக்க வந்தார்.

இந்த நபரும் பொதுபல சேனா அபை்பை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும். அத்துடன் இந்த பிரச்சினையை நீதி மன்றம் இணக்க சபையில் தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தமை ஆச்சரியமாகும்.

இன, மதவாத செயற்பாடுகளை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பொதுபல சேனா இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பு. அரசாங்கம் இவர்களை தொடர்ந்து இவ்வாறே விட்டு விட்டால் அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்வதிலும் பாரிய சிக்கலாகிவிடும்.

அத்துடன் இனவாதிகள் தற்போது நாட்டுக்குள் பகிரங்கமாக செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் மக்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இதற்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.