Header Ads



வடமாகாண சபையின், மனிதாபிமானமற்ற செயல் - ஜெயத்திலக எதிர்ப்பு

தமிழக முதலமைச்சருக்கு வடமாகாண சபையில் வடமாகாண முதலமைச்சர் ,வாழ்த்து தெரிவித்தமையை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயத்திலக  கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அமர்வு ஆரம்பமான போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயத்திலக,

அயல் நாட்டின் தமிழக தேர்தலில் வெற்றியீட்டிய ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்  முன்னர் இந்த நாட்டில் அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம்  தெரிவித்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனை ஆமோதித்த பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் , நாட்டில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பெருமளவான மக்கள் உயிரிழந்து உள்ளனர் அதே போல பலர் காணாமல் போயுள்ளனர் இன்னும் பலர் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றார்கள்.

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து , பிரார்த்திப்பதுடன , பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றோம். 

உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை செய்து கொண்டு இருக்கும் போது, நாம் வடமாகாண சபையினால் எந்த உதவிகளையும் இதுவரை செய்யவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பது வேதனை எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , அனர்த்தத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என கோர இருந்தேன்.

முதலில் முதலமைச்சர் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டு அடுத்ததாக அந்த மக்களுக்காக பிரார்த்தித்து , அனுதாபம் தெரிவிக்க  என நினைத்து இருந்தேன். 

அதற்குள் எதிர்கட்சி உறுப்பினர் ஜயத்திலக மற்றும் பிரதி அவைத்தலைவர் ஆகியோர் அதனை சுட்டிக்காட்டி உள்ளனர். என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.