Header Ads



பிரித்தானியாவில் அகதிகள், இல்லையென்றால்..?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அந்நாட்டில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில், ஐரோப்பியாவிலிருந்து பிரித்தானியா விலகினால் அது புலம்பெயர்ந்தவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழலில், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்கள் நுழைய முடியாவிட்டால், அல்லது அந்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டால் பிரித்தானியாவில் என்ன விளைவுகள் ஏற்படும் என அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இழப்பை சந்திக்கும் தேசிய மருத்துவமனைகள்

பிரித்தானிய பொது மருத்துவ கவுன்சில்(GMC) வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தில், இந்த நாட்டில் உள்ள தேசிய மருத்துவமனைகளில் பணிபுரியும் 37 சதவிகித மருத்துவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். மருத்துவர்கள் மட்டுமல்லாமல், 40 சதவிகித செவிலியர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தான்.

புலம்பெயர்ந்தவர்களும் பிரித்தானிய பொருளாதாராமும்

பிரித்தானியாவில் வெளிநாடுகளின் பின்புலம் கொண்ட சொந்த நிறுவனங்கள் சுமார் ஒரு சதவிகித அளவில் தான் பதிவு செய்யப்பட்டு தொழில்கள் நடந்து வருகிறது.

ஆனால், பிரித்தானிய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 3-ல் ஒரு பங்கு இந்த வெளிநாட்டினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் தான் ஈட்டப்படுகிறது.

புலம்பெயர்ந்தவர்களால் ஜொலிக்கும் பிரித்தானியா

பிரித்தானியாவில் பொது இடங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களில் 3-ல் ஒரு பங்கு வகிப்பவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தான்.

குறிப்பாக, பிரித்தானிய தலைநகரான லண்டன் மாநகரின் நிலத்திற்கு கீழ் துப்புரவு பணிகளில் ஈடுப்பவர்களில் 95 சதவிகிதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

கற்பனை செய்து பாருங்கள். இந்த புலம்பெயர்ந்தவர்கள் பிரித்தானியாவில் இல்லாவிட்டால், அந்நாடு மோசமான சுற்றுப்புற சீர்கேட்டை எதிர்க்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

உணவு உற்பத்தியில் புலம்பெயர்ந்தவர்கள்

பிரித்தானிய நாடு முழுவதும் நடைபெறும் உணவு உற்பத்தியானது 40 சதவிகித புலம்பெயர்ந்த பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, பிரித்தானியாவில் உள்ள ஒட்டு மொத்த உணவு உற்பத்தி நிறுவனங்களில் 50 சதவிகித நிறுவனங்கள் புலம்பெயர்ந்தவர்கள் நடத்தக்கூடிய நிறுவனங்களிடம் தான் உணவுகளை பெற்று வருகின்றன.

ஹொட்டல்கள்

பிரித்தானியாவில் இயங்கிவரும் அனைத்து ஹொட்டல்களும் வருடத்திற்கு 2.5 பில்லியன் பவுண்ட் முதல் 3.6 பில்லியன் பவுண்ட் வரை வருமானம் ஈட்டப்படுகிறது.

இந்த வருமானத்தின் பெரும் பகுதி இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டினர்கள் நடத்தி வரும் ஹொட்டல்கள் மூலம் தான் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாது உண்மை.

இதுமட்டுமில்லாமல், பிரித்தானிய ஹொட்டல்களில் பணியாற்றி வரும் தலைமை சமையல் நிபுணர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான்.

கல்லூரிகளில் வெளிநாட்டினர்கள்

பிரித்தானியாவில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயின்று வருகின்றனர்.

2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிபரத்தில், லண்டன் பல்கலைக்கழகத்தில் மட்டும் பயிலும் வெளிநாட்டினர்கள் மூலம் கட்டணம் என்ற அடிப்படையில் அந்நாட்டிற்கு வருடத்திற்கு 2.3 பில்லியன் பவுண்ட் வருமானம் கிடைக்கிறது.

பிரித்தானிய அரசு பல்கலைக்கழக கல்வி கட்டணத்தை ஏற்கனவே 3,000 பவுண்டில் இருந்து 9,000 பவுண்டாக அதிகரித்துள்ள நிலையில், இந்த வருமானத்தை இழக்க அரசு முயலாது என்பது தான் நிதர்சனம்.

புலம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றால் வரி அதிகரிக்கப்படும்

பிரித்தானிய நாட்டின் பட்ஜெட் பொறுப்பு அலுவலகம் அரசுக்கு அண்மையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ‘பிரித்தானிய நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்தால், குடிமக்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டிய சூழலுக்கு அரசாங்கம் தள்ளப்படும்’ எனக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரித்தானிய குடிமக்கள் மீது விதிக்கப்படும் வரி அதிகரிப்பதும் குறைப்பதும் அந்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் கையில் உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை.

பண்பாடு, கலாச்சார வளர்ச்சி

பிரித்தானியாவில் உள்ள Shoreditch, Chinatown, Brick Lane, Hackney உள்ளிட்ட பகுதிகள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களோடு பிண்ணி பினைந்துள்ளது. இவைகள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று வருகிறது.

இதன் பின்னணியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் உள்ளதுடன், அவர்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களும் சேர்ந்துள்ளது தான் மேலே குறிப்பிட்டுள்ள பிரித்தானியா பகுதிகள்.

விஞ்ஞானத்திலும் புலம்பெயர்ந்தவர்களின் பங்கு

பிரித்தானியா நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த விஞ்ஞானிகளின் பங்கு மிகுந்தளவில் உள்ளது. இதனை அரசுக்கு வலியுறுத்தும் வகையில், ’பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்காவிட்டால், அறிவியல் துறையில் பிரித்தானியா பின்னோக்கி சென்று விடும்’ என நோபல் பரிசு பெற்ற 8 விஞ்ஞானிகள் பிரித்தானியா அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறை மட்டும் என்ன விதி விலக்கா?

பிரித்தானியாவில் உள்ள ஒட்டுமொத்த துறைகளிலும் காலூன்றி வெற்றி வாகை சூடி வரும் புலம்பெயர்ந்தவர்கள் அந்நாட்டு விளையாட்டு துறையிலும் சாதித்து வருகின்றனர்.

குறிப்பாக, கால்பந்து போட்டியில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ரியா மஹரேஷ் என்பவர் இந்தாண்டுக்கான PFA Player of The Year என்ற பட்டத்தை வென்று பிரித்தானிய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களால் எப்படி வல்லரசு நாடான அமெரிக்கா உருவானதோ, அதேபோன்று உலகில் உள்ள பல நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த பிரித்தானிய நாட்டின் தற்போதைய பொருளாதார, சுகாதார வளர்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை மறுக்க முடியாது.

ஐரோப்பாவை விட்டு பிரித்தானியா பிரிந்தால் அந்நாட்டிற்கு எப்படி பொருளாதார நெறுக்கடி ஏற்படுமோ, அதேபோல் புலம்பெயர்ந்தவர்கள் இல்லாவிட்டால் பிரித்தானியாவின் எதிர்காலம் மோசமானதாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

No comments

Powered by Blogger.