Header Ads



பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் றிசாத்தும், ஹக்கீமும் மும்முரம்


1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, அகதிகளாகி கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸினால் துப்பரவு நடவடிக்கை : அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு


மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (26) காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல ஆகிய இடங்களில் ஆரம்பித்துள்ளனர். இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமும் வருகை தந்திருந்தார்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷத் நிசாம்தீன், அவரது செயலாளர் ரியாஸ் கபூர், உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டன. 

இதில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண குழுவினர் பகுதிப் பகுதியாகப் பிரிந்து வீடுகளையும், பாதைகளையும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வேலைப்பழுவுக்கு மத்தியிலும் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அம்பத்தல பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றிருந்தார். 

இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முஸ்லிம் காங்கிரஸ் அனர்த்த நிவாரண இளைஞர் அணியினரால் அடுத்துவரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments

Powered by Blogger.