Header Ads



அமெரிக்காவுக்கு புதிய ஜனாதிபதி வேண்டாம் - கதறியழும் குழந்தை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவிக்காலம் நிறைவடைந்ததும் பதவி விலக வேண்டும் என்பதை கேள்வியுற்ற சிறுமி ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்றை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

பராக் ஒபாமா அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற செய்தி அவரது குட்டி ரசிகையின் காதுகளுக்கு இப்போதுதான் எட்டியுள்ளது.

இதைக் கேள்விப்பட்டது முதல் அந்த சிறுமி அழும் வீடியோவை அலாபாமாவை சேர்ந்த அவரது பாட்டி கப்ரீனா ஹரிஸ் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.

`பராக் ஒபாமா அதிபர் பதவியில் தொடர்ந்தும் இருக்கமாட்டார் என்பதை எமது குழந்தை அறிந்து கொண்டது. அவரது வாழ்நாள் முழுவதும் பராக் ஒபாமாவே அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். அவளது பிறந்த நாளும் ஆகஸ்ட் 4 இல் வருகிறது', என்ற தகவலுடன் அந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

`பராக் ஒபாமா பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார், நான் புதிய அதிபரை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை', என அச்சிறுமி சொல்லி அழுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை கிட்டத்தட்ட 2,750,000 பேர் பார்வையிட்டிருந்ததுடன் அந்த சிறுமிக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமான கருத்துக்களும் பதிவிடப்பட்டிருந்தன.

`சரித்திரத்திலே மிகவும் மோசமான அதிபர் ஒருவர் பதவி விலகுவதை நீ ஏன் விரும்பவில்லை' என்ற எதிரான கருத்து ஒன்றும் அந்தப் பதிவில் இருந்ததைக் காண முடிந்தது.

ஆனாலும் சிறுமியை ஆறுதல்படுத்தும் வகையில் வீடியோவிற்கு பாராக் ஒபாமாவும் பதில் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

`சிறுமியை கண்ணீரைத் துடைக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எங்கும் போகப் போவதில்லை. நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும் நான் அவளைப்போல ஒரு அமெரிக்க பிரஜையாக இங்கேதான் இருப்பேன். அவள் வளர்ந்ததும் என்னுடன் சேர்ந்து வேலை செய்யலாம். அவளது கடிதங்களுக்காக காத்திருப்பேன். நாம் எமது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடுவோம்', என ஒபாமா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.