Header Ads



"கேள்விக்குறியான ஐ-போன் பாதுகாப்பு" - அமெரிக்காவுக்கு உதவிய இஸ்ரேல்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியவரின் "ஐ-போனு'க்குள் ஆப்பிள் நிறுவனத்தின் உதவியில்லாமலேயே எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு ஊடுருவியுள்ளது 'ஐ-போன்'  மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட தம்பதி நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட ரிஸ்வான் ஃபரூக், தஷ்ஃபீன் மாலிக் ஆகியோர் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ரிஸ்வான் ஃபரூக்கின் "5-சி' ரக ஐ-போனில் உள்ள பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பெற அந்த நாட்டின் எஃப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு முயற்சி செய்தது. எனினும், அந்த செல்லிடப் பேசிக்குள் ஊடுருவுவது அந்த அமைப்பின் நிபுணர்களுக்கு சிரமமாக இருந்தது. இதையடுத்து, ஐ-போனுக்குள் ஊடுருவும் மென்பொருளை உருவாக்கும்படி, அதன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், தங்களது தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்களுக்குள் ஊடுருவக் கூடிய மென்பொருளை உருவாக்குவது ஆபத்தானது எனவும், உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கான ஐ-போன் உரிமையாளர்களின் தனியுரிமைக்கு அந்த மென்பொருளால் ஆபத்து ஏற்படும் எனவும் கூறியது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி இணையதள நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன.

இது தொடர்பாக எஃப்.பி.ஐ.க்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் இடையே வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்குவதற்கு 24 நேரத்துக்கு முன்னதாக, "ஐ-போனை ஊடுருவ ஆப்பிள் நிறுவனத்தின் உதவி எஃப்.பி.ஐ.க்குத் தேவையில்லை' என்று அமெரிக்க அரசு தெரிவித்தது.

இதுகுறித்து சட்டத்துறை செய்தித் தொடர்பாளர் மெலனி நியூமன் கூறுகையில், மூன்றாம் நபர் அளித்த ஆலோசனையின் அடிப்படையில், சான் பெர்னார்டினோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் ஐ-போனை எஃப்.பி.ஐ. வெற்றிகரமாக ஊடுருவியது. அதிலிருந்து கிடைத்த தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எஃப்.பி.ஐ-க்கு உதவுமாறு ஆப்பிள் நிறுவனத்தை இனி கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் அதற்கான சட்டரீதியிலான முயற்சி கைவிடப்படுகிறது என்றார் அவர்.

இஸ்ரேல் உதவியதா?

இஸ்ரேல் நாட்டை தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் 'செலிபிரட்டி' அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.க்கு உதவியதாக, இஸ்ரேல் நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தகவல்களை பெற 'செலிபிரட்டி' நிறுவனத்தைத் தொடர்புக் கொண்டபோது, உரிய தகவல்களை தருவதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

எனினும், அந்நிறுவனத்தின் இணையதளத்தில் "5-சி' ரக ஐ-போனிலிருந்து தகவல்களை பெறுவதற்கான ஒரு 'செயலி' தங்களிடம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்விக்குறியான பாதுகாப்பு

உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகும் ஐ-போன்கள் அதிலிருக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்காகவே வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இந்நிலையில் எஃப்.பி.ஐ, அந்த பாதுகாப்பை உடைத்துள்ள செயல், ஐ-போன் குறித்த பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.

2 comments:

  1. இஸ்ரவேல் உதவினாலும், யார் உதவினாலும் இதில் தப்பே இல்லை. பயங்கரவாதிகள் (இஸ்ரவேல் உட்பட) அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    வெல்டன். மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. If Apple is protecting everybodies data irrespective of whether they are criminals or terrorists, the company should be prosecuted for doing so. my opinion is Apple should have set an example by giving the access voluntarily to the law enforcement agencies in this case, so that it would set a precedence to the other tech companies also a warning to the criminals. I don't mind where the company is based or by whom it is owned.

    ReplyDelete

Powered by Blogger.