Header Ads



பொதுமக்களை இலக்கு வைப்பவர்கள், மனிதர்கள் என்று அழைப்பதற்கு தகுதியற்றவர்கள்

பாகிஸ்தானில் சிறுவர்கள் உட்பட 70க்கும் அதிகமானோரை பலிகொண்ட லாஹுர் பூங்கா தற்கொலை தாக்குதலுக்கு தலிபான்களில் இருந்து பிரிந்த குழுவொன்று பொறுப்பு கோரியுள்ளது.

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபடும் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஜமாதுல் அஹ்ரார் என்ற குழு குறிப்பிட்ட போதும், தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த பயங்கர தாக்குதலை அடுத்து சம்பவ இடம் பெரும் கொடூரத்திற்கு முகம்கொடுத்ததோடு பெற்றோர்கள் சேதங்களுக்குள் தமது குழந்தைகளை தேட ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி கண்டனம் வெயிட்டதோடு பிராந்திய அரசு மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தது. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 300 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிர்ப்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

பிராந்தியத்தில் பிரதான மருத்துவமனைகள் அனைத்திலும் அவசர நிலை அமுலுக்கு வந்துள்ளது.

இலகுவான இலக்கு

பாகிஸ்தானில் மிதவாத மற்றும் செல்வந்த நகரங்களில் ஒன்றாக லாஹுர் பார்க்கப்படுகிறது. பாக். பிரதமர் நவாஸ் ஷரீபின் அரசியல் தளமாக இருக்கும் இந்த நகரில் ஒப்பீட்டளவில் அண்மைய ஆண்டுகளில் குறைவான தீவிரவாத தக்குதலுக்கு இலக்கான பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜமாதுல் அஹ்ரார் குழுவின் பேச்சாளர் ஒருவரான எஷானுல்லா எஹ்ஸா குறிப்பிடும்போது, தாம் லாஹுருக்கு வந்துவிட்ட செய்தியை ஷரீபுக்கு வழங்கி இருக்கிறோம் என்றார். அங்கு மேலும் தாக்குதல்களை நடத்துவது குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜமாதுல் அஹ்ரார் பாகிஸ்தானின் தஹ்ரிக்கே தலிபான்களில் இருந்து பிரிந்து சென்ற குழுவாகும். இந்த குழு அண்மைய மாதங்களில் பாகிஸ்தானில் சிவிலியன்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

அப்பாவி உயிர்களின் மறைவுக்கு வருத்தம் மற்றும் சஞ்சலம் கொள்வதாக நவாஸ் ஷரீப் தனது கவலையை வெளியிட்டுள்ளார். அவர் தனது பிரிட்டன் பயணத்தையும் ஒத்திவைத்துள்ளார்.

குலான் இக்பால் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதிக்கு அருகில் இருக்கும் பிரதான பிரதான நுழைவாயில் பகுதியில் முன்மாலை வேளையில் குண்டு வெடித்துள்ளது. இதன் தற்கொலைதாரியே இந்த குண்டை வெடிக்க செய்திருப்பதாக நம்பப்படுகிறது.

வெடிபொருளில் அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் இரும்பு குண்டுகளும் நிரப்பப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாஹுரின் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் குறித்த பூங்காவில் வழமையை விடவும் மக்கள் அதிகம் இருந்துள்ளனர்.

டனிஷ் என்று பெயர் குறிப்பிட்ட ஒருவர் அளித்த தகவில், தாம் பூங்காவுக்கு வரும்போது அங்கு உள்ளே நுழைய முடியாத அளவும் மக்கள் நிரம்பி வழிந்ததாக தெரிவித்துள்ளார். “ஏதாவது சாப்பிடவென்று நாம் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றோம். அப்போது திடீரென பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டது” என்று அவர் ராய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

“அனைவரும் பீதியில் நாலாபக்கமும் ஓட ஆரம்பித்தார்கள். பலரும் பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சிக்கிக் கொண்டனர். அனைத்து பக்கமும் இறந்த சடலங்கள் இருந்தன” என்றும் அவர் விபரித்துள்ளார்.

நகர வாசியான 30 வயது ஹஸன் அம்ரான் என்பவர் ராய்யட்டர்ஸுக்கு குறிப்பிடும்போது, “குண்டு வெடித்தபோது தீப்பிளம்பு மரங்களை விடவும் உயர எழுந்தது. சடலங்கள் பறந்து விழுவதை நான் கண்டேன்” என்றார்.

பாகிஸ்தான் ஜியோ தொலைக்காட்சிக்கு ஒருவர் குறிப்பிட்ட தகவலில், திறந்த வெளியில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பாரிய வெடிப்பு எம் அனைவரையும் கிழே தூக்கி விழச்செய்தது என்றார்.

இதன்போது தாம் 20 சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பெயர் குறிப்பிடாத ஒருவர் ஏ.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். “இந்த கொடூரமான நிலையை என்னால் விபரிக்க முடியாது” என்றார்.

இந்த பூங்கா ஆயுததாரிகளின் இலகுவான தாக்குதல் இலக்கு என்று பொலிஸ் பிரதானி ஹைதர் அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் யுத்தத்தை போன்ற நிலையை சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் முதலமைச்சர் தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “கோழைகளால் எமது குழந்தைகளின் இரத்தம் சிந்தப்படும் அவலத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களை இலக்கு வைப்பவர்கள் மனிதர்கள் என்று அழைப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கும் அவர் பாகிஸ்தான் தீவிரவாத கட்டமைப்பை முற்றாக அழிக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த தாக்குதலை, அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், குற்றவாளிகள் விரைவாக நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

தலிபான்களுடன் தொடர்புபட்ட வன்முறைகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. What motivates these suicidal attacks against civilians? The philosophy behind should be identified and the illiterate youth should be educated about the fallacy.

    ReplyDelete

Powered by Blogger.