Header Ads



“ஆசிரியர் தினம்”

-ஜே .எம் .வஸீர்-

வருடம் முழுவதும் எத்தனையோ விஷேட நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர்.இன்றைய இயந்திரதனமான, போட்டிகள் நிறைந்துவிட்ட இவ்வுலகில் ஒரு மாணவனை தலைசிறந்த மாணவனாக மாற்ற ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது.  மாணவர்களுக்கு அன்பான, அழகான முறையில் படிப்பின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூற வேண்டும்.

ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இருக்கும் அதை அந்த மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். ஒரு மாணவனை ஒழுக்கமுள்ளவனாகவும், நல்ல சிந்தனை உள்ளவனாகவும், கண்ணியமானவனாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்கள் தங்களுடைய அறிவையும், பொன்னான நேரத்தையும், மேலான உழைப்பையும் முதலீடு செய்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவை பெருக்குவதில் ஆசிரியர்கள் உந்துசக்தியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முறையான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

சமீப காலமாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைகாட்சி வாயிலாகவும் பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களின் பாலுணர்வை தூண்டும் நடவடிக்கைகள், மாணவ சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குழைக்கும் விதமாகவும் உள்ளது.இந்த நிலை தொடருமேயானால் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்கத்தை பேணாதவர்களும் அதிகரித்து நாட்டின் வளர்ச்சி என்பது பாரதூரமான விஷயமாக மாறிவிடும்.

ஆசிரியர் மாணவர் உறவு:

மாணவர்கள்  ஆசிரியர்களின்  இடையில்  முன்னைய  காலத்தில்  நெருங்கிய  மதிப்பும்  மரியாதையும்  காணப்பட்டது .உதாரணமாக  பாதையால்  ஒரு  ஆசிரியர் போகும்  போது  மாணவன்  அவரை  கண்டால்  மாணவன்  சென்ற துவிச்சக்கர  வண்டியிலிருந்து  இரங்கி  செல்வது தான்  மரபு .ஆனால்  இன்றைய  நிலை அவ்வாறில்லை .இறங்கி  செல்லாவிட்டாலும்  மாணவர்கள்  ஆசிரியர்களுக்கு  உரிய  மரியாதை வழங்குகிரார்களா ? என்பது  கேள்விக்குறியாகவே  உள்ளது . இது  அருகிப்போனமைக்கு  காரணம்  என்ன? .அதனையும்  தேட வேண்டும் அவ்வாறு மரியாதையில்லாமல் எல்லா  மாணவர்களும்  இல்லை ஒரு சில மாணவர்களின் செயற்ப்பாடு  முழு மாணவ  சமுதாயத்தையும் பாதிக்கிறது .அதே  போன்று  சில ஆசிரியர்களின்  பிழையான  நடவடிக்கை  முழு ஆசிரிய   சமுதாயத்தையும்  பாதிக்கிறது .வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் மாறாக வகுப்பறைகள் மாணவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் இடமாக காட்ச்சியளிக்ககூடாது.

சில ஆசிரியர்களின் அக்கறையற்ற தண்டனைகளால் அன்பு கலந்த கண்டிப்புகள் குறைந்து ஆசிரியர்களை மாணவர்கள் ஒரு எதிரியாக பாவிக்கக்கூடிய சூழல் வளர்ந்து வருகிறது. இதனால் அந்த மாணவன் ஆசிரியரை மட்டும் வெறுக்காமல் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தையும், பள்ளியையும் வெறுக்கக்கூடிய சூழல்கள் அதிகரிக்கிறது.மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறிவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

“ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் 
தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றார். அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன் இவ்வாறு பதில் கூறினான் “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்.”

ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய் மகன் உறவு போன்றது, ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாலோ அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும் போது தான் ஆசிரியர் மாணவர் உறவு என்பது வலுப்பெறும். மேலும் மேம்பட்ட கற்பித்தல் திறனும் ஆசிரியர் மாணவர் உறவுக்கு வலு சேர்க்கும்.

ஆசிரியர்கள்  மாணவர்களை  புரிந்து
மாணவர்கள் ஆசிரியர்களை  புரிந்து
இருவருக்குமிடையில்  மேலும்  நல்லுறவு  மலர்ந்து
அதனூடாக  நாட்டில்  சுபீட்ச்சமான  எதிர்காலம்  மலர
பிரார்த்திப்போமாக.......
ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

1 comment:

  1. வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி அந்நாளில் கொண்டாடப்படுவதால் மட்டும் ஆசிரியர்களின் மாட்சிமையும் முக்கியத்துவமும் ஓங்கிவிடப்போகின்றதா என்ன..?

    மற்ற நாட்களிலெல்லாம் வருத்தி வேலைவாங்கிய பின்பு பொங்கலுக்கு மறுநாளில் குளிப்பாட்டி பொட்டுவைத்து பூச்சரமிட்டு மாடுகளைக் கொண்டாடுவதற்கும் வருடத்தின் 364 நாட்களிலும் ஆசிரியர்களுக்குரிய கவுரவத்தை சரியாகத் தராது அலட்சியம் செய்பவர்களும் அக்டோபர் 6ம் நாளில் சடங்குத்தனமாக அவர்களைப் புகழ்வதற்கும் என்ன வித்தியாசமுள்ளது.

    மாடுகளுக்கு தாம் விலங்குகள் என்பதால் கொண்டாடப்படுவதின் பின்னுள்ள கபடம் புரிவதில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு அவ்வாறில்லையே..

    எனது நண்பர் ஒருவரின் ஆசிரியர் தினம் பற்றிய கவிதையின் பகுதியைப் படித்துப்பாருங்கள்:


    "ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
    தூசுதட்டும் நாளின்று
    எரிந்து கரையும் தீபங்களுக்கு
    ஓர் அவசரத் திருநாளின்று!

    &&

    நாட்கள் தோறும் மாறுசெய்து
    வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்
    தவணைமுறையில் தன்மானந்தீண்டி
    ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்

    &&

    ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
    தூசுதட்டும் நாளின்று
    எரிந்து கரையும் தீபங்களுக்கு
    ஓர் அவசரத் திருநாளின்று!

    &&

    அத்தனையும் அழகாய்ச் செய்து
    ஆண்டிலொரு நாளில் மட்டும்
    தோள்வலிக்க மாலையிட்டு
    கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னால்
    ஆசானுக்கு அதுதான் கௌரவமா?

    &&

    ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
    தூசுதட்டும் நாளின்று
    எரிந்து கரையும் தீபங்களுக்கு
    ஓர் அவசரத் திருநாளின்று!"



    ReplyDelete

Powered by Blogger.