Header Ads



எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் - மைத்திரியும் பச்சைக் கொடி..?


32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனம் நாளை மறுநாள் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது.

எனவே அதற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொண்டிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் எதிர்வரும் 3ஆம் திகதியன்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார்.

இதேவேளை இதற்கான ஒப்புதலை ஜனாதிபதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.வி.பியும் இந்த நிலைப்பாட்டுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால், அது 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.