Header Ads



பாராளுமன்றத்தில் இன்று, என்ன நடைபெற்றது (வீடியோ இணைப்பு)


இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மும்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார்.

இதன்படி, சபாநாயகராக கரு ஜெயசூரிய தமது பதவியை ஏற்றுக்கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சத்தியப்பிரமாணங்களை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது உரையில், இந்த புதிய நாடாளுமன்றத்தின் ஊடக பல துறைகளில் புனர்நிர்மாணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து முன்னாள் எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா உரையாற்றினார்.

19வது அரசியல்  அமைப்பு சீர்திருத்தின் ஊடாக, நாடாளுமன்றத்தை முன்னரை விட வலுப்பெற்றதாகவும் பொது மக்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய ஸ்தாபனமாக மாற்றவும் எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

8வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றினார்.

நாட்டின் தீர்க்கமான ஒரு தருணத்தில் புதிய நாடாளுமன்றம் கூடியுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த வரிசையில், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கிம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், மனேகனேஷன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முத்துசிவலிங்கம், ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை முஸ்லிம் கோங்கிரசின் தலைவர் றிசாட் பதியூர்தீன், புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து, பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டார்.

இவரது பெயரை நிமல்சிறிபாலடி சில்வா முன்மொழிய, ரவுப் ஹக்கிம் அதனை வழிமொழிந்தார்.

குழுக்களின் பிரதி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், சபை முதல்வராக மீண்டும் லக்மன் கிரியல்லவும், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்

No comments

Powered by Blogger.