Header Ads



என்னை தோற்கடிக்க SLMC முயன்றும், அதிகூடிய வாக்குகளினால் வெற்றிபெற்றேன் - தயா கமகே

(சுலைமான் றாபி)

கடந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின் பிற்பாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பாராளுமன்றத்தினை முழு அரசாங்கமாக மாற்றுவதுதான் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமான்ற உறுப்பினர் தயா கமகே நேற்று (29) நிந்தவூரின் ஐ.தே.க அமைப்பாளர் எம்.எம்.எம். றிபாக் தலைமையில் இடம்பெற்ற வாக்களித்த மக்களுக்கு  நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்,

கடந்த தேர்தல்களில் ஒரு நல்லாட்சி வேண்டி முஸ்லிம் மக்கள் ஒட்டு மொத்தமாக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக இணைந்து கொண்டார்கள். இந்த வெற்றிகளின் மூலம் தற்போது நாட்டில் நிம்மதியாக அனைத்து சமூகமும் வாழக்கூடிய சிறந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலானது திகாமடுல்ல மாவட்டத்தில் ஒரு வரலாற்று நிகழ்வினை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக என்னை தோற்கடிக்க வேண்டும், எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்தலுக்கு இறுதி இரண்டு நாட்களும் முஸ்லிம் காங்கிரசினால் பலமுனைப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் மூவின மக்களும் சேர்ந்து அதனைத் தோற்கடித்து  அதி கூடிய விருப்பு வாக்குகளை வழங்கினார்கள். இதன் மூலம் அனைத்து இன மக்களும் என் மீது வைத்த நம்பிக்கை இன்னும் உறுதியானது. எனவே இந்த நம்பிக்கைகளை நான் ஒரு போதும் துஸ்பிரயோகம் செய்ய மாட்டேன்.

அம்பாறை மாவட்டத்தில் இன, மத பேதமின்றி எதிர்வரும் காலங்களில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய முக்கியமான பொறுப்பு என்னுடையது. ஆண்கள் மட்டும் சம்பாதித்து வாழ்கை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படும் போது,  நன்றாகப்படித்து வீடுகளில் முடங்கிப்போயுள்ள பெண்களுக்கும் அரச அங்கீகாரத்துடன் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் பிரதமராலும், அனோமா கமகேயினாலும் ஏற்படுத்திக்  கொடுக்கப்படும்.

எதிர்வரக்கூடிய தேர்தல் காலங்களில் சிறந்த திட்டங்களை வகுத்து ஐ.தே.கட்சியின் மூலமாக திகாமடுல்ல மாவட்டத்தினை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட முன்வர  வேண்டும். ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ள வந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் எல்லோரும் மக்களை சுபீட்சமாகவும், சந்தோஷத்துடனும் வாழ வைக்க வேண்டும் என்பதில் சிந்தித்து செயலாற்றக் கூடியவர்களே எமது கட்சியில் உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.

2 comments:

  1. தலைவா நீங்கள் நீடூழிகாலம் வாழ்க

    ReplyDelete
  2. Action please...wish you all the best.

    ReplyDelete

Powered by Blogger.