Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பேச வரும்படி, ஜனாதிபதி மைத்திரி அழைப்பு


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டத்தில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளே கோரிக்கை விடுத்திருந்ததாக, சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்துடனும் இணைகின்ற நிலையில், எதிர்கட்சியாகவும் செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விமல் வீரசன் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, எதிர்கட்சித் தலைவராக யார் பதவி ஏற்க வேண்டும் என்பது, எதிர்வரும் முதலாம் திகதி தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

கூட்டமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிகபடியான ஆசனங்களைப் பெற்ற இரண்டு கட்சிகள் கூட்டிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கின்றன.

தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு அங்கம் ஆதலால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் எதிர்கட்சியாக செயற்பட முடியது.

இவற்று அடுத்தபடியாக, இலங்கை தமிழரசு கட்சியே நாடாளுமன்றத்தில் அதகபடியாக 16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படி இலங்கை தமிழரசு கட்சியின் குழுத் தலைவர் என்ற அடிப்படையில், இரா.சம்பந்தனுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். 

நாட்டில் அனைத்தின மக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், இந்த விடயத்திலும் அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் துமிந்த திஸாநாயக்கவை கேட்ட போது, எதிர்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரிமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

எனினும் முதலாம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, எதிர்கட்சியாக செயற்படும் எந்த கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, இந்த கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.