Header Ads



கொழும்பு முஸ்லிம்களை, முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டுவிட்டதா..?

-rs mahi-

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்று முடிந்துள்ள 8 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளால் முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வேறு சில சிறுபான்மைக் கட்சிகள் தலைத்தூக்கியுள்ளதைக் காணலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறுபான்மை சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும் என மு.கா.  எதிர்பார்த்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பவற்றின் எழுச்சி அதற்குச் சவாலாக அமைந்துள்ளன. 

இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்துக்கு அதிகபட்சமான சிறுபான்மை அங்கத்தவர்கள் தெரிவாகியுள்ள தேர்தல் இதுவாகும். 48 சிறுபான்மை உறுப்பினர்களில் 21 முஸ்லிம் பிரிதிநிதிகள் என்பது பெரும் சாதனையாகும்.

எதிர்பார்த்த இலக்கை இம்முறை மு.கவினால் அடைந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக கட்சித் தலைமையைக் குற்றம் சாட்டுவது  பிழையான அனுகுமுறையாகும். அதன் சாணக்கியத்தினாலேயே இருந்ததைப் பாதுகாக்க முடிந்துள்ளது எனலாம். அது மட்டுமல்லாது, கடந்த காலங்களில் கட்சிப் பிளவை ஏற்படுத்தக் கூடிய உட்பூசல்கள் கட்சிக்குள் வெடித்திருந்தாலும்  தலைமையின் சாணக்கியத்தினால் அவை தடுக்கப்பட்டிருந்ததை எம்மால் காணமுடிந்தது. உதாரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டிருந்ததுடன், மஹிந்தவுக்கு வக்காளத்து வாங்கிய சிலரை அடக்கி மைத்திரிக்கு ஆதரவு வழங்கியதைக் குறிப்பிடலாம். 
எனினும், தலைமைத்துவத்தின் சில தீர்மானங்கள், இல்லாத பிரச்சினையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன. 5 ஆசனங்களையே வெற்றி கொண்ட மு.காவுக்கு இரு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், மு.கா. தலைமைத்துவம் தமது  சகோதரரின் பெயரை உள்வாங்கியுள்ளதைக் குறிப்பிடலாம். 

கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரை குறுகிய காலத்துக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்து இடமளிப்பர் என நியாயம் கூறினாலும், கட்சிப் போராளிகள் மீது தலைமைக்கு நம்பிக்கையில்லாமையினாலா தனது சகோதரரின் பெயரை உள்வாங்க வேண்டும்? ‡  என்ற கேள்வியும் எழுகின்றது. 

மு.கா. ஆரம்பிக்கப்பட்டது முதல் தமது இரத்தங்களை வியர்வையாகச் சிந்தும் உண்மையான போராளிகளை இழிவுபடுத்தும் வகையிலும் அவர்களது நம்பிக்கைகக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையிலுமே அத்தீர்மானங்கள் அமைந்துள்ளன.

வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் ஆசனங்களை இழந்துள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரும் படுதோல்வியடைந்துள்ளார். இவ்வாறான நிலையில் மு.கா. கிழக்குக்கு வெளியே ஓர் ஆசனத்தை மாத்திரமே பெற்றிருந்ததுடன் அதுவும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டமையினாலேயாகும். 

இதேவேளை, மு.காவுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் அ.இ.ம.கா. அநுராதபுரம், வன்னி, புத்தளம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்ததன் முலமே அதன் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

மு.காவின் கோட்டைக்குள் சவால்விடுத்த அ.இ.ம.கா. 30ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்றிருந்தது. 

தெற்கில் செல்வாக்கு இழந்துவரும் முஸ்லிம் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு  பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சபீக் ரஜாப்தீனை களமிறக்கியிருந்ததுடன் அவர் தோல்வியடைந்தமையால், இம்முறை பொதுத் தேர்தலில் எவரையும் களமிறக்காது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. 

மு.கா. என்றவுடன் அதனைக் கிழக்கு மாகாண அரசியல் கட்சியாகவே நோக்குகின்றனர். கிழக்கு மாகாணத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு மு.கா. தலைமை தீர்மானங்களை எடுப்பதனாலேயே அவ்வாறான கருத்து முஸ்லிம்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளன. 

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுக்காது மு.காவினால் தமது கட்சியைப் பாதுகாக்க முடியாது. அதனாலேயே மஹிந்தவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தபோதிலும் தேர்தல் என்று வரும்போது யானையின் பக்கம் குரங்கு போல் மு.கா.  தாவியிருந்தது.  இல்லையயனில், தெற்கில் தனித்துப் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையாவது வெற்றிகொள்வது என்பது பகல் கனவாகும். 

இருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் ஒரு காலத்தில் மு.கா. கொடிகட்டிப் பறந்ததை எவரும் மறக்க மாட்டார்கள். 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் 6 ஆசனங்களைத் தனியாக மரச்சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியிருந்தது. என்றாலும், அதன்பின்னர் படிப்படியாக மு.காவின் ஆதிக்கம் கொழும்பில் குறைவடையத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு 4 மாநகர உறுப்பினர்களைக் கைப்பற்றிய மு.காவினால் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 2 ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது. 

அடிமட்ட அரசியலிலேயே பாரிய பின்னடைவைச் சந்தித்த மு.கா. மேல் மாகாண சபையிலும் அதன் அதிகாரத்தைத் தாக்கிப்பிடிக்கமுடியவில்லை. 3 உறுப்பினர்களை மேல் மாகாணத்தில் கொண்டிருந்த மு.கா. இறுதியாக இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் இரண்டு ஆசனங்ளையே கைப்பற்றியிருந்தது. அதில் கொழும்பு மாவட்டத்தையும், கம்பஹா மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

தெற்கில் மு.காவின் பின்னடைவுக்கு மாவட்டக் கிளைகளில் காணப்படும் குறைபாடுகளா காரணம்? அல்லது  பிரதேச ரீதியில்  தலைமை போடும் தப்பான கணிப்புகளா காரணம்?

தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்ற கொழும்பு வாழ் முஸ்லிம்களுக்கு கடந்த 20 வருட காலமாக எந்தவித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. அவர்களது பொருளதாரத்துக்குத் தடைகளைப் போட்டது மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு இனவாதச் செயற்பாடுகளை அரங்கேற்றிய கடந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் உறவு கொண்டாடி வந்த போதிலும்,  மேல்மாகாண சபைத் தேர்தலில் மு.கா. மற்றும். அ.இ.ம.க. என்பன தனித்துப் போட்டியிட்டிருந்ததுடன் கொழும்பு முஸ்லிம்கள் ஆதரித்து இரு கட்சிகளிலிருந்தும் ஒவ்வொரு உறுப்பினர்களை மாகாண சபைக்கு அனுப்பியிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களின் போது தொடர்ச்சியாக மு.கா. சார்பில் ஒரு மாகாண சபை உறுப்பினரை மேல் மாகாணத்துக்கு அனுப்பிய கொழும்பு மக்களுக்கு மு.கா. தலைமை என்ன கைமாறு செய்துள்ளது? - செய்யப்போகின்றது?

மாகாண சபை உறுப்பினரால் கல்வி தொடர்பில் உச்சக் கட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாயினும் தொழில் வாய்ப்பு, குடியிருப்பு மற்றும் அன்றாடம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகாரம் இல்லை. ஆகவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் இரு முஸ்லிம்கள் கொழும்பிலிருந்து தெரிவாகியுள்ளனர். என்றாலும், மு.கா. சார்பில் ஒருவர் முன்னிறுத்தப்பட்டிருப்பாராயின் அவருக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.

மு.கா. தமது பிரதிநிதிகளை பல மாவட்டங்களில் களமிறக்கியது. என்றாலும், கொழும்பில் சில காரணங்களினாலேயே இறக்கவில்லை. அவ்வாறெனில், கொழும்புக்கு ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியையாவது மு.க. தலைமை வழங்குமாயின் கொழும்பு மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியும். 

எது எவ்வாறாயினும், கொழும்பு முஸ்லிம்களது வாக்குகளை மாத்திரம் மு.கா. எதிர்பார்க்காது அம்மக்களுக்கு ஏதேனும் நல்லதைச்செய்ய முன்வர வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் கட்சி பின்தங்கியுள்ளதை கட்சித்தலைவர் உணரவேண்டும். அது தொடர்பில் ஆராய்ந்து கட்சிக்கிளையிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும். தற்போதுள்ள நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் கொழும்பில் மு.காவுக்கு முகவரி இல்லாது போய்விடும் என்பதே யதார்த்தம்.

 அவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது. தலைவர் அஷ்ரப்பின் கனவுகள் நனவாகும் வரை மரம் ஓங்கி வளர வேண்டும். 

5 comments:

  1. illai.. athukkuthan 2 national list

    ReplyDelete
  2. As long as this man leads the party, the party will go down the hill. We do not want this party anymore. SLMC is going to neither speak for Mulsim nor do something for muslims.. We dissolve the party. The party lost its fundamental concept. It was created to handle issues and tamil dominance in east and north. We need some party to handle in those regions. Rauf took advantage of this party for his benefit. What a Hippocrate.

    ReplyDelete
  3. Maramm oongi valavum vendum makkalukku sevai saiyavum vendum Muslim congress ottai Mattum Vaangi manthirimaar Mattum superluxury Vaalthaal ? Enna makkal Kenayanaa?

    ReplyDelete
  4. So,leader should wakeup from long sleeping. He knows everythings but pretented as national leader. Please understand the people's pulses and reform their real feelings otherwise theslmc party will be warniahed from the eastern province in the next general election Insha Allah.Allah knows everythings.

    ReplyDelete
  5. கொழும்பை மட்டுமா? திருகோணமலையூம் தான்.

    ReplyDelete

Powered by Blogger.