Header Ads



பீரங்கித் தாக்குதலில் காலை இழந்து, பாராளுமன்ற உறுப்பினராகும் முதல் பெண்


புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

8ஆவது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார் சாந்தி சிறீஸ்கந்தராஜா.

வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மிக குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் இவர்.

எனினும், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் இவர், இம்முறை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் 13 பெண் உறுப்பினர்களில் ஒருவராவார்.

சாந்தி சிறீஸ்கந்தராஜா சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழையும், போரில் தமது உடல் உறுப்பினை இழந்த முதல் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் போரின் போது,- 2009 பெப்ரவரி மாதம், சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் தனது ஒரு காலை இழந்தார்.

துணுக்காய் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளராக இருந்த இவர், முழங்காலுக்குக் கீழ் தனது காலை இழந்த போதும், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்த, காயமடைந்தவர்களின் சார்பில் குரல் கொடுக்க நாடாளுமன்றம் செல்கிறார்.

போரில் உடல் உறுப்பை இழந்த நிலையில் நாடாளுமன்றம் செல்லும் முதல் நபர் நானே.

என்னைப் போன்ற நிலையில், உள்ள பலரின் சார்பிலும், குரல் கொடுத்து அவர்களுக்கு நல்ல வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்,” என்று தெரிவிததுள்ளார் சாந்தி சிறீஸ்கந்தராஜா.

3 comments:

Powered by Blogger.