Header Ads



"தடை செய்யப்பட்ட குண்டுகளை, வீசும் சவூதி அரேபியா

தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' கொத்து வெடிகுண்டுகளை சவூதி விமானப் படை யேமனில் வீசி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் குற்றம்சாட்டியது.

 யேமன் மீது சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

 இந்தத் தாக்குதலில் "கிளஸ்டர்' வகை கொத்து வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அரபு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஏற்கெனவே எழுப்பியது. அதே குற்றச்சாட்டை மீண்டும் கூறியுள்ளது.

 இது தொடர்பாக, அந்த அமைப்பு துபையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 ஒரே வீச்சில் பல குண்டுகளாகப் பிரிந்து தரையில் தாக்குதல்களை நடத்தும் தன்மை கொண்டவை கிளஸ்டர் வெடிகுண்டுகள். இவை வீசப்பட்ட நிலப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

 மேலும் வெடிகுண்டுக் கொத்தில் ஒரு சதவீத அளவு குண்டுகள் வெடிக்காமல் இருப்பதும் உண்டு. பின்னர் யாராவது இதனைத் தவறாகக் கையாண்டால் வெடிக்கும் அபாயம் இதில் உண்டு.

 சவூதி கூட்டுப் படைத் தாக்குதலில் இந்த வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. கிராமங்களில் இவ்வகை குண்டு வீச்சு நடப்பதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பினர் கூறினர்.

 கிளஸ்டர் வகை கொத்து வெடிகுண்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று 116 நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

 ஆனால் சவூதி அரேபியா, மற்றும் கூட்டுப் படையில் இணைந்துள்ள நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.

 இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அமெரிக்காவும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என அவ்வமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.