Header Ads



உறுதியாகும் புத்தளத்தின் MP பதவி

கடந்த 26 வருடங்கள் நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் புத்தளம் தொகுதி தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து வந்திருக்கிறது. எமது நாடு இன்னுமொரு பாராளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பலரும் ஏற்றுக் கொண்ட உண்மை ஓரணியாக ஒன்றுபடுவதன் மூலமே எமது பிரதிநிதித்துவதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகும்.

கடந்த வருடம் வடமேல் மாகான சபைத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இது பற்றிய சிந்தனை வெறும் பேசுபொருளாக இல்லாமல் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை பெரிதும் பாராட்டத்தக்க விடயமாகும்.

இச்செயற்பாடுகளில் முன்னின்று உழைத்து வரும் புத்தளம் அரசியல் விழிப்புணர்வு மன்றம் (PPAF)  கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளையும், வன்முறை ரீதியான அச்சுறுத்தல்களையும் சந்தித்தது. எனினும் சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் இப்பாதையில் முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், எதிர்வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது பலரையும் குழப்ப நிலையில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், கட்சி அரசியல் முறைமைகளுக்கு அப்பாலும் புதிய வியூகங்களை வேண்டி நிற்கின்றது.

* அனைவரினதும் எதிர்பார்ப்பு!
   இம்முறை எப்படியாவது எமது தொகுத்திக்கான பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
*  எல்லோரும், உடன்படுகின்ற விடயம்!
   ஓரணியாக களம் இறங்குவது தான் சாத்தியம்.

*  எமக்குள் இருக்கும் முரண்பாடு?
   அந்த ஓரணி எது என்பதாகும்

யதார்த்தத்தில், இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளின் அமைப்பாளர்களும் தமது இருக்கைகளில் இருந்து எழுவதற்கு முடியாதவாறு கடந்த கால சூழ் நிலைகள் காணப்பட்டாலும், தற்பொழுதுள்ள நிலை முற்றிலும் வித்தியாசமானது.

ஆளும் அரசாங்கத்தின் அமைப்பாளராக ஏற்கனவே களத்தில் தனது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும் முன்னால் நகர பிதா நஸ்மி அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் முன்னரே ஐக்கிய தேசுய கட்சியில் இணைந்து கொண்டவர்.

ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் அடையாளமாகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த முன்னால் மாகான அமைச்சர் நவவி அவர்கள் தற்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளியாக தனது அரசியலை ஆரம்பித்து, கட்சியின் அவ்வப்போதய தீர்மானகளுக்கு அமைய தேர்தல் காலங்களில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளிலும் போட்டி இட்டு இறுதியில் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியோடு இணைந்து கொண்ட முன்னால் நகர பிதா Baaiz ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தனது கட்சியைத் தீர்மானிப்பதில் இன்னும் உறுதியாக தீர்மானம் இன்றியே இருக்கின்றார்.

ஓரணி எவ்வாறு உருவாகும்.

01. ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணி (UPFA) கூட்டணியில் இன்னுமே பங்காளியாக இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், PPAF  உட்பட்ட நவாவி, பாயிஸ், .... கூட்டணி.ஒரு புறம். ஐக்கிய தேசியக் கட்சியின் நஸ்மி ஒரு புறம்.

02. ஐக்கிய தேசியக் கட்சி நஸ்மி, பாயிஸ் கூட்டணி ஒரு புறம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ppaf கூட்டணி மறு புறம்

03. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (நவாவி), பாயிஸ், PPAF உள்ளிட்ட கூட்டணி.

04. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (நவாவி),  PPAF உள்ளிட்ட கூட்டணி ஒரு புறம். ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியில் பாயிஸ் மறு புறம்.

05. ஐக்கிய தேசியக் கட்சியில் நஸ்மி, ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியில் பாயிஸ் ஒரு புறம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (நவாவி), ppaf  கூட்டணி மறு புறம்.

06. ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சி (பாயிஸ்) ஒரு புறம், ஐக்கிய தேசியக் கட்சி நஸ்மி ஒரு புறம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புறம், ppaf ஒரு புறம் (நான்கு அணிகள்)

கற்பனைகளோடு அணுகுவதை விட யதார்த்தமாக அணுகுவது பொருத்தம் என்ற வகையிலேயே இந்த தெரிவுகளை முன்வைக்கிறேன்.

எனினும், கடந்த கால அனுபவத்தில் பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து எமது உறுப்புரிமையைப் பெற்று கொள்வது சாத்தியம் மிக மிகக் குறைவானது என்ற வாதமும்  எம்முன்னால் இருக்கின்றது.

அத்துடன் பெரும்பான்மைக் கட்சி ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபான்மை வேட்பாளர்கள் போட்டி இடுவதும் சவால் நிறைந்த ஒன்றாகும்.

மேற்படி யதார்த்தம் அனைத்து தரப்பினராலும் புரியப் பட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகின்ற சூழ்நிலையில், சமூக வலைத் தளங்கள் உட்பட ஆங்காங்கே ஒருவரோடு ஒருவர் சேர்ந்து போவது பற்றி எதிர் மனப்பாங்கு விமர்சனங்களும், சிலரின் முன்னேயே எதிர்வு கூறல்கள் என்றும் உரிமைக் கோருவதும் விமர்சிப்பதும் நீண்ட கால இலக்கினை அடைந்து கொள்வதில் உள்ள பாரிய சவாலாகவே அமைந்துள்ளது.

இந்த முன்மொழிவுக்கும் அப்பால் இங்கு அழுத்தி சொல்லப்பட வேண்டிய விடயம் தான் எமது ஒன்றிணைந்த முயற்சியால் எமக்குக் கிடைக்க இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதி மக்களுக்கு பொறுப்பு சொல்லக் கூடிய வகையில் பொறுப்பு வாய்ந்த சபை ஒன்றின் கீழ் தன்னை வழிநடாத்த ஒத்துழைப்பு வழங்க முன்வருவார் என்பது கேள்விக் குறியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

கடந்த கால அனைத்து கசப்புணர்வுகளையும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மன்னித்து விட்டுக் கொடுத்து எமது புதிய நாளைக்காக தயாராகுவோம். தேர்தலின் வெற்றிக்கும் அப்பால் ஒரு முன்மாதிரி பாராளுமன்ற பிரதிநிதி எவ்வாறு செயற்படுவார் என்பதை நாட்டுக்கே ஒரு மாதிரியாக முன்வைக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

No comments

Powered by Blogger.