Header Ads



ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவர்களுக்கு, தற்போதுதான் தெளிவு ஏற்பட்டுள்ளது - ரணில்

நிதி தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பு கூறும் நிறுவனமாக பாராளுமன்றமே திகழ்கின்றது என்பதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரிவித்து வந்த போதும் தற்போதுதான் ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவர்களுக்கு இது தொடர்பில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோர் கூறுகிறார்கள்.

ஆனால், நான் ஒரு தசாப்தமாக இதனையே தெரிவித்து வந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒன்பது நூலாசிரியர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நூல்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்கத்தினால் எந்தவொரு அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தை மதிக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறவில்லை.

குறிப்பாக சீன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட போர்ட்சிட்டி திட்டம், மத்திய வங்கி தொடர்பில் கருத்துக் கேட்டாலும் அல்லது கொந்தராத்து வழங்கப்பட்டமை, பாதைகள், மோசடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வினவப்பட்டால் அதற்கு பதிலோ, அறிக்கையோ சமர்ப்பிக்க வில்லை. குறிப்பாக ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், இன்று இவர்கள் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டுமென்று கோருகின்றனர்.

நாம் ஆட்சியை கைப்பற்றிய 100 நாட்களில் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறியுள்ளோம். எமது வேலைத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அவ்வாறே, நேபாள பூகம்பம் இடம்பெற்றவுடன் எமது இராணுவத்தினரின் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாறே, எமது அமைச்சர்களும் அமைச்சு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டால் அது தொடர்பிலான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் முதன் முதலில் குழுவொன்றை நியமித்து அதனூடாக பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மூன்று விடயங்கள் வெளிவந்தன. இந்த பிணை முறி கேள்விக்கோரல் அடிப்படையில் கோரப் பட்டுள்ளமையும், இலங்கை வங்கியும் பெர்சுவல் - திறைசேரிக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் மற்றும் 2012 - 2014ஆம் ஆண்டுகளில் திறைசேரியினால் தனிப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப பிணை முறி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அறியக்கூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும் இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டதால் தான் இவை அனைத்தையும் அறியக்கூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும் மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் விசாரணையொன்றை நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளேன். எவ்வாறாயினும் இதுவரை அதன் அறிக்கை எனக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, நிதி செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நிறுவனமாக பராளுமன்றம் திகழ்வதால் எனது செயற்பாடுகளும் அதற்கு நிகராகவே நடைமுறைப்படுத்தப்படும்.

நான் கடைப்பிடிக்கும் கொள்கையாகவும் அரசியல் அடிப்படையாகவும் இதனை கடைப்பிடித்து வருகிறேன். எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்துக்கு எதிராக செயற்பட மாட்டேன். அவ்வாறே, பாராளுமன்றத்துக்கு நிதி தொடர்பில் பொறுப்பு கூறுவதையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறேன். இதற்கு ஒருபோதும் ஓய்வு வழங்கப்பட மாட்டாது என்பதை சுட்டிக்காட்டுவதாக பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.