Header Ads



ஆட்சி மாற்றம் வேண்டும், சகலரும் தயாராகுங்கள் - மகிந்த ராஜபக்ஷ அழைப்பு

முன்னைய அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றுதல், எதிரணியினரைப் பழிவாங்குதல் மற்றும் அரசியல்வாதிகளைக் கைது செய்தல் ஆகியவற்றைத் தவிர இந்தப் புதிய அரசால் அபிவிருத்திகள் எதுவும் நடக்கவில்லையெனவும் இதன்படி ஆட்சி மாற்றமொன்று தேவையாகவுள்ளதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதற்காகத் தயாராகுமாறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயாராம விகாரையில் செவ்வாய்க்கிழமை (26) மகளிர் அணி மற்றும் அபே ஜாதிக பெரமுன அமைப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அபே ஜாதிக  பெரமுன அமைப்பினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷ போட்டியிட வேண்டுமெனத் தீர்மானமொன்றை மேற்கொண்டதுடன் அந்தத் தீர்மானம் தொடர்பான ஆவணத்தை அவரிடம் கையளித்துள்ளனர். 

இந்த நிகழ்வின்போது அவர்கள்  மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது; 

புதிய ஆட்சியில் 100 நாட்களில் வீதிகளில் காணப்பட்ட பதாதைகளை அகற்றுதல் எதிரணியினரைப் பழிவாங்குதல், அரசியல்வாதிகளைக் கைது செய்தல் ஆகியவற்றைத் தவிர எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. இதனால் ஆட்சியில் மாற்றம் வேண்டும். பொதுத் தேர்தலின் போது அதனைச் செய்ய சகலரும் தயாராகுங்கள் எனத் தெரிவித்தார். இதேவேளை மகிந்த ராஜபக்ஷ மகளிர் அணியினர் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த பெண்கள் சிலர், தற்போதைய அரசாங்கம் பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறினாலும் எந்தப் பொருளின் விலையும் குறைக்கப்படவில்லையெனவும் அவரிடம் முறையிட்ட நிலையில் இதற்குத்தான் ஆட்சி மாற்றம் தேவையெனக் கூறுகின்றேன் என மகிந்த தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.