Header Ads



பிஸ்கெட் சாப்பிடுவது, உடல் நலத்துக்கு கேடானதா..?

மந்திரிகளைச் சந்திப்பதைவிட மருத்துவர்களை சந்திப்பதற்கு சகல செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு இன்று வந்து சேர்ந்திருக்கிறோம். சாப்பிட வேண்டியதை சாப்பிடாமல், சாப்பிடக் கூடாததை சாப்பிடுகிற தவறான உணவுப்பழக்கத்தால் வந்து சேர்ந்த வினை இது. ‘இ்தை குழந்தைப் பருவத்திலேயே நம்மிடம் தொடங்கி வைக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன பிஸ்கெட்டுகள்' என்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘விரும்பி சாப்பிடும் அளவு் சுவையானது... சாப்பிட நேரம் இல்லாத வேளைகளில், சாப்பிட முடியாதபோது ஆபத்பாந்தவனாக கை கொடுப்பது என்ற விதங்களில்் பிஸ்கெட் சரியானது. இதைத் தவிர பிஸ்கெட்டில் வேறு எந்த நன்மையும் இல்லை. கெடுதல்கள்தான் நிறைய இருக்கின்றன’’ என்கிறார் உணவியல் நிபுணரான ஹேமமாலினி.

‘‘சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன. பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. சர்க்கரை, கொழுப்பு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

பிஸ்கெட் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பைஅதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம். அப்படி, தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை E223 என்பதுபோல நமக்கு புரியாத மொழியில் குறிப்பிட்டிருப்பதால், அது தெரிவதும் இல்லை. கோதுமையில் இருக்கும் புரதச்சத்தான க்ளூட்டன் (Gluten) சிலரது உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது. இதனால் கோதுமையில் தயாராகும் பிஸ்கெட்டுகளால் பெரியவர்களுக்கு வாந்தி, பேதி, நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது. உடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில்தான் தயாராகின்றன.

பிஸ்கெட் பற்றி நம்மிடம் சில மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன. சிலர் எடை குறைப்புக்காக பிஸ்கெட்சாப்பிடுகிறார்கள். இதனால் தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்காமல், கூடுதல் தீமைதான் வந்து சேருமே தவிர, நாம் எதிர்பார்க்கிற விஷயம் நடக்காது. காலையில் சாப்பிட நேரம் இல்லாத சிலர் டீ, இரண்டு பிஸ்கெட் சாப்பிட்டாலே போதும் என்று் நினைக்கிறார்கள். இளம்வயதில் எந்தப் பிரச்னையும் தெரியாவிட்டாலும் நாளடைவில் வயிற்றுப்புண், செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். உடலில் சர்க்கரை அளவு குறைந்தா்லும்் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடு்வது தவறான பழக்கமே!’’ என்கிறார்ஹேமமாலினி. குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான ஜெயந்தி, வேறு ஒரு கோணத்தை முன் வைக்கிறார்...

‘‘குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள். பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும்.

பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம். முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்
உண்டாகும்’’ என்றவரிடம் மெடிக்கேட்டட் பிஸ்கெட் பற்றி கேட்டோம்.

‘‘குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது. புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி’’ என்கிறார். ஹேமமாலினியும் இதே கருத்தை வழிமொழிகிறார்...

‘‘ஒரு பாக்கெட் பிஸ்கெட்டில் 200 மி.லி. பால் என்பதுபோல சில கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன. இவையெல்லாமே மக்களைக் கவரும் வியாபார உத்திதான். பொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு...’’

பிஸ்கெட் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும். இப்போது மக்களுக்கு உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனங்களும் அதற்கேற்றாற்போல தயாரிப்பு முறையை மாற்றி வருகின்றன. நார்ச்சத்து, சிறுதானியம், முந்திரி போன்ற பருப்பு வகைகள் கொண்ட பிஸ்கெட் என புதிய வகைகள் சந்தைகளில் அறிமுகமாவது இதன் அடையாளம்தான்.

வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந் தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும். எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்...’’ என்கிறார் ஹேமமாலினி.

நம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஜெயந்தி.
‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும். நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்ப்பதால்தான் பன்னாட்டு கலாசார பிஸ்கெட் போன்ற உணவுகளும், அதைத் தொடர்ந்து புதிய புதிய நோய்களும் நம் நாட்டுக்குள் வந்தன’’ என்கிறார் அழுத்தமாக...நாம் மாற வேண்டிய நேரம் இது!

No comments

Powered by Blogger.