Header Ads



இந்திய உளவு அமைப்புகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே ரகசிய கூட்டு - பாகிஸ்தான்

தலிபான்களும், இந்திய உளவு அமைப்புகளும் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வானொலியான "ரேடியோ பாகிஸ்தான்' செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

 பாகிஸ்தானில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக தலிபான் அமைப்பும், இந்திய உளவு அமைப்புகளும் கைகோத்து கொண்டு செயல்படுகின்றன என்று ஆசிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் -இ- தலிபான் பயங்கரவாத அமைப்பானது, இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளது எனவும் ஆசிப் கூறியுள்ளார்.

 பலூசிஸ்தான் மாகாணத்தில் இந்தியா பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் தெரிவித்திருப்பதாக "ரேடியோ பாகிஸ்தான்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவின் உளவு அமைப்பான "ரா' தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

 இந்நிலையில், தில்லியில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் மூலமே அழிக்க முடியும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

 இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு விவகாரங்களுக்கான செயலர் ஐஜாஸ் அகமது, பாகிஸ்தானில் இந்தியா பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது என்ற தங்கள் நாட்டின் குற்றச்சாட்டை பாரிக்கரின் கருத்து நிரூபிப்பதாகக் கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.