Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு காரசாரமாக கருத்துக்களை கூறிய ஹக்கீம், புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் என்பதில் உண்மையில்லை என்கிறார்

-டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-

மலையகத் தமிழ் மக்களையும்;, முஸ்லிம்களையும், பொதுவாக சிறுபான்மை இனங்களையும் சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி போன்றவற்றையும் புதிய தேர்தல் முறையைத் திணிப்பது மிகவும் பாதிக்கும். எனவே நாங்கள் இந்த விடயத்தை வெறுமனே விட்டுக் கொடுக்க முடியாது. எனவே இது பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமென ஓர் அழுத்தத்தை புதன்கிழமை அமைச்சரவையில் கொடுத்திருப்பதாக குறிப்பிட்ட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இவ்வாறிருக்க புதிய தேர்தல் சீர்திருத்தத்தை அமைச்சரவை அங்கீகரித்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மையில்லை எனவும் மறுத்தார்.

இவ்வாறு கண்டி மாநகர கழிவு நீர் முகாமைததுவ செயற்திட்டத்தை ஹீரஸ்ஸகலையில் ஆரம்பித்து வைத்த பின்னர் கண்டி ரோயல் கார்டின் மோல் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியளாலர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாநகர கழிவு நீர் முகாமைத்துவ செயற்திட்டத்தின் பயன்களை பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்த பொழுது இன்றைய பரபரப்பான அரசியல் சூழ் நிலையில் அது தொடர்பான கேள்விகளை சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் தொடுத்த பொழுது அவற்றுக்கு அமைச்சர் உரிய பதில்களை அளித்தார். அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது, 

நாங்கள் தேசிய அரசாங்கம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இப்பொழுது சிந்திக்கவும்,  செயலாற்றவும் தலைப்பட்டிருக்கிறோம். ஆனால், பாராளுமன்றத்தில் இப்பொழுது ஒரே கூச்சலும், குழப்பமுமாகவே இருக்கின்றது. கருத்து மோதல்களும் கோஷங்களும் எழுந்த வண்ணமே இருக்கின்றது.

அவ்வாறான நிலைமைகளைக் காணும் பொழுது பொதுமக்கள் கலக்கமடைகிறார்கள். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நாங்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆரசியல் கட்சிகளுக்குள்ளும், அவற்றிற்கிடையிலும் பலவிதமான சர்ச்சைகளும், முரண்பாடுகளும் ஏற்படலாம். ஆனால், இந்த நாட்டின் அரசியல் தலைமை ஆட்டம் காணாமல் உறுதியாக இருப்பதோடு, மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்வது நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது. 

எங்கள் நாட்டின் ஜனநாயக கோட்பாட்டு விழுமியங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இதனை கட்டிக்காப்பதற்கு அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, இந்த தென்கிழக்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு நாட்டிலும் அரசியல் தளம்பல் நிலை தோன்றிய போதிலும், இலங்கையைப் பொறுத்தவரையிலும் முறியடிக்க முடியாத அளவிற்கு பாரிய சவால்கள் எவையும் ஏற்படவில்லை.

20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி பேசப்படுகின்ற போதிலும் அது இன்னும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை. அமைச்சரவை அங்கீகரித்து, உயர்நிதிமன்றம் வியாக்கியானம் செய்து, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தமே பாராளுமன்றத்தில் இழுபறிபட்டு தாமதமாகிக் கொண்டு போகின்றதை காண்கின்றோம். இப்பொழுது அது 27ஆம், 28ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது. எதிர்க்கட்சி அதனை குழப்பியடிப்பதற்கு தந்திரோபாயங்களை கையாண்டு வருவதை காணமுடிகிறது. இது உதைபந்தாட்டத்தில் பந்து வெற்றிக்கம்பத்தை நெருங்கும் போது கோல் கம்பத்தை நகர்த்துகின்ற காரியமாகவே காணப்படுகின்றது. இதில் உட்பூசல்கள் இருக்கலாம். 

ஆனால், அரசாங்கத்தினல அங்கம் வகிக்கின்றோம் என்ற முறையிலும், சிறுபான்மை கட்சியினர் என்ற முறையிலும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான அரசியல்யமைப்பு சீர்திருத்தம் என்ற விதத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது எங்களது கடமையாகும். 

ஏதிர்க்கட்சியைப் பொறுத்தவரை 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தோடு, தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் சீர்திருத்தமும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அவர்களது செயல்பாட்டில் எங்கள் மத்தியில் சந்தேகம் ஏழந்;துள்ளது. சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகள் என்பவற்றைச் சேர்ந்த நாங்கள் இது பற்றி இப்பொழுது கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் புதிய தேர்தல் சட்ட சீர்த்திருத்தத்தை அனுமதிக்கச் செய்ய ஜனாதிபதி முற்பட்டார். ஆனால், அது சம்பந்தமான உரிய கலந்துரையாடலின்றி அதை செய்யக்கூடாதென நானும், அமைச்சர் திகாம்பரமும் காரசாரமாக கருத்துக்களை கூறினோம். ஆதனை ஜனாதிபதியும் ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதியோடும், பிரதமரோடும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துக்கின்றோம். அவர்கள் இருவரிடத்திலும் ஒருமித்த இணக்கப்பாட்டை ஏற்படுத்தி விட்டு ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

பாராளுமன்றத்தில் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டு நடத்துவதாகக் கூறிக் கொண்டு பிரதான கட்சிகள் இரண்டுக்கு மட்டும் இலாபகரமான முறையில் இவற்றைச் செய்கின்ற போது, ஏனைய சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகள் தொடர்பிலும் வேறொரு கோணத்திலிருத்திலிருந்து இந்தப் பிரச்சினை அணகப்பட வேண்டும். 

எந்தொரு சமூகமும் தனக்குரிய உரிமைகளை, பிரதிநிதித்துவத்தைப் பெறாமல் மறுக்கப்படும் நிலை தோன்றுமானால் அதன் விளைவாகவும் நாட்டில் ஸ்திரமற்ற நிலை தோன்றும் என்பதை மறந்து விடக் கூடாது. அதற்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஆகவே தேர்தல் சட்ட சீர்திரத்த விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது தொடர்பில் நாம் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கின்றோம். இவ்வாறான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை திடுதிடுப்பென அவசரப்பட்டு மேற்கொள்ள முடியாது.

தற்போது இருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறையை விட வித்தியாசமான ஒன்றை அறிமுகப்படுத்துவதானால், தொகுதிவாரி மற்றும் விகிதாசாரக் கலப்புத் தேர்தல் முறையில் நியாயமானதாக அமையவேண்டுமானதாக இருந்தால். தொகுதிவாரியாக 50 வீதமும், விகிதாசாரமாக 50 வீதமாகவும் அமைவதுமான ஒரு முறைமை தான் சிறப்பானதாக இருக்கும். 70 வீதம் தொகுதி ரீதியாகவும் 30 வீதம் விகிதாசார ரீதியாகவும் என்பது போன்று திணிக்கப்படக்கூடிய தேர்தல் முறைமை சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்குமென நாங்கள் காண்கின்றோம்.

குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி போன்றவற்றையும் இவ்வாறான தேர்தல் முறையைத் திணிப்பது மிகவும் பாதிக்கும் என்றார். எனவே நாங்கள் இந்த விடயத்தை வெறுமனே விட்டுக் கொடுக்க முடியாது. எனவே இது பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமென ஓர் அழுத்தத்தை நாம் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவையில் கொடுத்திருக்கின்றோம். 

இவ்வாறிருக்க புதிய தேர்தல் சீர்திருத்தத்தை அமைச்சரவை அங்கீகரித்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என நாங்கள் மறுக்கின்றோம்.

No comments

Powered by Blogger.