Header Ads



தேசிய ஐக்கியமும், முஸ்லிம்களும்...!

-நவாஸ் சௌபி-

தேசிய நல்லாட்சி மற்றும் தேசியத்தின் ஐக்கியம் என்பவற்றுக்கு முன்மாதிரியையும் ஒரு முன் அனுபவத்தையும் அளிக்கின்ற ஆட்சியாக தற்போதைய மைத்திரிபால சிறிசேன அவர்களது ஆட்சி அமைந்திருக்கிறது. 

குறிப்பாக இந்த நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் உரிமைத்துவப் பிரச்சினைகள் யாவற்றுக்கும் பொருத்தமான தீர்வு அல்லது சமத்துவமான ஆட்சி உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஆட்சியாக மைத்திரிபால சிறிசேன யுகம் மலர்ந்திருக்கிறது.

இதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் : 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியிலிருப்பாரானால் இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகத்திற்கென எந்தவொரு பிரச்சினையும் இருக்காது' (நன்றி : வீரகேசரி 26.03.2015)

தமிழ் மக்களின் அதிகாரம் மற்றும் உரிமையை மாத்திரம் தங்களது அரசியல் நோக்காக கொண்டு இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் மீது இப்படியான ஒரு நம்பிக்கையை உறுதியாக வைத்துப் பேசி இருப்பது இதுவே முதல்தடவையாக இருப்பதோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுள் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இவ்வாறான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் ஜனாதிபதியாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வரலாற்றில் பதிவு பெற்றிருக்கிறார் என்றும் இதனூடாக கருதமுடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் போன்றே இன்று முஸ்லிம் அரசியலும் தங்களது எதிர்கால சமூக இருப்புக் குறித்த அனைத்து சவால்களுக்கும் தீர்வு பெறக்கூடிய ஒரு ஆட்சியை மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் காணமுடியும் என்ற பெரும் நம்பிக்கையை வைத்திருக்கிறது.

இத்தகைய நம்பிக்கைகளுக்கு மத்தியில் இன்று தேசிய ஐக்கியத்திற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் உருவாக்குவதற்கான அறிவிப்பினை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார். அதனை பிரதமர் ரணிலும் ஏற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு அது பற்றிய விளக்கங்களையும் அளித்திருக்கிறார்.

நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கான குழு ஒன்றை தேசிய ஐக்கிய அலுவலகம் ஒன்றின் மூலமாக வழிநடத்த இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி சிறுபான்மைச் சமூகங்களின் அடிப்படையானதும் பாராதூரமானதுமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பெரும் முயற்சி என்றே இதனை நாம் வரவேற்று நோக்க வேண்டும்.

தேசிய நல்லாட்சிக்கு தேசியத்தின் ஐக்கியம் பெரும் பங்கு வகிக்கிறது எனவே தேசிய நல்லாட்சியை தேசிய ஐக்கியத்தின் மூலம் கட்டியெழுப்ப திட்டமிட்டிருக்கும் இத்தகையதொரு உயரிய பணிக்கு தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொறுப்பாக்கப்பட்டிருப்பது இதன் நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்பதற்கான உத்தரவாதத்தினையும் எமக்களித்திருக்கிறது.

இதற்கு முன்னரான நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுள் சிறுபான்மைச் சமூகங்களுக்கு கூடிய முக்கியத்துவமளித்த ஒரு ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்கவை நாம் காணலாம். கடந்த 2000 ஆம் ஆண்டில் சந்திரிகாவால் உருவாக்க முன்மொழியப்பட்ட அரசியல் சீர் திருத்தமானது சமஷ்டி என்ற சொல்லை நேரடியாக கொண்டிராதுவிட்டாலும் அது பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வார்த்தையால் அதற்குச் சமாந்தரமாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும்பாலான நன்மைகளை உருவாக்க கூடிய ஒரு அரசியல் திருத்தமாகவே பார்க்கப்பட்டது.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு எதிரான கோஷங்களோடு இருப்பதை வைத்து ரணில் போன்றவர்கள் அப்போது எதிர் அரசியல் செய்த நிலையில் அன்றைய சந்திரிகாவின் அரசியல் திருத்தமானது பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வார்த்தையால் சமஷ்டிக்கு ஏற்றதான  ஒரு திருத்தமாக கொண்டுவரப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. மறைந்த பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அந்த அரசியல் திருத்தத்தினை முன்வைத்து நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் மூன்று மணிநேரம் மிக நீண்ட உரையை தொடர்ச்சியாக நிகழ்த்திய சாதனையையும் செய்திருந்தார். 

இப்படியான முன் உதாரணங்களோடு இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் தலைமையில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தேசிய ஐக்கியக் குழு செயற்படுவது. இன்றுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு கிடைத்திருக்கும் பெரும் ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது. இச்சந்தர்ப்பத்தினை எமது சிறுபான்மைச் சமூகங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. 

ஏனெனில் இக்குழுவின் உருவாக்கம் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றபோது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் : 

'சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் மக்களின் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக திருமதி குமாரதுங்க தலைமையில் இந்த ஜனாதிபதி விஷேட செயலணிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலணிப்பிரிவில் சிரேஷ்ட கல்விமான்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் இடம்பெறுகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிராந்தியங்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட விவாகரங்களை இந்த செயலணிப் பிரிவு ஆயு;வு செய்யும்' (நன்றி : தினக்குரல் 26.03.2015)

இவ்வாறு சிறுபான்மையினரின் பிரச்சினையை ஆராய சந்திரிகா தலைமையில் விஷேட செயலணிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்திருக்கும் மேற்படி செய்தியானது குறிப்பாக தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு தீர்வுகாண்பது எனச் சுட்டிக்காட்டியிருப்பது,கடந்த முப்பதுவருடகால யுத்த வரலாற்றில் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் பற்றி கவனம் செலுத்தியிருப்பதை  வெளிப்படுத்தினாலும்,இத்தகைய யுத்த விளைவுகளால் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகமும் பெரும் இழப்புகளையும் துயரங்களையும் சுமந்திருக்கின்றது. அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள இத்தகைய தேசிய ஐக்கியத்திற்கான குழுவில் போதிய அளவாக முஸ்லிம் தரப்பினர்களும் உள்வாங்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக சிங்களப் பேரினவாதிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் போன்று முஸ்லிம் சமூகமானது சிங்களப் பேரினவாதிகள் மற்றும் தமிழர் போராட்ட ஆயுத இயக்கங்கள் என இரு தரப்பினர்களாலும் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று. இத்தகைய பாதிப்புக்களில் இன்றும் தீர்வுகாணப்படாதிருக்கின்ற மீள் குடியேற்றம், காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினைகள், மதஸ்தலங்கள் தொடர்பான தடைகள் என்று எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அவைகள் யாவும் ஆவணரீதியாக தேசிய ஐக்கியத்திற்கான குழு முன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 

மாத்திரமல்லாமல் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு பௌத்த தீவிரவாதக் கடும் போக்காளர்களால் அதிலும் குறிப்பாக பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டுவரும் மத அடக்கு முறைகளில் இருந்து பூரண விடுதலை தேவைப்படுகிறது. மழைவிட்டும் தூறல் விடவில்லை என்பது போல மஹிந்தவின் ஆட்சி முடிந்தும் பொதுபல சேனாவின் அறிக்கைகள் ஓயவில்லை. அது இன்னும் இலங்கை முஸ்லிம்களை அதட்டிக்கொண்டும் அடக்கிக்கொண்டும் இருப்பதாகவே வெளிவருகிறது. 

எனவே இதுபோன்ற முஸ்லிம் சமூகத்தின் கடந்தகால இழப்புக்கள் அழிவுகள் குறித்தும் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சவால்களில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் குறித்தும் முறையான முன்னெடுப்புகளை எமது முஸ்லிம் புலமைகளும் அரசியலும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான சிபாரிசுகளையும் போதிய முன்மொழிவுகளையும் தேசிய ஐக்கிய குழுவுக்கு முன்கொண்டு செல்ல வேண்டும். 

ஏனெனில் தேசிய ஐக்கிய செயலணியில் முஸ்லிம்களும் இணைந்து செயற்படுவதன் மூலம் போதிய தீர்வுகளைப் பெற முடியும் என்பதற்கு இந்த ஆட்சி வழி திறந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தையும் நாம் தவறவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் பிரச்சாரம் செய்கின்ற கோஷங்களாக எமது பிரச்சினைகளை தொடர்ந்தும் நாம் வைத்திருக்க முடியாது.

No comments

Powered by Blogger.