Header Ads



பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த, ஆசிரியர்களை நியமித்து தருமாறு பெற்றோர் கோரிக்கை


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
  
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி நேற்று 2 திங்களன்று ஏறாவூரிலுள்ள மத்திய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் பெற்றோர் திரண்டு தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

நீண்டகாலமாக இந்தப் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர் எவரும் இல்லை என்ற குறையை கல்வி அதிகாரிகளுக்கு தாங்கள் பல தடவை சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்த பெற்றோர் இந்த அதிருப்தி காரணமாகவே தற்சமயம் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் திரண்டதாகத் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் இன்று அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தியிடம் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர் இல்லாத குறையை பெற்றோர் எடுத்து விளக்கியதோடு அதனால் தமது மாணவர்களை அப்பாடசாலையிலிருந்து விலக்கிச் செல்ல நேரிடுவதாகவும் கூறினர்.

இதனைக் கேட்டறிந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தி எதிர்வரும் புதன்கிழமையன்று தீர்மானமெடுத்து ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததை அடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


No comments

Powered by Blogger.