Header Ads



கோதபாய ராஜபக்ஸ தொடர்பில் முறைப்பாடு, செய்யப்பட்டால் விசாரணை நடாத்த தயார்

-gtn-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடாத்தத் தயார் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி அண்மையில் நாடு திரும்பிய போது கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களின் முன்னிலையில் அவரால் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சியின் போது இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் கொலைகள்தொடர்பில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தத் தயார் என தற்போதைய காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிரசாந்த ஜயகொடி, உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் செயலாளர் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொலை மிரட்டல்களை விடுத்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.

வெள்ளை வான் கலாச்சாரம் தொடர்பிலான சகல விபரங்களையும் வெளியிடத் தயார் எனவும் விசாரணை நடத்தப்பட்டால் அதற்கான சாட்சியங்களை முன்வைக்கத் தயார் எனவும் பிரசாந்த ஜயகொடி கூறியிருந்தார். வெள்ளைவான் கடத்தல்கள் கொலைகளுடன் இராணுவ அதிகாரிகளுக்கே தொடர்பு உண்டு என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இப்படியே சொல்லி காலம் கடத்த திட்டம் போடுங்க

    ReplyDelete

Powered by Blogger.