Header Ads



மயூரன் உயிருடன் இருப்பாரா..? பகுதி - 2

அண்ணன் பற்றிய நினைவுகளைக் கம்மிய குரலில் பகிர்கிறார் மயூரனின் சகோதரி பிருந்தா...

''எனக்கு அவன் ஒரு நல்ல சகோதரனாக இருந்தான். அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருந்தது. அவன் கைதுசெய்யப்பட்ட போது நாங்கள் நிலைகுலைந்து போனோம். அப்போது நான் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பை அப்படியே கைவிட நேர்ந்தது.

இன்று அவுஸ்திரேலியா அரசு எவ்வளவோ முயன்றும், என் அண்ணன் இன்னும் மரணத்தின் பிடியில் இருந்து விலகவில்லை. அவன் எங்கேயாவது ஓர் இடத்தில் உயிரோடு இருந்தால் கூடப் போதும். ஆனால், அது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.

மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில் இருந்து மரண தண்டனை விதிக்கப்படும் அந்நிய நாட்டின் சட்டப் பிடியில் இருந்து என் சகோதரனை மீட்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம். அவனைச் சுட்டுக் கொல்லும் நாளில் மரணிக்கப் போவது மயூரன் மட்டும் அல்ல... நான், அப்பா சுகுமாரன், அம்மா ராஜனி, தம்பி மைக்கேல்... என எங்கள் அனைவரின் மனசாட்சியும்தான்.

அன்று நாங்கள் அனைவருமே துயரமான ஒரு வாழ்க்கையினுள் விழப் போகிறோம். இப்போதே நாங்கள் தனித்து வாழ்கிறோம். எங்கள் வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாட்கள் ஆகின்றன.

அந்தக் கறுப்பு நாளுக்குப் பிறகு எங்கள் நிலை என்னவாக இருக்கும் எனக் கற்பனைகூட செய்ய முடியவில்லை.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் ஆறு பேர் கையெழுத்திட்டு, மயூரனையும் ஆண்ட்ரூ சானையும் விடுவிக்குமாறு இந்தோனேஷியா அரசாங்கத்துக்கு வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அவுஸ்திரேலியா கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரையும் மட்டும் ஒப்படைக்குமாறு கேட்டுப் பார்த்தது. அதற்கும் வளைந்து கொடுக்கவில்லை இந்தோனேஷியா.

அடுத்த யோசனையாக, இவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினால் 'பாலி-9� வழக்குக்காகச் செலவிட்ட மொத்த தொகையையும் வட்டியோடு திருப்பித் தருவதாகவும் கூறியது ஆஸ்திரேலியா.

ஐ.நா-வின் மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்பட பல நாட்டு மனித உரிமை அமைப்புகளும் தலைவர்களும், அவர்கள் இருவருக்கும் 'மரண தண்டனை விதிக்க வேண்டாம்� என்ற கோரிக்கையை எழுப்பினார்கள்.

ஆனால், 'போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எங்கள் அரசு வழங்கும் தண்டனையை ரத்துசெய்யக் கோரும் பேச்சுக்கு இடமே இல்லை. அது எங்களின் இறையாண்மையில் தலையிடும் செயல்� எனக் கண்டிப்போடு சொல்லிவிட்டார் இந்தோனேஷியா அதிபர் ஜொகோ விடோடோ.

'பாலி-9� வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் மிக மோசமான குற்றம் புரிந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் அவுஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்க மறுக்கிறார்.

ஏற்கெனவே சில பிரச்னைகளில் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்பட்டிருக்க, இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அந்த நாடுகளின் உறவில் மேலும் விரிசல் விழலாம்.

10 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் மயூரன் சுகுமாரனின் மனநிலை என்ன?

'நான் கைதுசெய்யப்படும் வரை, யாருக்கும் நான் எந்த ஒரு சிறு உதவியும் செய்தது இல்லை. மிக மிக சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடிய ஒரு மனிதனாக இருந்தேன். வாழ்க்கையின் தேவைகள் என்ன, நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமல் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டேன்.

ஆனால், இந்தச் சிறை வாழ்க்கை, எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து விட்டது. இப்போது நான் மனிதர்களைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன். அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, அதை மட்டும் செய்கிறேன்.

இப்போது நான் வாழ ஆசைப்படுகிறேன். ஏனென்றால், நான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் வரையிலான என் வாழ்வை நான் அர்த்தம் உள்ளதாக மாற்றியிருக்கிறேன்.

எனக்குத் தெரியாத பல விஷயங்களை வாழ்க்கை இப்போது கற்றுக் கொடுத்திருக்கிறது. அவுஸ்திரேலியா மக்களிடமும் இந்தோனேஷியா மக்களிடமும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அனைவரிடமும் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்� என்பதே மயூரன் கடைசியாக உலகத்துக்குச் சொன்ன செய்தி.

அவரால் இனி வெளியுலகைத் தொடர்புகொள்ள இயலாது. ஏனென்றால், மரண தண்டனையை நிறைவேற்றும் ஜாவா தீவின் நுசகம்பன்கன் சிறை அத்தனை கொடியது.

நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்படும் எந்தக் குற்றவாளிக்கும் 72 மணி நேரத்தில் தண்டனையை நிறைவேற்றி விடுவதுதான் இந்தோனேஷியா மரபு. ஆனால், அந்தச் சிறைக்கு மாற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் ஆண்ட்ரூ சானுக்கும் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகப் பார்க்கிறார்கள் சிலர்.

அதே சமயம், 'இந்தத் தாமதம் மயூரனின் பிறந்த நாளை எதிர்நோக்கியா?� என்பதும் விடை தெரியாத கேள்வி!

காலம், பல தவறுகளைச் சரிசெய்யலாம். ஆனால், கருணை என்பது காலம் கருதி வருவதல்ல. மயூரன், ஆண்ட்ருவின் முடிவு கருணையின் கையிலா... சட்டத்தின் கையிலா என்பதை காலம்தான் முடிவுசெய்யும்!

சிறையில் என்ன செய்கிறார்கள்?

'பாலி-9� வழக்கில் கைதுசெய்யப்பட்ட மயூரன் சுகுமாரனும் ஆண்ட்ரூ சானும் எப்படி இருக்கிறார்கள்?

கைதுசெய்யப்பட்ட சில நாட்களிலேயே புதிய வாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட மயூரன், தனக்குள் இருந்த ஓவியத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறையில் தான் வரைந்த ஓவியங்களை ஏலம்விட்டு, அதில் வந்த தொகையை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொடுத்தார்.

தனது கடந்தகாலத்தை மறக்கவும், மன அமைதிக்காகவும் மயூரன் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தார். அவற்றில் பல ஓவியங்களில் தன் அம்மா, தங்கை, தம்பி, நண்பன் ஆண்ட்ரூ சான் ஆகியோரோடு தன்னையும் வரைந்திருக்கிறார் மயூரன்.

ஆண்ட்ரூ சான், போதைப் பழக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு, சிறையில் கிறிஸ்தவ போதகர் ஆகிவிட்டார். தன் காதலியை மணம் முடித்திருக்கும் ஆண்ட்ரூ சான், தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார்.

அதில், 'என் குடும்பத்தில் நடந்த திருமணங்களுக்கு நான் சென்றது இல்லை. யாராவது இறந்தால், அந்த இறுதிச் சடங்குகளுக்குக்கூட நான் சென்றது இல்லை. என் குடும்பத்தினருடன் நான் ஒருபோதும் நேரம் செலவிட்டது இல்லை. ஆனால், இப்போது இந்த வலிகளையும் வேதனைகளையும் நான் மட்டும் அனுபவிக்கவில்லை, என் குடும்பமும் சேர்ந்து அனுபவிக்கிறது� என எழுதியிருக்கிறார்!

No comments

Powered by Blogger.