Header Ads



மயூரன் உயிரோடு இருப்பாரா..? பகுதி 1

வருகிற ஏப்ரல் 17-ம் தேதி மயூரன் சுகுமாரனுக்கு 34-வது பிறந்த நாள். ஆனால் அந்த நாளைக் கொண்டாட, ஜாவா தீவில் இருக்கும் நுசகம்பன்கன் சிறையில் அவர் உயிரோடு இருப்பாரா அல்லது அதற்குள் அவரைச் சுட்டுக் கொன்றுவிடுவார்களா என்பது இந்த நிமிடம் வரை விடை தெரியாத கேள்வி!

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் என்ற குற்றச்சாட்டில் மயூரன் சுகுமாரன் கைதுசெய்யப்பட்டதும், இதேபோல ஒரு பிறந்த நாளில்தான். 2005, ஏப்ரல் 17-ம் தேதி பாலி தீவில் கைதானார் மயூரன்.

ஒன்பது பேரை போதைப்பொருட்களோடு இந்தோனேஷியா காவல்துறை அதிரடியாகக் கைதுசெய்து ஊடகங்கள் முன்பு நிறுத்திய போது, அன்று அதுதான் தலைப்புச் செய்தி.

கைதானது இந்தோனேஷியாவில் என்றாலும், கைதானவர்களில் அதிகமானவர்கள் அவுஸ்திரேலியா குடிமக்கள். அந்த அதிரடிக் கைது வழக்குக்கு இந்தோனேஷியா அரசு வைத்த பெயர் 'பாலி-9�.

வழக்கு நடந்த அடுத்த ஆண்டே, அதில் முதன்மைக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மயூரன் சுகுமாரனுக்கும் ஆண்ட்ரூ சானுக்கும் சுட்டுக் கொல்லும் மரணதண்டனை வழங்கியது பாலி நீதிமன்றம்.

மேல்முறையீடுகள் தண்டனையை உறுதிசெய்ய, கடைசியாக எஞ்சியிருந்தது கருணை மனு மட்டுமே. இப்போது இந்தோனேஷியா அதிபர், இந்த இருவரின் கருணை மனுக்களையும் நிராகரித்துவிட்டார்.

நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்பட்டு, மரணத்தின் நிழலில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தன் மகனை எப்படி மீட்பது எனத் தவிக்கிறார் மயூரன் சுகுமாரனின் தாய் ராஜனி, அவுஸ்திரேலியாவில் ஒரு அற்புதம் அம்மாளைப் போல!

என் அம்மாவும் அப்பாவும் இலங்கையில் இருந்தாலும், நானும் என் கணவர் சுகுமாரனும் லண்டனில் வேலை செய்தோம். அங்கேதான் மயூரன் பிறந்தான். இருவருமே வேலைக்குச் சென்று வந்ததால், அவனை இலங்கையில் இருந்த அவனது பாட்டியிடம் விட்டிருந்தோம். பிறகு, இலங்கைக்கு வந்து மயூரனை அழைத்துக்கொண்டு அவுஸ்திரேலியா சென்றோம்.

 நான்கு வயதில் இருந்து அவன் அவுஸ்திரேலியாவில் படிக்கத் தொடங்கினான். ஒரு தாயாக அவனை வளர்த்த போதும் சரி, சக மனிதனாக அருகில் இருந்து பார்த்த போதும் சரி, அவன் அன்பானவனாகவே இருந்தான். பள்ளியில் கெட்டிக்காரன். தேவாலயத்தில் வாரம்தோறும் தன் கடமைகளை உற்சாகமாக நிறைவேற்றுகிறவன். அவனுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர்.

'பாலி-9� வழக்கில் அவன் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்று வரை எங்கள் குடும்பத்தில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. இப்போது அவனுக்கு இறுதித் தண்டனை வந்த பிறகு, அவனது வளர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள்.

ஒரு தாய் தன் மகனை எப்படியெல்லாம் அன்பாக வளர்ப்பாளோ, அப்படித்தான் நான் அவனை வளர்த்தேன். அவனை மட்டும் அல்ல மூன்று குழந்தைகளையுமே. இடையில் அவன் திசைமாறிப் போயிருக்கலாம். நண்பர்கள் தவறாக வழிகாட்டியிருக்கலாம். ஆனால், இப்போது அது பற்றி பேசுவதோ, ஆராய்வதோ பலரையும் காயப்படுத்தும்.

நான் அவுஸ்திரேலிய மக்களிடமும் அரசிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். அவனை மன்னித்து, கருணை காட்டும்படி கேட்கிறேன். ஒரு தாயாக நான் இதை மட்டுமே செய்ய முடியும். எனக்கு என் மகன் வேண்டும்!

நாங்கள் அவனை விடுவிக்க இந்தோனேஷியா நீதிமன்றத்தில் போராடினோம். அவுஸ்திரேலியா வழக்குரைஞர்களின் உதவியோடு இந்தோனேஷியா வழக்குரைஞர்கள் இயன்றவரை வாதாடிப் பார்த்தனர். எந்தப் பலனும் இல்லை

நாங்கள் ஏன் அவனுக்காக இவ்வளவு போராடுகிறோம் என்றால், தன் வாழ்வில் இழைத்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாக, சிறையில் மயூரன் சிறந்த மனிதனாக கடந்த 10 ஆண்டுகளாக வாழ்கிறான். தன்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் பிறருக்குச் செய்கிறான்.

நான் தேவாலயம் போய் என் மகனுக்காகப் பிரார்த்திக்கிறேன். சிறைக்குப் போய் அவனைச் சந்திக்கிறேன். இதுதான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. அவனை முதலில் வைத்திருந்த பாலி சிறை பற்றி வாசித்த போது, அது மிக மோசமான கெட்ட கனவாக இருந்தது. அவனை நேரில் பார்த்தபோது, என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை.

குமுறிக் குமுறி அழுதேன், அவன் என்னைத் தேற்றினான். அதன் பின்னரும் நான் சில முறை அவனைச் சந்தித்தேன். ஆனால் ஒருபோதும் அவனிடம், 'நீ இதைச் செய்தாயா?� எனக் கேட்டது இல்லை, கேட்கவும் விரும்பவில்லை.

இந்த உலகம் அவனைக் குற்றவாளி என்கிறது. அவன் செய்தது பயங்கரமான குற்றம் என்கிறது. ஆனால், அவன் என் மகன்... அவ்வளவுதான். நான் போனால், என்னிடம் தன் அவுஸ்திரேலிய நண்பர்கள் பற்றி விசாரிக்கிறான்

தன்னைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு வீடு பற்றி, தெரு பற்றி, தேவாலயம் பற்றி தகவல் கேட்கிறான். தங்கையிடமும் தம்பியிடமும் படிப்பு பற்றி பேசுகிறான். யோகா செய்யுமாறு சொல்கிறான்.

தான் சிறைக்குள் பைபிள் வாசிப்பதாகவும், தான் வரைந்த ஓவியங்கள், டி ஷர்ட் அச்சடிக்கும் தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டி, அதைப் போதைப் பழக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வுக்குச் செலவழிப்பதாகவும் சொல்கிறான். இதனால்தான் இன்னொரு முறை அவனுக்கு வாழும் வாய்ப்பை வழங்கக் கேட்கிறேன்.

அமைதியாகச் சொல்லிவிட்டு, அழுத்தமான மௌனத்தில் ஆழ்கிறார் ராஜனி.



'பாலி-9� வழக்கில் மரணதண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஆண்ட்ரூ சானும் மயூரன் சுகுமாரனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தவர்கள்; எனினும், நெருங்கிய நண்பர்கள் இல்லை. 2002-ம் ஆண்டுவாக்கில் நெருக்கமாகிறார்கள்.

சீனா வம்சாவளியான ஆண்ட்ரூ சான் குடும்பமும், இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்த குடும்பம்தான். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அவல வாழ்வுக்குப் பலியாகும் பெரும்பான்மையானவர்கள் தங்களின் பூர்வீகங்களைத் தொலைத்து அலையும் அகதிகளே. பாலியில் வைத்து இந்தோனேஷியா போலீஸாரிடம் ஒன்பது பேரும் சிக்கியதே ஒரு பாசப் போராட்டத்தின் பக்கவிளைவு.

தன் மகன் தவறான பாதையில் செல்கிறான் என அவனைத் திருத்தும் வழி தெரியாத லீ ரஷ் என்கிற அவுஸ்திரேலியர், அவுஸ்திரேலியா போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கிறார்.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் தன் மகன் ஸ்காட் ரஷ் போதை மருந்து தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகத் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் கடத்தல் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் தகவல் கொடுக்கிறார்.

அவுஸ்திரேலியா போலீஸ் இந்தத் தகவலை இந்தோனேஷியா போலீஸுக்கு சொல்ல, ஹெராயினோடு அவுஸ்திரேலியா விமானத்தில் ஏற இருந்த சிலர் கைதுசெய்யப்படுகிறார்கள்.

மயூரனை ஹோட்டல் ஒன்றில் வைத்து போலீஸ் கைது செய்த போது, அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் மீட்கப்படவில்லை. அன்று மாலையே ஆண்ட்ரூ சானைப் போதைப்பொருளோடு போலீஸ் கைதுசெய்ய, 'பாலி-9� வழக்கு இருவரையும் இறுகப் பற்றிக்கொள்கிறது.

No comments

Powered by Blogger.