Header Ads



பொத்துவில் முஸ்லிம்களை விரட்டியடிக்கும் சிங்கள மீனவர்கள் - தலையிடுவது யார்..?


(எம்.ஏ.றமீஸ்)

அனுமதி பத்திரமின்றி கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோர மீனவர்கள் கடற்கரை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை(28) மூன்றாவது நாளாகவும்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் போன்றோர் நீண்ட காலமாக தாம் மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத் தொழிலுக்கு உலை வைக்க முயற்சிக்கும் இச் செயலானது கண்டிக்கத் தக்கதாகும் என போராட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கரை வலை மீன்பிடித் தொழிலுக்கான அனுமதிப்பத்திரமின்றி பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக கரைவலை மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்காக கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் போன்றோர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு அவர்களிடமுள்ள மீன்பிடி உபகரணங்களை கைப்பற்ற எத்தணித்த பொழுதே குறித்த மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  மீனவர்கள் 'அரசே எமது பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுத்தா'' எமது தொழிலை சுதந்திரமாகச் செய்ய விடுங்கள்' 'எங்கள் தொழிலுக்கா தளத்தில் கை வைக்காதீர்கள்'போன்ற பல்வேறான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பினர். இது தவிர மண்ணெண்ணை பெற்றோல் போன்ற எரிபொருளை தமது உடலில் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாகவும் முயற்சித்த வேளை பிரதேச மக்களால் அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இது தவிர மீனவர்கள் தமது மீனவ உபகரணங்களையும் எரித்தனர்.

பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோர மீனவர் அமைப்பின் தலைவர் எம்.எல்.சஹாப்தீன் கருத்துத் தெரிவிக்கையில், சுமார் 30 வருடமாக கடற்றொழிலில் மீன்பிடித்து வந்த எம்மைத் தடுக்கின்ற பொழுது நாம் எங்கு செல்வது எமக்கு வேறு தொழில்களும் தெரியாது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை எப்படி ஓட்டுவது? இதற்கு அரசாங்கம் பதில் தர வேண்டும். திடீரென்று இங்கு வருகை தரும் மீன்பிடி உத்தியோகத்தர்கள் எமது கரைவலையினைத் தடுத்து உபகரணங்களை அள்ளிச் செல்வததென்றால் நாளை சாப்பாட்டுக்கு நாங்கள் என்ன செய்வோம்?

நாங்கள் சுனாமி அனர்த்தத்தின்போது அழிவினைச் சந்தித்தபோது எம்மைக் கவனிக்காத இவர்கள் எமது வயிற்றில் அடிக்க முற்படுகின்றபோது நாம் எவ்வாறு பொறுத்துக் கொள்வது? மொனறாகலை, அம்பாறை போன்ற பிரதேசங்களிலுள்ள சிங்கள மீனவர்கள் வேண்டுமென்றே எம்மை விரட்டுவதை அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் பார்த்துக் கொண்டு இருப்பது கண்டிக்கத் தக்கதாகும். எமது அமைப்பில் உள்ள அங்கத்தவர்களின் குடும்பத்தவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டதனால் உயிரை விடுவதுதான் சிறந்தது என அவர் தெரிவித்தார்.




3 comments:

  1. சேவா லங்கா மஜித் எங்கேயோ ?

    ReplyDelete
  2. அந்த சிங்களவர்கள் அனுமதிப்பத்திரம் எடுத்துள்ளார்களா?

    ReplyDelete
  3. Where is muslim congress and rest muslim ministers and mp's in order to stop?

    ReplyDelete

Powered by Blogger.