Header Ads



''முஸ்லிம் அரசியல்'' அதன் இலக்கு எது...?

-நஜீப் பின் கபூர்-

இந்த நாட்டு முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் சில கால கட்டங்களில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியை விட சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள.; ஆனால் இந்த விடயங்களை புள்ளி விபரரீதியில் எவரும் இதுவரை நிரூபித்துக் காட்டியதில்லை. மாறக சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்களும்கூட இதே குற்றச்சாட்டுக்களையே முன்வைத்து வந்திருக்கின்றனர். 

இந்தக் காட்டிக் கொடுப்பு எவ்வளவு தூரம் சென்றிருக்கின்றது என்று கேட்டால் ஒரு சந்தர்ப்பத்தில் அமீர் அலி மந்திரிப் பதவியைப் பெற்றுக் கொண்டு மைத்திரியை ஆதரித்தமைக்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அஸ்வர் சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி இருந்தார்.

அதே போன்று முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் முஸ்லிம்கள் எல்லோரும் மைத்திரியை ஆதரிக்கின்றார்கள் எனவே சிங்கள மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மஹிந்தவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே இதிலிருந்து காட்டிக் கொடுப்பு எந்தளவு உச்சத்திலிருந்திருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.
  
அறிவுள்ளவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் தேர்தலுக்குப் போட்டியிடுவதானால் அவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றெல்hம் கருத்துக்கள் மேலேழுவதற்கு காரணம் அறிவு மட்டம் குறைந்த சிலர் அரசியலுக்கு வந்து பார்க்கின்ற வேலைகள்தான் காரணமாக இருந்து வந்திருக்கின்றது.

அதே நேரம் உலக அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கின்ற போது படித்துப் பட்டம் பெற்றவர்கள்தானா நல்ல அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றார்களா என்று தேடினால் உண்மை அப்படியில்லை. நமது நாட்டின் அரசியலை எடுத்துக் கொண்டாலும் நல்ல அரசியல் தலைவர்களாக இருந்தவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருந்திருக்க வில்லை. 

உலகத் தலைவர்களின் வரிiசையில் வைத்து மதிக்கப்பட்ட ஸ்ரீமா பண்டாரநாயக்க கூட வெறும் எட்டாம் தரக் கல்வி அறிவு மட்டக்காரர்தான். அதே போன்று நல்ல ஜனரஞ்சக அரசியல் தலைவராக இருந்த ஆர்.பிரமதாச கூட பெரிய கல்விமான் அல்ல. எனவே நல்ல மனம் உள்ளவர்களும் பொதுப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களும் தாரளமாக அரசியல் பண்ணலாம் என்பது எமது கருத்து.

முஸ்லிம் சமூகத்தின் மனங்களை வென்ற அரசியல் வாதிகளான சேர் ராசீக் பரீட், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், மு.கா.தலைவர் அஷ்ரஃப் போன்றவர்கள் இன்றும் மக்களால்   மதிக்கப்படுகின்றார்கள் போற்றப்படுகின்றார்கள்.

கடந்த காலங்களில் ஆளும் தரப்பின் கைக்கூலிகள் முஸ்லிம்களுக்கு இன்னல்கள் கொடுத்த போது முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவாகள் கையாளாகாதவர்களாக இருந்து வேடிக்கை பார்த்து, தமது பட்டம் பதவிகளைப் பாதுகாத்து எப்படி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்று காய்களை நகர்த்திக் கொண்டிருந்த அந்த நாட்களில் அஷாட் சாலிதான் முஸ்லிம்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தார். என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அவரின் இந்த செயல்பாட்டிற்காக கண்டி அரசியலுக்கு  எந்தத் தொடர்புமில்லாத ஒருவராக அங்கு களமிறங்கிய போது முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கொடுத்த முதல் வாக்கை சாலிக்கு கொடுத்து அவரை கண்டி மாவட்டத்தில் நம்பர் வன் நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இதே அஷாட் சாலி புத்தளத்தில் தனது கட்சிக்கு வேட்புமனுவை ஐ.தே.க. கொடுக்க வில்லை என்ற ரோசத்தில் அங்கு தனது ஆட்களை தனியாக நிறுத்தி வோட்டுக் கேட்டார். அவரது ஆட்கள் மொத்தமாக சில நூறு வாக்குகளை யாவது அங்கு சேர்த்தெடுப்பதற்கு முடியாமல் போனது. எனவே ஐ.தே.க. வாக்குகளில்தான் அஷாட் சாலி அரசியலில் தன்னை ஒரு ஆளாக உருவாக்கிக் கொண்டார். 

ஆனால் இந்த அஷாட் சாலி முஸ்லிம் சமூகத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரு மனிதனல்ல. சிங்கள இனவாதிகளுக்கு ஒரு ஞானம் போல் முஸ்லிம்களுக்கு இந்த சாலி என்பதுதான் யதார்த்தம். இந்தக் குறிப்பை இங்கு பதிகின்றவனிடத்தில் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் உரையாடிக் கொண்டிருக்கும்போது அப்படியும் ஒரு ஆள் இந்த நேரத்தில் இல்லாதிருந்தால் முஸ்லிம் சமூகம்  நாதியற்றவர்களாக இருந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார். அது ஒரு நியாயமான வாதம் தான். 

ஆனால் இப்போது சாலி தனது அரசியல் இருப்புக்காக முஸ்லிம் சமூகத்தின் ஞானத்தாராகத் தொடர்ந்தும் தனது பாத்திரத்தை முன்னெடுக்கக் கூடாது அதற்கான தேவையும் தற்போது நாட்டில் இல்லை என்று ஒரு ஆலோசனையைநாம்  சொல்லி வைக்க விரும்புகின்றோம். சமகால அரசியலில் ஞானாத்தார் ஓரம்போய் செல்லக்காசக இருக்கின்ற இந்த நேரத்தில் அவரை ஹீரோவாக வளர்த் தெடுக்கின்ற வேலையை சாலி செய்யக் கூடாது.

இதற்கு நாம் நல்லதொரு  குறிப்பையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். அண்மையில் நுகேகொடையில் ஒரு பரபரப்பான அரசியல் கூட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் பிரதமரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரம நாயக்காவும் போய் இருந்தார். ஏன் கட்சி போகக் கூடாது என்ற  கூட்டத்திற்கு நீங்கள் வந்திருக்கின்றீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அவர் கொடுத்த பதில் 5001 ஆளாக அங்கு நிற்பதற்கு வந்திருக்கின்றேன் என்பதாக இருந்தது அவர் பதில். 

முஸ்லிம்களே புரிகின்றதா! 

எனவே அஷாட் சாலி தனது சமூகத்திற்கு ஆபத்தான நேரங்களில் தனது உயிரையும் துச்சமாக  மதித்து செய்த பங்களிப்புக்கு முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருப்பதில் தவறில்லை. என்றாலும் அஷாட் சாலி விடயத்தில் முஸ்லிம்கள் எச்சரிக்கையுடனே தமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.  
  
கடந்த வாரம் நாம் எழுதி இருந்த ஒரு கட்டுரையில் மைத்திரியை ஜனாதிபதியைக் கொண்டு வருவதில் கட்சிகள் பெற்றுக் கொடுத்த வாக்குகள் தொடர்பாக ஒரு கணக்கை சொல்லி இருந்தோம். அந்தக் கணக்கில் மு.கா.வின் வாக்கு வங்கி தொடர்பாக நீங்கள் ஏதும் குறிப்பிட வில்லையே என்று நண்பர் ஒருவர் என்னிடத்தில் குறைபட்டுக் கொண்டார். அந்தத் தேர்தலில் நீங்கள் சொல்கின்ற படி உங்களுக்கு எந்த வாக்கு  இருகக்வில்லை என்பது எனது கருத்து என்றேன். 

அது என்ன அப்படிச் சொல்கின்றீர்கள் என்றார் அந்த நண்பர். இல்லை உங்களுக்கு இருந்த வாக்கு வங்கியை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டுபோய் முஸ்லிம் சமூகம் மைத்திரியின் கலடியில் கொட்டி இருந்த நேரத்தில்தான் நீங்கள் வெறும் கைகளுடன், உங்கள் பாராளுமன்றப் பிரதிநித்துத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மைத்திரிக்கு ஆதரவு கொடுத்தீர்கள். நீங்கள் தீர்மானிக்கும் முன்னரே முஸ்லிம் சமூகம் கடந்த தேர்தலில் தீர்மானம் எடுத்து விட்டது. இதனால்தான் உங்கள் கணக்கை சொல்வதற்கு என்னிடம் இலக்கங்கள் கம்மியாக இருந்ததால் உங்கள் கணக்குப் பற்றி நான் கட்டுரையில் குறிப்பிடவில்லை என்றேன். 

எனது குத்துக் கதை மனிதனுக்குப் புரிந்து விட்டது. சரி நீங்கள் வழக்கமாகத் தேசிய அரசியல் பற்றித்தானே எழுதி வருகின்றீர்கள் ஏன் முஸ்லிம்  அரசியல் பற்றி ஏதாவது ஏழுத மாட்டீர்களா என்று என்னிடத்தில் கேட்டார். சரி அவர் போன்றவர்களுக்கு பதிலக இந்த முறை ஒரு கட்டுரையை எழுதிப்போடலாம் என்று தோன்றியது.

இப்போது வருகின்ற தேர்தலில் பாராளுமன்றம் போக எப்படி ஐ.தே.க.வுடன் கூட்டுப் போகலாம். எங்கு கால் பதித்தால் ஜெயிக்கலாம் என்றுதான் தற்போது மு.கா. சிந்திக்கின்றது. கட்சியைப் பற்றிச் சிந்தப்பதை விட அது பற்றித்தான் தலைமை இந்த நாட்களில் ஆர்வமாக இருக்கின்றது.  

மு.கா.வுக்கு கிழக்கு முதல்வர் பதவி கொடுப்பதற்கு விருப்பம் தெரிவித்து தாம் கொடுத்து  கடித்தை வாபஸ் வாங்கப்போவதாக சுதந்திரக் கட்சி கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பு முக்கியஸ்தராக இருந்த விமலவீர திசாசாயக்க மு.காவுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுத்திருக்கின்றார். அந்த எச்சரிக்கை அப்படி இருக்க...!

மு.கா.வின் இதயமாக விளங்கும் அம்பாறையிலும் இப்போது மு.கா.தலைவர் ஹக்கீமுக்கு எதிராக போர்க் கொடி தூக்கப்பட்டுள்ளது. கிழக்கு  முதல்வர் பதவியையும் அமைச்சர் பதவிகளையும் மையமாக வைத்து கடந்த வெள்ளி ஹக்கீமுக்கு எதிரான அர்த்தலுக்கு - ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது மு.கா. சிரேஸ்ட போராளிகள் என்ற அமைப்பு. வெள்ளிக் கிழமை ஜூம்மாத் தொகைழுகையுடன் பள்ளிக்கு வரும் கூட்டத்தை வைத்து வழக்கமாக முஸ்லிம் சமூகம் செய்கின்ற சம்பிரதாயப் போராட்டமாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். இது உணர்வுபூர்வமான போராட்டமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கு  தலைமைத்துவத்திற்கு விசுவாசமான கையாட்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தார்கள் என்பதையும் அங்கு  பார்க்கக்கூடியதாக இருந்தது. எனவே இதிலிருந்து கிழக்கில் ஹக்கீமுக்கு விசுவாசமான குழுவும் எதிரான குழுவும்  குறிப்பாக கருக் கட்டுவதாக இந்த நிகழ்வைப் பார்க்க முடியும் மாத்தரையில் மங்கள தலைமையில் நடந்த கறுவத் தடி விளையாட்டாக இவை அமையாது ஜனநாயக வழியில் அமைந்தால் போதும் என்பது எமது கருத்து.

நாம் இனிப் பதவிகளுக்கு ஆசைப்படாமல் முஸ்லிம்களின் நலன்களை மையமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் தீர்மானங்களை எடுப்போம் - நடப்போம், என்று மு.கா. தலைவர் சொல்லி இருந்தார் ஆனால் இப்போது மத்திய அரசிலும் மாகாண அரசிலும் மு.கா.வினர் தமக்கு அமைச்சுக்கள் வேண்டும் என்று போர்க் கொடி பிடித்திருக்கின்றார்கள் அவர்கள். எனவே பதவி கேட்க மாட்டோம் என்று மு.கா. கூறுவது வெறும் வார்த்தைப் பிரயோகம் மட்டுமே.

இறுதி வரை பதவிகளுக்குப் பின்னால் ஓடித் திரிந்து விட்டு, முஸ்லிம்களுக்கு தொந்தரவுகளைத் துன்பங்களை அன்று ஆளும் தரப்புக் கையாட்கள் செய்து வந்த நேரத்தில் ஊமைப் பாத்திரத்தில் நாடகமாடி, இறுதிக் கட்டம் வரை அரியாசனையில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று கூறுவதும் பதவி கேட்டு சண்டை பிடிப்பதும் வழக்கமான கதைதான். 

தானும் கட்சியும் சமூகத்தின் கோபப் பார்வையில் சிக்கி இருப்பது தலைவருக்கு இப்போது புரிகின்றது. இதிலிருந்து தப்பிக் கொண்டு அதன் மூலம் வருகின்ற தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை மீண்டும் கொள்ளையடித்து அமைச்சுப் பதவிகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியிலேயே இப்போது மு.கா. தலைமை இறங்கி இருக்கின்றது.

அடுத்து மு.கா.தலைவரின் கட்டுப் பாட்டில் இன்று அவரது பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ  இல்லை. எனவே பதவி பட்டங்களுக்கு இனியும் ஆசைப்பட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை தலைவரால் கொடுக்க முடியாது என்பது எமது வாதம். 

இதன் பின்னர் பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு  இதுவரை நாம் பதவி பட்டங்களுக்காக ஓடித்திரிந்தோம் என்பதனைத்தானே மறுபுறத்தில் இவர்கள் சொல்ல வருகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது. 

வருகின்ற பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியில் போட்டியிடுகின்ற எந்தவொரு முஸ்லிமும் வெற்றி பெற மாட்டார் என்பது எமது கருத்து. அத்துடன் அந்தக் கட்சியில் போட்டியிடுவதற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் இப்போது முன்வர மாட்டார்கள். என்ற நிலையே தற்போது இருந்து வருகின்றது.

சந்திரிக்க பண்டாரநாயக்காவைப் போன்றே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் நின்ற போதும் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அவர்களுக்கு - அந்தக் கட்சிக்கு வாக்களித்து இருந்தனர். அண்மையில் ராஜபக்ஷ இனவாதிகளை முன்னிருத்தி முஸ்லிம்கள் மீது கொடுத்த இன்னல்கள் காரணமாக அந்தக் கட்சியை முஸ்லிம்கள் ஒரு அச்ச உணர்வுடனே தற்போது பார்க்கின்றனர். 

தற்போதய ஜனாதிபதி மைத்திரி மீது முஸ்லிம்களுக்கு நல்லெண்ணம் இருந்தாலும் ராஜபக்ஷவின் இறுதிக்கால கட்டத்தில்  நடந்த வன்முறைகளின் காரணமாக முஸ்லிம்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து நெடுந்தூரம் விலகிப்போய் இருக்கின்றார்கள். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வக்குப்போட்டும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. தற்போது முஸ்லிம் கிராமங்களில் ஜேவிபி மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் பிரதேசங்களில் ஜேவிபி நடாத்துகின்ற கூட்டங்களில் முஸ்லிம்கள் தற்போது ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றார்கள். என்னதான் முஸ்லிம்கள் ஜேவிபி கூட்டங்களுக்குப் போனாலும் அதனைத் தங்களுக்குறிய வாக்குகளாக மாற்றிக் கொள்வதற்கு அந்த அமைப்பு கடினமாக குறிப்பாக புறம்பான ஒரு வேலைத் திட்டத்தை முஸ்லிம்களுக்காக வடிவமைக்க வேண்டி இருக்கும்.  

இந்தப் பின்னணியில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் பௌசி கூட சுதந்திரக் கட்சியில் அரசியல் செய்வதாக இருந்தால் தேசியப் பட்டியல் மூலமே பாராளுமன்றம் வருவதற்கு முயற்சிப்பதாகத் தெரிகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட அவருக்கு அந்த வாக்குறுதியை வழங்கி இருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.  

கள்ளத்தனமாக பணம் சேகரித்தவர்களும் மாபியக் குழுவினரும் பணம் பதுக்கி வைக்கின்ற முக்கிய இடமாக சுவிஸ் வங்கி இருந்து வருகின்றது. இங்கு வைப்புச் செய்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களை அந்த வங்கி பகிரங்கமாக அறிவிப்பதில்லை. அதனால் கள்ளத் தனமாக பணம் சம்பதித்தவர்கள் இங்கு பணம் வைப்புச் செய்வது வழக்கம்.

தற்போது இந்த நாட்டிலுள்ள பெரும் எண்ணிக்கையான முன்னாள் அரசியல்வாதிகள் பொது மக்களின் பணத்தை அந்த வங்கியில் கொண்டுபோய் குவித்திருக்கின்றார்கள். இவர்களைக்  தேடிக் கண்டறியும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுமானால் அதற்கு எமது உதவியைக் கோரினால் நாம் ஒத்துழைக்கத் தயராக இருக்கின்றோம். என்று இந்திய கூறி இருக்கின்றது. இப்படி சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் எந்த வித இலக்கோ நோக்கமே இல்லாத அரசியல் வாதிகளின் பின்னால் மந்தைகளை; போல் போய்க் கொண்டிருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

3 comments:

  1. யதார்த்தம் எடுத்து கூரப்பட்டுள்ளது. தொடர்ந்து எதிபர்கிறோம்.

    ReplyDelete
  2. யதார்த்தம் எடுத்து கூரப்பட்டுள்ளது. தொடர்ந்து எதிபர்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.