Header Ads



ரவூப் ஹக்கீம் கூறும் கழுத்தறுப்பு எது..? எங்கு...? யாரால்....?

-நவாஸ் சௌபி-

'தனக்கு எங்கு கழுத்தறுப்பு இருக்கிறதோ அங்குதான் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டி இட இருக்கின்றேன்' என்ற கருத்தை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் எங்கு போட்டி இடுவது என்பதை தனக்கு இருக்கும் கழுத்தறுப்பினை வைத்து ஹக்கீம் முடிவெடுப்பதாக கூறி இருக்கும் இக் கருத்தானது, தனக்கு ஒரு கழுத்தறுப்பு இருப்பதை முதலில் அவரே ஏற்றுக்கொள்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இதன்படி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஹக்கீம் போட்டி இடுகின்ற தொகுதி அல்லது மாவட்டம் அவருக்கான கழுத்தறுப்பு உள்ள இடமாக பார்க்கப்பட வேண்டும் என்ற செய்தியை அவர் இப்போதே அறிவித்துவிட்டார் என்பதும் இதில் முடிவாகிவிட்டது.

ஆனாலும் தனக்கு எதிரான கழுத்தறுப்பை முறியடித்து தான் ஒரு சாணக்கியமான தலைவர் என்பதை நீரூபித்துக் காட்டவே இக்கருத்தை ஹக்கீம் ஒரு சவாலாக வெளியீட்டுமிருக்கிறார். 

அப்படியானால் இந்தக் கழுத்தறுப்பு என்பது எது?இது எங்கு இருக்கிறது? இது யாரால் இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு விடைதேட வேண்டிய ஒரு அவசியத்தை கட்சியில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தி இருப்பதோடு அரசியல் அவதாணிகளையும் இது சற்று சிந்திக்க வைத்திருக்கிறது.

ஹக்கீம் தனக்கு எதிரான கழுத்தறுப்பு என்று குறிப்பிடுவதை பாராளுமன்றத் தோர்தலில் அவரைத் தோல்வியடையச் செய்கின்ற ஒரு சதி முயற்சியாகும் எனக் கருதிக் கொண்டால், அந்தக் கழுத்தறுப்பு கண்டியிலா? அம்பாறையிலா? மட்டக்களப்பிலா? திருகோணமலையிலா? என்ற இடத்தை தேட வேண்டி இருக்கிறது. அத்துடன் அது யாரால் என்ற சந்தேகத்தைப் போக்க அது முஸ்லிம் காங்கிரஸூக்கு புறம்பாக உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளா? அல்லது முஸ்லிம் காங்கிரஸினுள் இருக்கின்றவர்களா? அல்லது இந்த இரண்டு தரப்பிலும் இதற்கானவர்களின் கூட்டு இருக்கிறதா? இவை எதுவுமில்லாமல் மக்கள் எதிர்ப்பாக இது இருக்குமா? என்று இதனை இன்னும் சற்று உரித்துப் பார்க்க வேண்டியும் இருக்கிறது.

ஹக்கீமுக்கு எதிரான கழுத்தறுப்பு எங்கு இருக்கிறது என்ற இடத்தை கண்டுகொள்வதில் அதற்கு யார் காரணமானவர்களாக இருக்கலாம் என்ற ஊகங்களும் உதவக்கூடியதாக இருக்கிறது இதன்படி பார்த்தால் இந்தக் கழுத்தறுப்புக்கு காரணமானவர்கள் ஏனைய முஸ்லிம் கட்சிக்காரர்களோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ்காரர்களோ அல்லது மக்களோ என அவர்கள் யாராக இருந்தாலும் அது அதிகம் கிழக்கு மாகாணத்திலேதான் இருக்க கூடும் என ஊகிக்க முடிகிறது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் பலமான ஆதரவும் பலவீனமான எதிர்ப்புக்களும் இருப்பது கிழக்கு மாகாணத்தில்தான் என்பது யதார்த்தமாகும்.

இதன்படி கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் எந்த மாவட்டத்தினை ஹக்கீம் தனக்கான கழுத்தறுப்பு உள்ள மாவட்டமாக கருதுகின்றாரோ? அதிலும் முஸ்லிம் காங்கிரஸின் சமகால நிகழ்வுகளைப் பார்த்தால் அது அம்பாறை மாவட்டத்தைத்தான் குறிவைத்துக் கூறப்படுகிறதா? என்பதையும் சற்று மிகையாக நம்பக்கூடியதாக இருக்கிறது.

அடுத்து இந்தக் கழுத்தறுப்பு யாரால் என நோக்குவதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வெளியே ஏனைய கட்சிக் காரர்களை இதற்கானவர்களாகப் பார்ப்பதில் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்காரர்கள் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் நேரடியாக அங்கம்வகிக்கும் அரசியல்வாதிகள் என இருதரப்பினரையும் கூறலாமா? எனும் சந்தேகம் எழுவது நியாயமானதாகவே இருக்கிறது.

இதில் றிசாத் பதியுத்தீன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் அரசாங்கத்தை விட்டு விலகி மக்களை சந்திக்கின்ற பயணத்தை முதலில் அவர் கிழக்கிலிருந்துதான் ஆரம்பித்தார். அதன்போது கிழக்கு மக்கள் ஒரு தேசிய தலைவர் என்ற அந்தஸ்த்துக்கு அவரைத் தூக்கிச் சுமக்கவும் செய்துவிட்டார்கள்.

அதன்பிறகு தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றதும் கிழக்கில் தனது கட்சியை விஸ்த்தரிக்கும் பணிகளை றிசாத் மிகவும் தீவிரமான முனைப்புடன் செய்துவந்தார். தற்போது எதி;வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பொருத்தமான வேட்பாளர்களை கிழக்கில் சரியாக நிறுத்துவதற்கான முன் ஆயத்தங்களையும் முன்னெடுத்துவருகின்றார்.

மேற்படி றிசாத்தின் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு தனக்கான கழுத்தறுப்பு தொடர்பான கருத்தினை ஹக்கீம் வெளியிட்டிருக்கலாம். கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஹக்கீமும் றிசாத்தும் ஒன்று சேர்ந்து பேசிய ஒற்றுமைப் பிரச்சாரங்கள் தற்செயலாக நிகழந்த ஒரு அரசியல் விபத்தாகவே பார்க்கப்படல் வேண்டும் மாறாக அவர்கள் இருவருக்கிடையிலும் பலமான ஒரு எதிர்ப்புச் சுவர் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2009 ஜனவரியில் றிசாத்தை நோக்கி மிகவும் பகிரங்கமாக ஹக்கீம் ஒரு சவாலை விடுத்தார் : முஸ்லிம்கள் கணிசமாகவுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறக்கூடிய எந்த மாவட்டமாக இருந்தாலும் அந்த மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்  றிசாட் பதியுத்தீனுடன் தான் தனித்து நின்று போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறு போட்டியிடுவதற்கு தைரியமாக முன்வந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தான் தனித்து நின்று பயப்பிடாமல் அவருக்கெதிராகப் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்றே அந்த சவால் விடுக்கப்பட்டது.

அப்போது ஹக்கீமால் விடுக்கப்பட்ட அந்த சவாலுக்கும் இப்போது கூறுகின்ற இந்தக் கழுத்தறுப்புக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தினால் ஹக்கீம் கூறும் கழுத்தறுப்பு றிசாத் மூலமானதாக இருக்கும் என்றும் ஊகிக்கலாம்.

அடுத்தபடியாக ஹக்கீம் கூறும் கழுத்தறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படலாம் என்று ஊகிப்பதில் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டி இடவுள்ளதாக ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையும்கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட உடன்படிக்கையும் தடையாக இருந்தாலும் மைத்திரியின் வெற்றியின் பின்னர் சுதந்திரக் கட்சி பலம் பெற்றிருக்கிறதோ இல்லையோ ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெற்று வருக்கின்றது என்ற அடிப்படையில்இந்த ஊகத்தினையும் புறக்கணித்துவிட முடியாமல் இருக்கிறது.

தற்போது முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வாக்குகளை அதிகரிப்பதற்கான தந்திரோபாயங்களை அக்கட்சி மேற்கொண்டுவருகின்றது. இதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தயாகமகே அவர்கள் மூலமாக ஐக்கிய தேசியகட்சியின் அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம் பிரதேசங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டும் வருவதனை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸை அம்பாறை மாவட்டத்தில் பலவீனப்படுத்துவதில் தயாகமகே அதிக பங்களிப்பு செய்பவராக இருப்பார் என்பதற்கு அண்மைக்காலமாக அவர் விடுத்திருக்கும் அறிக்கைகள் ஆதாரமாகின்றன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஸீர் அஹமட் பதிவி ஏற்பு செய்ததை அடுத்து,முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் ஆட்சி அமைக்காதுஐக்கிய தேசிய கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். என தயாகமகேயின் அறிக்கை ஒன்று வெளியானது அதில் முஸ்லிம்கள் நூற்றுக்கு நூறு வீதம் ஐக்கிய தேசிய கட்சியையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தார்கள். எனவே முதலமைச்சர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். (நன்றி : வீரகேசரி 2015.02.07)

இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் மைத்திரிக்கு அளித்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் மீதான ஆதரவினாலேயே அளிக்கப்பட்டிருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காளிப்பார்கள் இதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தடையாக இருந்துவிடக் கூடாது என்று தயாகமகே இப்போதே காய்நகர்த்துகிறாரா?

மேலும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருப்பது தொடர்பில் தயாகமகே வெளியிட்ட அறிக்கையை  2015.02.08 ஞாயிறு வீரகேசரி 'கிழக்கில் மு.கா ஆட்சியை தொடரவிடமாட்டோம்' என தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது. அதில் அவர் கிழக்கு மாகாணத்தில் மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. எனவே மக்கள் ஆணைக்கு முரணாக அமைக்கப்பட்ட ஆட்சியை  இரண்டு வாரங்களுக்குக் கூடத் தொடரவிடமாட்டோம் எனவும் சவால் விடுத்தார்.

தயாகமகே குறிப்பிட்டது போல் முதலமைச்சரை நியமிக்க முடிந்த போதிலும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பதில் இருந்த இழுபறி தற்போதுதான் ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு காரணமாகலாம்.

இவை ஒருபுறமிருக்க மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான ரவூப் ஹக்கீம் ஓர்; இனவாதி எனவும் தயாகமகே ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறார். சிங்களவர் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வரமுடியாது என ஹக்கீம் கூறியதாகக் கூறி அதற்கான மறுப்பை இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
(நன்றி : ஜப்னா முஸ்லிம் 24.02.2015)

இப்படியாக தயாகமகே விடுத்திருக்கும் அறிக்கைகளை ரணிலும் கண்டும் காணததுமாக இருப்பதுபோல் இருக்கிறார்.உள்ளார்ந்த ரீதியாக முஸ்லிம் காங்கிரஸை கூடவே வைத்திருந்து பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான் ரணிலும் இருக்கின்றாரோ?

இவ்வாறு ஏனைய கட்சிகளின் ஊடனா கழுத்தறுப்புக்கள் இருப்பதற்கு அப்பால் முஸ்லிம் காங்கிரஸினுள் கழுத்தறுப்பு இருப்பதாக ஊகிக்க முடிந்தால் அது யாரால் என்பதை ஹக்கீம்தான் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் வெளியில் இருக்கும் எதிரி கண்ணுக்குத் தெரியக் கூடும்.  ஆனால் கூடவே இருக்கின்ற எதிரி கண்ணுக்குத் தெரியாத ஓன்று. இதனடிப்படையில் ஹக்கீம் கூறும் கழுத்தறுப்பு கட்சியினுள் யாரால் ஏற்படலாம் என்பதை அவர்தான் வெளிப்படுத்த வேண்டும்.

மக்கள் மத்தியிலும் இன்று ஹக்கீம் மீதான் அதிருப்தி கோஷங்கள் கட்சிக்கு வெளியில் இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் அக்குறணையில் ஹக்கீம் எதிர்ப்பு அமைப்பு என்ற ஒன்று எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உருவாகியும் இருக்கின்றது.

அதுபோன்றுதான் இன்று ஊர் ஊராக ஹக்கீமுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் திறந்த மடல்கள் எழுதப்பட்டு அவைகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படவும் செய்கின்றன. அண்மையில் இவ்வாறான மடல்கள் பொத்துவில், ஒலுவில் ஊர்களிலிருந்து எழுதப்பட்டுமிருக்கின்றன.

மேலும் இன்று குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் புத்திஜீவிகள் அமைப்பு எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான உரையாடல்களை ஊர் ஊராகச் செய்துவருகின்றன. இதில் அதிகமாக முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்திகொண்டவர்கள் உள்ளடங்குவதாகத் தெரிகிறது. இவ்வுரையாடல்கள் தற்போது சம்மாந்துறை, கல்முனை ஆகிய இடங்களில் நடைபெற்றும் இருக்கின்றன.

இவற்றின்படி மக்களின் மூலமான கழுத்தறுப்பு என்பதையும் ஹக்கீம் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்;. இதனை அவர் போட்டியிடும் இடத்தை வைத்தே நாம் தீர்மானிக்கவும் முடியும். இப்போது இது ஒரு ஊகம் மாத்திரமே.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளம் வரும் முன் அணைகட்டுவது போல் தனக்கு ஒரு கழுத்தறுப்பு வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக ஹக்கீம் இம் முடிவை அறிவித்திருக்கின்றாரோ? என்றும் இதனை மறுபக்கம் சிந்திக்க முடிந்தாலும், சமகாலத்தில் ஹக்கீம் தொடர்பான விமர்சனங்கள் அதிகமாக அதிருப்தி கொண்டதாகவே இருப்பதனால் இந்த கழுத்தறுப்பு அவருக்கு இருக்கும் என்று அவர் இப்போதே ஊகித்துக்கொண்டார் என்றுதான் இதனை எடுக்க வேண்டியும் இருக்கின்றது.

No comments

Powered by Blogger.