Header Ads



வெற்றிக்கு வழிசமைத்த மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா..?

(சத்தார் எம் ஜாவித்)  

வரம்பு மீறிய இனவாதச் செயற்பாடுகளுக்குள் குமுறிக் கிடந்த சிறுபான்மை மக்கள் அவற்றிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரு வகையான உள்ளார்ந்த ஆதங்கத்துடன் அபாயத்தை எதிர் கொண்டிருந்த வேளையில்  மைத்திரி என்ற ஒரு மனிதரின் மனித நேயக் கருத்துக்கள் மக்களின் மனங்களைக் கவர்ந்து அவரின் வெற்றிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வாக்களிக்க வழி சமைத்தது எனலாம்.

இவ்வாறு மக்கள் வாக்களித்போதிலும் பூரணமாக அறியுமளவிற்கு பிரபல்யம் குறைந்த ஒருவரின் வரலாறு தெரியாமல் அவரை ஆதரித்ததன் மூல நோக்கம் பெரும்பான்மை மக்களுக்குள்ள ஜனநாயக விழுமியங்கள் சிறுபான்மையினரிடத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வாக்களித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவதாணிக்கும்போது  தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்பும் பல சவால்களைக் கொண்டதாகவே நோக்கப்படுகின்றது. தேர்தல் முடிவு வந்த இறுதி நேரத்திலும் கூட மஹிந்த அரசால் சதிமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட விதங்களைப்  பார்க்கும்போது மைத்திரி அரசாங்கத்திற்கு இன்னும் பல சவால்கள் இருக்கின்றமையையே அறிய முடிகின்றது.

இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவர்களில் அதிகமானவர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்தவர்களே என்பதால் தமது நலன்களில் அக்கறை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கைகள் காணப்படுவது மனித இயல்பு என்றாலும் அன்மைய இரண்டு தஸாப்த அரசாங்கங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் மிகவும் துன்பகரமான ஆட்சிக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்வின் காலம் என்றால் அதனை இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இலகுவில் மறந்து விட முடியாதளவிற்கு அவரின் குடும்ப ஆட்சி முத்திரை பதித்துவிட்டது.

குடும்ப ஆட்சியின் அதிகாரங்களும், அவர்களின் தான்றோன்றித்தனமான செயற்பாடுகளும் நாளாந்தம் மக்களின் மனங்களில் பிச்சைக் காரணின் புண் போன்று கவலைகள் பெருகிக் கொண்டே போயின. அரசியல் வாதிகளாக இருக்கட்டும், மதத்தலைவர்களாக இருக்கட்டும் ஏன் அவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருக்கட்டும் அவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்டவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியவில்லை அந்தளவிற்கு சர்வாதிகரம் தாண்டவமாடியது.

அரச அமைச்சுப் பொறுப்புக்கள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுகுள் வைத்துக் கொண்டு அமைச்சர்களை கைம்பொம்மைகளாக பெயரளவில் அமைச்சர்களாக வைத்திருந்தமை போன்ற சர்வாதிகார கலாச்சார அரசியலே மஹிந்த கம்பனியின் அரசமைப்பாக காணப்பட்டது.

எந்த அவிற்கு பொதுச் சொத்துக்களை அனுபவிக்க வேண்டுமோ அந்தளவிற்கு அனுபவித்தனர் இவற்றை அனுபவிக்க துணைபோன மற்றொரு முக்கிய விடயம்தான் பாதுகாப்பு இது மஹிந்தவின் சகோதரனின் கையில் இருந்ததால் அவர் தான்தான் ராஜா என்று எதிரிகளை துண்டாடும் செயற்பாடுடையவராக காணப்பட்டார்.

சிறுபான்மை மக்களின் விடயத்தில் வரலாறு காணாதளவிற்கு துன்பத்தை அனுபவிக்க பொதுபல சேனா என்ற இனவாதம் அரக்கனைத் தூண்டிவிட்டு கூத்துப்பார்த்தவர் மட்டுமல்லாது பேருவளையில் இடம் பெற்ற கலவரத்தின் சூத்திரதாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்தான்  இவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் சண்டித்தனம் மிக்கதான கூட்டமே அதிகமானவையாக மக்கள் அடையாளங் கண்டு கொண்ட விடயமாகும்.

சிறுபான்மை மக்களையும் தமக்கு எதிரானவர்களையும் பகிரங்கமாகவே விரலை நீட்டிக் அச்சுறுத்திய விடயங்கள், அனுபவித்த சுகபோகங்கள் எல்லாம் மக்களின் கண்ணீராக இன்று மக்கள் மத்தியில் வரமுடியாதளவிற்கு இறைவனால் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் எதிரணiயினர் இனித்தான் அவர்களுக்கு சிவராத்திரி கொண்டாடப்படவிருக்கி;ன்றது எனவும் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயக நாடு என்ற வகையில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதி அந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே ஜனாதிபதியாவார் அந்தவகையில் அனைவரதும் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர் அவரே மக்களுக்கு ஒரு துன்பம் இடம்பெற்றால் வகை சொல்ல வெண்டியவர். இதுவே ஜனநாயகத்தின் முதல் அஸ்திவாரம் ஆனால் இது தெரியாத ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தியவரே மஹிந்த.

பொதுபல சேனா என்ற இனவாத அரக்கர்கள் தாண்டவமாடிய விடய்ஙக்ளுக் எல்லாம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறைகூறி அச்சுறுத்திய மஹிந்த தமக்கு இப்படியொரு நிலை வருமென நினைத்திருக்கா போதும் மக்கள் இறைவனிடத்தில் கொண்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பு இன்று மக்களை சந்தோசமடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.

மஹிந்தவைப் பொருத்தவரை அவரின் குடும்பத்திற்கே ஜனாதிபதியாக இருந்தாரே தவிர மக்களுக்கு அவர் பெயரளவில்தான் ஜனாதிபதியாக இருந்துள்ளார். மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? பாராளுமன்றத்திற்கே வரமுடியாதளவு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பிச்சை கேட்டும் அளவிற்கு அவரின் ஆட்சி இருந்துள்ளதற்கு இதனைவிட வேறு சான்றுகள் தேவiயில்லை.

இவ்வாறன துரோகத்தனமான அரசியல் நடைமுறைகளைப் பார்க்கும் போது மக்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியையே கேட்கின்றனர். என்றாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மக்கள்தான் ஆட்சியாளர்களாக ஆகிவிட்ட நிலைமைகள் ஒவ்வொரு வாக்காளர்கள் மத்தியிலும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவகையில் பார்க்கும்போது அரசியல் வாதிகளை மக்கள் கட்டுப்படுத்தும் அல்லது ஆட்சியைத் தீர்மாணிக்கும் சக்திகளாக மாறிவிட்ட ஒரு புதுயுகம் இலங்கையில் தோன்றியுள்ளது என்றே கூறலாம். கடந்த தேர்தல் வெற்றியை எந்தவொரு அரசியல் வாதியும் எங்களால்தான் மைத்திரி வென்றார் என்ற கதைக்கு இடமில்லை எந்த அரசியல் வாதியும் சொல்லாமலே மக்கள் அரசியல் வாதிகளுக்கு முன் ஆட்சிமாற்றத்தை தீர்மாணித்து விட்டனர். என இந்த விடயத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் உரிமை கோர முடியாது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இன்று ஒருசில வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிராக அவற்றை மாற்ற வேண்டும் என்ற வகையில் மக்கள் புரட்சிகள் ஏற்பட்டு ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும், சண்டைகளும் அதன் மூலம் உயிர் இழப்புக்களும் கூட ஏற்பட்டுள்ள நிலைமைகளை அவதானிக்கும் இக்கால கட்டத்தில் இலங்கை மக்கள் புரட்சிகள் இன்றி சரியான ஜனநாயக கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்மை ஒரு படிப்பினையாகவே நோக்கப்படுவதாக சமாதான விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பதற்கு ஒப்பாக மக்கள் பட்ட துன்ப துயரங்களும், கண்ணீரும் வீண் போகவில்லை ஒட்டு மொத்தமாக குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நோக்கி வீசிய கற்களின் பலனாக இன்று மக்கள் ஏதோ ஒருவிதத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் சமாதானமும் ஒற்றுமையும் வேண்டும் என்பதற்காகவே.

மேற்படி விழுமியங்களையே மனித சமுகம் விரும்புகின்றது ஆனால் அதற்கு மாற்றமான வகையில் மஹிந்த ஆட்சி மக்களை நிம்மதியிழக்கச் செய்ததுடன் யுத்த காலத்தில் அச்சத்தினை விட மோசமாக கடந்த 2012, 2013, 2014 ஆண்டு காலங்கள் காணப்பட்டன.

யுத்த காலத்தைப் பொருத்தவரை வெளியில் சென்றால் குண்டு வெடித்தால் அத்தோடு முடிந்து விடும் ஒருவரின் வரலாறு ஆனால் மஹிந்தவின் ஆட்சியின் பின்னைய மூன்று வருடங்களும் மக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களை புற்று நோய்போல் மரணிக்கச் செய்தது என்றே கூறலாம். அந்தளவிற்கு கீழ்த்தரமான முறையில் மக்கள் நடாத்தப்பட்டனர்.

எனவே இவற்றிற்கெல்லாம் கிடைத்த மாபெரும் வெற்றியாக மைத்திரிபால சிறிசேனவை மக்கள் வெற்றி பெறச் செய்தள்ளனர். இந்த வெற்றி வெறும் வெற்றிக் களிப்பாக பார்க்காது கடந்த பல சகாப்த காலங்களாக வடகிழக்கு உள்ளிட்ட இலங்கைவாழ் சிறுபான்மை மக்கள் பட்ட துன்பங்களுக்கு விடிவு பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே புதிய அரசாங்கம் செயற்பட வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளை தற்போது சற்று நிறுத்திவிட்டு புதியதொரு சமாதான இலங்கையை இன, மத, பேதமின்றி சிறுபான்மை பெரும்பான்மை என்ற கர்வமின்றி இனவாத்திற்கு துணைபோகாது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான பணியைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையே மக்கள் புதிய அரசாங்கத்திற்கு  தெரியப்படுத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.