Header Ads



சிறுநீரக நோயாளர்கள் காணப்படும் பிரதேசங்களில், சுத்தமான தண்ணீரை விநியோகிக்க முன்னுரிமை - ஹக்கீம்


-டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்-

சிறுநீரக நோயாளர்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் சுத்தமான தண்ணீரை விநியோகிப்பதற்கு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து செயல்பட தீர்மானித்திருப்பதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

புதிதாக நீர்மாணிக்கப்பட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேற்கு மற்றும் தெற்கு பிரதேச சேவை மத்திய நிலையத்தின் புதிய கட்டிடத் தொகுதியை மக்கள் உடைமையாக்கும் வைபவம் இரத்மலானை, அங்குலானையில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற பொழுது உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

5 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் திறந்து வைக்கப்படுவதோடு தெஹிவளை, பாணந்துறை, களுத்துறை உட்பட அநேக பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதில் நிலவிய குறைபாடுகள் நீங்குவதோடு திட்டமிட்ட அடிப்படையில் உரிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா என்ற அமைப்பு 370 மில்லியன் ரூபாய்களை வழங்கியிருந்தது. 

அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தமது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்த பிரகாரம் சிறுநீரக நோயாளர்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனடிப்படையிலேயே அரசாங்கத்தின் 100 நாள் செயல்திட்டத்தில் நீர் வழங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் முன்னுரிமை அளிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன். 

நீர் வளம் என்பது இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தூய நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரை 95 சதவீதமானவர்கள் மின்சார வசதியை பெற்றிருந்த போதிலும், அதில் பாதித் தொகையினருக்கும் குறைவானவர்களே சுத்தமான நீரைப் பெற்று வருகின்றனர். சுத்தமான நீரை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் பொறுப்பு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரியது. 

சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்புக்கு சுத்தமான நீர் கிடைக்காமையும் முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன். இதனை நிவர்த்தி செய்வதற்கு ஓர் அமைச்சரவை உபகுழுவை நியமிக்கவும் புதன்கிழமை (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. 

நீர் வழங்கல் தொடர்பான செயல்திட்டங்களுக்கு உள்நாட்டு வங்கிகளை பெரிதும் நம்பியிருந்தாலும் ஜப்பானிய அரசாங்கம் முன்னரைப் போலவே சலுகை அடிப்படையில் கடன் உதவிகளை வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். 

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் நாடு உரிய பங்களிப்பைச் செய்த அதேவேளையில், அதற்கு சமாந்திரமாக நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் அதிகம் உதவிகளை வழங்கியுள்ளது. அதற்காக அந் நாட்டு அரசாங்கத்திற்கு நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். 

No comments

Powered by Blogger.