Header Ads



அரசியல் அதிரடி - புதிய மாற்றங்கள்...!

கூண்டோடு பலர் வருவார்கள் என்ற தகவல்கள் வெளியானபோது அரச தரப்பினர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம். இது வழமையான கதை என்றுதான் அவர்கள் பார்த்துள்ளார்கள். இறுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தலைமைக்கு கொஞ்சம் அதிர்வைக் கொடுத்திருப்பதாகத் தகவல். 

மேலும் அமைச்சர்கள் போகாமல் இருப்பதை உறுதிப்படுத்த அமைச்சரவையில் உடனடியான மாற்றம் செய்யப்படும் என்கிறார்கள். பாயக்கூடியவர்கள் என அடையாளம் காணப்படுவோருக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கப்படுமாம். சலுகைகள்?

அதேபோல எதிர்த்தரப்பிலுள்ளவர்களில் வரக்கூடியவர்களை வரவேற்கவும் ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகக் கேள்வி! அமைச்சர் பதவிகளைவிட வேறு பேரங்களுக்காகவும் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல். 
பொது வேட்பாளராகப் போனவருக்கு அவர் கேட்ட பிரதமர் பதவியைக் கொடுக்க தலைமை இறுதிக்கட்டத்தில் தயாராகத்தான் இருந்ததாம். ஆனால், அதற்குள் அவர் பஸ்ஸில் ஏறிவிட்டார்.

அடுத்த நெருக்கடி

அரச தரப்பு அடுத்த கட்ட நெருக்கடி ஒன்றை பட்ஜெட் வாக்கெடுப்பின் போது எதிர்கொள்ளலாம் என்கிறார்கள். கட்சி மாறியவர்களைத் தவிர மாறப்போகும் சிலரும் எதிர்த்து வாக்களிக்கலாம் என்கிறார்கள். இது தலைமைக்கு மற்றொரு நெருக்கடியைக் கொடுக்கலாம். 
அமைச்சர் நவீன் தமது அமைச்சு மீதான விவாதத்தில் பங்குகொள்ளவில்லை. அன்றைய தினம் அவரை பாராளுமன்றத்திலும் காணவில்லை. தமது அமைச்சு மீதான விவாதத்தில் பங்குகொண்டு பதிலளிக்காத ஒரேயொரு அமைச்சர் அவர்தான். 

அவரும் வெள்ளிக்கிழமை கட்சி மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அன்று அவர் வரவில்லை. தன்னுடைய முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அவர் அறிவித்துள்ளார். அதிர்ச்சிகள் தொடரலாம்.

குழப்பத்தில் தலைமைகள்

எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல் நிபந்தனையற்ற ஆதரவு என அறிவித்த மலையகக் கட்சிகள் பிந்திய நிலைமைகளால் குழப்பத்தில் இருப்பதாகத் தகவல். மலையகத்தில் துரையும் அவசரமாக சிறிகொத்தாவுக்குப் போய்விட்டார். மலையக மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்க்காமல் துரை கட்சி மாறியிருப்பாரா என்ற கேள்வி மலையக அரசியலில் எழுப்பப்பட்டுள்ளது. 

ஏனைய எம்.பி.க்கள் சிலரும் குழப்பத்துடனேயே இருப்பதாகத் தகவல். அடுத்துவரும் தினங்களில் மேலும் சிலர் தாவலாம் என்பதால் நிபந்தனையற்ற ஆதரவு என்ற தமது முன்னைய அறிவிப்பு அவசரப்பட்ட அறிவிப்போ என்ற சந்தேகம் தலைமைகளுக்கே ஏற்பட்டுள்ளதாகத் தகவல். 

தகவல் இருட்டடிப்பு

பொது வேட்பாளர் குறித்த செய்திகளை இருட்டிப்புச் செய்ய வேண்டும் என அரச தலைமை உத்தரவிட்டதோ என்னவோ அரச தரப்பு ஊடகங்கள் அனைத்தும் அது பற்றிய செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பாகவே அரச தரப்பு ஊடகங்கள் காட்டிக்கொள்ளவில்லை. 

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. தமது ஊடகங்களில் செய்தி வரவில்லை என்பதால் மக்கள் தெரிந்து கொள்ளாமலா இருக்கப்போகின்றார்கள். நேரலையிலேயே பல இலட்சக்கணக்கானவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டனர். அரசின் ஊடகங்கள் மூலம்தான் செய்திகளை அறிய வேண்டும் என்ற நிலையில் இன்று யாரும் இல்லை!

No comments

Powered by Blogger.