Header Ads



''உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்''

எனக்கெதிராக செயற்படுபவர்களே கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியாதீர்கள் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து காலத்துக்குக் காலம் வெளியே சென்றவர்களும் உள்ளே வந்தவர்களும் உள்ளனர். பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியை விட்டுப் போனதில்லை. ஏனென்றால் நான் கட்சியை நேசிப்பவன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பலரது பைல்கள் என்னிடமுள்ளது. நான் அவற்றை மேலே எடுப்பதில்லை. எனினும் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியக்கூடாது. இரவில் ஒன்றாய் அமர்ந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு காலையில் வெளியில் சென்று முதுகில் குத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரம் - திருகோணமலைக்கான வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அநுராதபுரத்தில் நடைபெற்ற போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் எஸ். எம். சந்ரசேன, திஸ்ஸ கரலியத்த, விமல் வீரவன்ச உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;

‘அராபிய வசந்தம்’ என்ற பெயரில் அரபு நாடுகளில் நடப்பவைகளை நாம் யாவரும் அறிவோம். சிரியாவில் இன்றும் யுத்தம், லிபியாவில் கடாபியைப் படுகொலை செய்தனர். எகிப்தியத் தலைவரை சிறையிலடைத்தனர். அவருக்குப் பதிலாக இராணுவத்தை நியமித்துள்ளதுடன் அவரை சுதந்திரமாக இயங்கவிடவில்லை. இவ்வாறு முழு வளைகுடாவையும் ஸ்தம்பிக்கச் செய்தது மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளே.

சூடானை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளனர். அன்று இலங்கையிலும் அவர்கள் இதனையே செய்ய முற்பட்டனர். பயங்கரவாதத்துக்கு தூண்டுதலளித்தனர். புலிகளுக்கு நிதி வழங்கினர். அதற்கான சாட்சி எம்மிடமுண்டு.

புலிகளுக்குப் பணம் கொடுத்தே அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்தப் பார்த்தனர். ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகாவின் காலத்தில் இவை நடந்தன. இன்று அவர்கள் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர். ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். அவர்களின் ஊடக சுதந்திரம் பற்றி

எமக்குத் தெரியும். இதுதான் அவர்களின் வரலாறு.

எமது கட்சியிலிருந்து கட்சிச் செயலாளர்கள் எத்தனையோ பேர் போகின்றார்கள் வருகின்றார்கள் அதற்குக் குறைவில்லை. மூன்று செயலாளர்கள் போய் திரும்பி வந்துள்ளார்கள். அவர்களது பெயரை நான் குறிப்பிடப் போவதில்லை. இது சகலரும் அறிந்ததே.

இங்கிருந்து போய் அங்கு எதிர்பார்த்தது நடக்காவிட்டால் மீண்டும் இங்குதான் வரவேண்டும். ஒன்றாக இருந்து ஒன்றாக உண்டு குடித்துவிட்டு இரவில் அப்பமும் சாப்பிட்டுவிட்டு காலையில் கட்சியை விட்டு விட்டுப் போய் முதுகில் கத்தியால் குத்துவது சரியா? என்று உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள், இப்படிச் செய்பவர்களுக்கு நாட்டை ஆட்சிசெய்ய முடியுமா?

நூறு நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட்டு பிரதமர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப் போகிறாராம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியான அவர் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப் போகின்றாராம் என்ன விந்தை இது.

மற்றவர் கூறுகிறார் நான் ஜே. வி. பி.யுடன் செய்துகொண்ட உடன்படிக் கையைக் கிழித்துவிட்டேன் என்று. அப்படியானால் இப்போது ஐ. தே. க. வுடன் செய்துகொண்ட உடன் படிக்கையைக் கிழித்தெறிவது பெரிய காரியமா? இது எவருக்கும் முடியும். எனினும் நம்பிக்கையே முக்கியம்.

2005ல் நாம் மக்களுடன் நம்பிக்கையைக் கட்டியெழுப்பினோம். பிரிவினைவாதத்தை இல்லாதொழித்து கெளரவமான சமாதானத்தை பெற்றுத் தருவதாக உறுதியளித்தோம். நாம் நாட்டில் அதனை நிலைநாட்டியுள்ளோம்.

முப்பது வருடங்கள் விற்றுப் பிழைத்த யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். அன்று நான் கெப்பெத்திக் கொல்லாவைக்குச் சென்றபோது இறந்த குழந்தைகளின் உடலிலிருந்து சூடு தணித்திருக்கவில்லை. பெற்றோர் தம் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர்.

அன்று நான் கண்ட துக்ககரமான காட்சி அது. அன்றே நான் பயங்கரவாதத்தை ஒழிக்க தீர்மானித்துவிட்டேன். அந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

நாம் எடுத்த தீர்மானத்தை சரிவர செய்தோம். படையினரை பின்னோக்கி அழைக்கவில்லை. உலகின் பெரும் புள்ளிகள் எமக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். நேரில் வந்து பேசினர். அழுத்தங்களைப் பிரயோகித்தனர். யுத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். எனினும் நாம் நிறுத்தவில்லை.

மக்களுக்காக இந்த நாட்டை மீட்டு பயம் சந்தேகமின்றி சமாதானமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.

இனியும் இந்த நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. நாம் நாட்டையும் மக்களையும் முன்னேற்றியுள் ளோம். எதிர்காலத்தை இலக்காகக் கொண்டே அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறோம். நாம் எப்போதும் எவரையும் பழிவாங்கியதில்லை. அப்படியானால் சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 52 பேராக வீழ்ச்சியடைய செய்தார். நான் அதனை 121 ஆக முன்னேற்றியுள்ளேன். 160 பேர் எமது பக்கம் பாராளுமன்றத்தில் உள்ளனர். சிலர் போயுள்ளார்கள் நாம் எப்போதும் கதவைத் திறந்தே வைத்துள்ளோம். இது சலூன் கதவு போன்றது. எவரும் போகலாம் வரலாம். இப்போது மட்டுமல்ல. அன்று சி. பி. டி. சில்வா என்ன செய்தார்? அதுவும் பொலனறுவை மாவட்டத்திலிருந்துதான். ஸ்ரீமாவுக்கு வாலைக் காட்டினார்.

காலையில் அவருடன் பால்சோறு சாப்பிட்டுவிட்டு போனவர்தான் அவர். சந்திரிகாவும் ஸ்ரீமாவுக்கு அதனைத் தான் செய்தார். விட்டுவிட்டுப் போய் வேறு கட்சியொன்றை ஆரம்பித்தார். பொதுசன ஐக்கிய முன்னணி என்று பெயரிட்டார். நாம் அவரிடம் வந்தோம். அனுர பண்டாரநாயக்கவைக் கட்சியிலிருந்து விலக்கினார். எனினும் பண்டாரநாயக்கவோ, திருமதி பண்டாரநாயக்கவோ ஒருபோதும் கட்சியை விட்டுச் சென்றதில்லை. அதேபோன்று கட்சியை விட்டுவிட்டு இந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஒருபோதும் போனதில்லை. நான் கட்சியை நேசிக்கின்றேன். கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியம்.

இந்த நாட்டில் சகலருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் எவரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நாம் அமைச்சர்களுக்கும் எம்.பிக்களுக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளோம். அவர்கள் விருப்பம் போல் செயற்படுகின்றார்கள்.

பத்திரிகைகளில் பெரும் குற்றச்சாட்டை வெளியிட்டார். அவரது மகன் ஏதோ அடிதடியில் ஈடுபட்ட போது அது பத்திரிகைகளில் வெளிவந்த போது நானே அதற்கு காரணம் என குற்றம் சுமத்தினார். பகிரங்கமாக சத்தம் போட்டார். பாசிக்குடாவில் நடந்த சம்பவம் சகலருக்கும் தெரியும். தந்தை என்ற வகையில் மகன் சம்பந்தமான விடயத்தில் அவ்வாறு நடப்பது இயல்புதான்.

No comments

Powered by Blogger.