Header Ads



மைத்திரிபாலவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது ஏன் - விளக்குகிறார் ரணில்

சிறிலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல்கூட்டு கட்சிகள் நாட்டின் அரசியலில் இருக்க வேண்டும் என எதிர்கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதன்போது, எதிர்தரப்பின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி அவர் விளக்கமளித்தார்.

யுத்தம் நிறைவடைந்தவுடன், முதலில் 18 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து வரையறையற்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.

முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை சிறையிலிட்டார்கள் மற்றும் பிரதம நீதியரசரை பதவியிலிருந்து வெளியேற்றினார்கள். அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய அதிகாரங்களை ஜனாதிபதி  கையிலெடுத்தார்.

எங்களது கட்சியை பிளவுபடுத்த முனைந்தார்கள் ஆனால் இயலாமல் போய்விட்டது, ஏனைய கட்சிகளை சிறிது சிறிதாக பிளவு படுத்தினார்கள்.

தற்போது 3 வது முறையாகவும் தேர்தலுக்கு முன்வந்து  ராஜபக்ஷ படையணியை பலம்பெறச் செய்யும் நோக்கில் திடீரென ஜனாதிபதி தேர்தலை அறிவித்தார்கள்.

சிறிலங்கா சுதந்திர கட்சி இன்றி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தார்கள். ஒரு பக்கத்தில் கிராம மட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பிரிந்து சென்றார்கள், எதிர்கட்சிகளின் நெருக்கடிகள் மாத்திரமன்றி, கட்சிக்கு உள்ளேயும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதேவேளை, சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு போன்றே, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் அதிகாரங்கள் இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ தரப்பினருக்கு ஏனையவர்களை அச்சுறுத்தும் செயற்பாடையே மேற்கொள்ள முடியும். தமது கட்சியினரை போன்றே ஏனையவர்களையும் பயமுறுத்துகிறார்கள்.

தற்போது கிராம மட்டத்தில் உறவினர்கள் போன்றே பிளவுபட்டிருப்பதாக தெரிவித்த அவர், சுதந்திர கட்சி போன்ற கூட்டு கட்சியொன்று அவசியம் என தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பயன் கிடைப்பதை விட பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.