Header Ads



மஹிந்த மீதோ அல்லது அவரின் குடும்பத்தின் மீதோ தனிப்பட்ட முறையில் முரண்படவில்லை - ரத்ன தேரர்

ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு பொது எதிரணியில் நின்று உதவத் தயார். வெகு விரைவில் பொது வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவிக்கும் அத்துரலியே ரத்ன தேரர் ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கே அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறக் காரணமாகி விட்டது எனவும் குறிப்பிட்டார்.

பொது வேட்பாளருக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவு வழங்கத் தயாரா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

அரசாங்கத்தின் பலமானதும் நம்பிக்கையான உறுப்பினர்களும் இன்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் எமது அதிருப்தியினை வெளிப்படுத்தவும் இன்று அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் அரசைவிட்டு வெளியேறவும் அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகளே காரணம். இன்று நாங்கள் எவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது அவரின் குடும்பத்தின் மீதோ தனிப்பட்ட முறையில் எவ்விதத்திலும் முரண்படவில்லை. யுத்தத்தினை வெற்றிகொண்ட ஒரு சிறந்த தலைவர் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் அரசு நல்ல முன்னேற்றத்தினை கண்டுள்ளது. ஆனால், கடந்த காலத்தின் சூழ்நிலைகளோ போராட்டமான காலமோ இன்று இல்லை. எனவே இன்று அனைத்து தரப்பினரினதும் ஒரே எதிர்பார்ப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதுவே. அதனை இந்த அரசாங்கம் மேற்கொள்ளாவிடின் முரண்படுவோம் என்பதனை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எச்சரித்து வந்தோம்.

மக்களின் வரப்பிரசாதத்திலும் அவர்களின் ஆதரவிலுமே எவரேனும் ஆட்சியினை அமைக்க முடியும். அதற்கு அப்பால் தமது சுய விருப்பத்தில் சர்வாதிகாரமாகவும் இராணுவ மயப்படுத்தப்படும் ஆட்சியினை கொண்டு செல்ல முயற்சிப்பதன் காரணமாகவுமே இன்று அரசாங்கத்தின் முக்கிய தூண்கள் உடைந்து வெளியேறுகின்றது. இப்போது அரசாங்கம் பலவீனமடைந்து விட்டது என்பதே உண்மை. எதிர்வரும் காலத்தில் தேர்தலுக்கு முன்னர் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

நாட்டில் அதிகாரப் பகிர்வினை மேற்கொண்டு அரசியல் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைதிரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க பொது எதிரணியில் நின்றும் தூய்மைக்கான நாளைய அமைப்பின் சார்பாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியாகவும் துணை நிற்போம். அதேபோல் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்த பொது எதிரணியிலும் கலந்து கொள்ளத் தயாராக உள்ளோம். மேலும், ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து எமது தீர்மானத்தினை வெளிப்படுத்துவோம். அத்தோடு பொது வேட்பாளரையும் கலந்தாலோசித்து எமது கொள்கைத் திட்டங்கள் தொடர்பில் இரு தரப்புடனும் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.