Header Ads



வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நாளை - பல்டிகள் நடைபெறுமா..?

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு 24-11-2014 நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று மாலை நடைபெறவுள்ள தமது கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று, ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்று மாலை நடைபெறும் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

எனினும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க ஏற்கனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இந்த வரவு செலுவத்திட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கு எந்த நலனையும் வழங்காத நிலையில், அதற்கு எதிராக தங்களின் வாக்குகளை பிரயோகிக்க விருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரே அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என்று அமைச்சர் மகிந்தநந்த அழுத்கமககே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிக்கல் இன்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து அவருக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க அரச தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. 

காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே ஆகியோர் அரசிலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அரச தரப்பினர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.  அதன் பின்னர் மேலும் பலர் எதிர்தரப்பில் இணையலாம் என்றும் எதிரணியினர் தெரிவிக்கின்றனர்.

அரச அதிருப்தியாளர்களுக்கு பதவிகளை வழங்கி அவர்கள் எதிரணிக்குச் செல்வதைத் தடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.