Header Ads



சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிவரை, வெற்றியின் உச்சத்தில் இருப்பதாக எண்ணுவர்

(GTN)

இலங்கை வரலாற்றிலேயே  நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் நிறு சதிராடிய மெத முலன மகிந்த ராஜபக்ஸ கடந்த 9 வருட ஆட்சியில் சந்திக்காத பாரிய சவாலை முதன் முறையாக சந்திக்கிறார்.  

வரலாற்றில் சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிக் கணம் வரை  தாம் வெற்றியின் உச்சத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள். தமது தோல்விகளில் இருந்து மீண்டெழுவோம் - அல்லது தப்பித்துக் கொள்வோம் என்ற மிகையான நம்பிக்கையில் இறுதி வரை தமது கோரத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டே இருப்பார்கள்...

தமக்கெதிரான நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டவும் தயங்கமாட்டார்கள்... இந்தக் கட்டத்தை கிட்த்தட்ட நெருங்கிவிட்டார் மகிந்த ராஜபக்ஸ...

இதன் முதலாவது கட்டமாக ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமைக்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை மாகொன்ன பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் கடுமையான காயத்திற்கு உட்பட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் இதுவரை எந்தத் தேர்தலும்  சந்தித்திராத கடுமையான இரத்தக்களரியை சந்திக்கப் போகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆட்சியின் கொடூரங்களில் இருந்தும் ஜே ஆர் ஜெயவர்த்தனவில் இருந்து பிரேமதாஸா வரையிலான ஐக்கியதேசியக் கட்சியின் 17 வருட ஆட்சியில் இருந்தும், ஒரு ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலில் சந்திரிக்கா வெற்றியீட்டிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறையாளர்களால் 14 பேர் கொல்லப்பட்டு பலர் கடும் காயங்களுக்கு உட்பட்டே சந்திரிக்கா ஜனாதிபதியாக வெற்றி பெற முடிந்தது.  

அதனை விடவும் இந்தத் தேர்தல் மிகக் கொடூரமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும், அடாவடித்தனங்களுடன் கூடிய மோசடி நிறைந்த தேர்தலாகவுமே அமையும் என பலரும் எதிர்பாக்கின்றனர்.

எனினும் சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான ஜனாதிபதி தேர்தலுக்கு மகிந்த ராஜபக்ஸ இடம் அளித்தால், கணனி மென்பொருள்கள் வாக்களிக்காமல் விட்டால், பொது வேட்பாளருக்கான வாக்குகள் மலசல கூடங்களுக்குள்ளும், வாக்குச் சாவடிகளின் பின்புறங்களிலும் டம்பண்ணப்படாவிட்டால், பொது வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளின் வாக்குச் சீட்டுக்களை அனுப்புவதை தடுக்காவிட்டால் மைத்திரிபால சிரிசேன 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா வெற்றியீட்டியதை போன்று வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

காரணம் 1977 முதல் 1994 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட கொடூர ஆட்சியின் பல மடங்கு கொடூரங்களை மகிந்த ராஜபக்ஸவின் 9 வருடகாலத்தில் நாட்டு மக்கள் அனுபவித்துவிட்டனர்.

குறிப்பாக நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி வளங்களை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களின் பரிவாரங்களும் முழுங்குவதோடு நாட்டின் அதிகாரத்தையும் தமது நலன்களுக்காக எவ்வளவுக்கு துஸ்பிரயோகம் செய்ய முடியுமோ அவ்வளவிற்கு துஸ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மகிந்தவுடன் நெருங்கியிருந்த, உலக நாடுகளுக்கான ராஜதந்திரிகளில் இருந்து (தயான் ஜெயத்திலக, நோனிஸ், தமரா குணநாயகம், உள்ளிட்ட பலர்) புத்திஜீவிகள், (ரஜீவ விஜயசிங்க, ஜெயந்த தனபால, சுமனசிறீ லியனகே உள்ளிட்ட பலர்) நீதித் துறை சார்ந்தவர்கள், (முன்னாள் பிரதம நீதியரசர்கள் சரத் என் சில்வா, சிராணி பண்டார நாயக்கா உள்ளிட்டவர்கள்) சட்டத்தரணிகள் சங்கம் ( இதில் 4ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகிந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்) ஊடகவியலாளர்கள் ( விக்டர் ஐவன், சமன் வகாராட்சி, உள்ளிட்டவர்கள்) சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள், பல தொழிற்சங்கங்கள் என தெற்கின் முக்கிய சமூக அங்கங்கள் இப்போ மகிந்த அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாகி உள்ளது.

1989ஆம் 90 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஆளும் தரப்பிற்கு எதிராக தெற்கின் அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் திரண்டெழுந்தன.

இப்போ பொது அமைப்புகள் - சமூகப் பிரதிநிதிகள், ஊடகங்கள் மீது பல மடங்கு அதிகமான அழுத்தங்களை பிரயோகிக்கும் போதிலும் அவற்றையும் தாண்டி அனைவரும் ஒன்று திரண்டு மகிந்த ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான இந்த அணி திரள்வில் அவருடன் கைகோர்த்திருந்த விமல் வீரவன்சவைத் தவிர பௌத்த கடும் போக்காளர்களே அவரை விட்டு விலக தீர்மானித்திருக்கிறார்கள் என்றால் யுத்தத்தையும் புலிகளையும் வைத்து நீண்ட நாட்களுக்கு சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டின் கஜானாவை காலி செய்து குடும்ப கஜானாவை நிரப்ப  முடியாது என்பதனை 9 வருடத்திலேயே உணர வேண்டி இருக்கும் என மகிந்த நினைத்திருக்க மாட்டார்.  

அசைக்க முடியாது என இறுமாப்புக் கொண்டிருந்த கோட்டையின் வாசற் கதவை அத்துரலியே ரத்ண தேரர் முதலில் தகர்த்தார்... அந்த வழியே மகிந்தவின் அரண்களாக இருந்த மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட பலர் வெளியே வந்தனர்... மைத்திரிபால குழுவினர் அமைத்துக் கொடுத்த காப்பட் வீதியில் பலர் பயணம் செய்யக் காத்திருக்கின்றனர்... அதன் மூலம் மகிந்த ராஜபக்ஸ மேலும் அதிர்வுகளை சந்திப்பார் என கொழும்பின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்...

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிராக களமிறங்கியதையும் மைத்திரிபால சேனநாயக்கா களம் இறங்கியதைனையும் பலர் ஒப்பிட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கு இது யுயுப்பி என்கின்றனர்..

இது எதனை ஞாபகப் படுத்துகிறது என்றால் விடுதலைப் புலிகளில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் பலர் விலகிச் சென்றார்கள்... முக்கிய தளபதிகள் சிலர் தமது அணிகளின் ஊடாகவே தலமைக்கு தலையிடி கொடுத்தார்கள் அவற்றையெல்லாம் வெற்றி கொண்டது போல் கிழக்கின் தளபதி கருணா பிரிந்ததனையும் சாதாரணமாக எடுத்து அவரது பிரிவு தமக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்றார்கள்... ஆனால் அந்தப் பிளவு தான் அவ்வியக்கத்தின் பாரிய வீழ்ச்சிக்கு காரணமானது என்பதனை நடுநிலையாக சிந்திப்பவர்கள் எவரும் மறுக்க்க மாட்டார்கள்... 

இதே வேளை சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவர்... அவர் கட்சி அரசியலில் ஈடுபட்டு இருக்கவில்லை.... அவர் மீது நாட்டின் இராணுவச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்... அதனபடி அவரை சிறையிலும் அடைக்க முடிந்தது. அத்துடன் அவர் மகிந்தவை எதிர்த்த காலம் யுத்த வெற்றியின் மமதையில் மகிந்தவும் அந்த வெற்றி கொடுத் போதையில் மக்களும் இருந்த காலம்... 

ஆனால் இப்போ போதை தெளிந்து மக்கள் தம் நிலை உணரத் தலைப்படும் காலம்... தென் மாகாண, மேல் மாகாண சபைகளின் தேர்தல்களில் வாக்கு வங்கி சரியத் தொடங்கி ஊவா மாகாண சபைத் தேர்தலில் பாரிய சரிவைக் வெளிப்படுத்தியது. இதன் மூலம் மகிந்த சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியதை அனைவரும் உணரத் தொடங்கினர்.

இப்போ, மற்றைய கட்சிகளை தன்னால் பிளக்க முடியும் சின்னாபின்னமாக்கி அக்கட்சிகளின் முக்கியஸ்த்தர்களை உடைத்தெடுக்க முடியும் தனது கட்சியை எவரும் அசைத்துப் பார்க்க முடியாது என நினைத்திருந்த மகிந்தவின் மமதைக்கு பாரிய அடி விழுந்திருக்கிறது.

13 ஆண்டுகாலம் கட்சியின் செயலாளராக இருந்த, 47 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை உடைய ஒருவர் மகிந்தவையும் கட்சியையும் அசைத்திருக்கிறார்.

இதனை மகிந்தவால் ஜீரணிக்க முடியாது உள்ளது. அதனால்தான் என்னவோ ராஜினாமாக் கடிதத்தை கொண்டு சென்ற மைத்திரிபாலவை மிகவும் தரம் தாழ்ந்து அவரது தாயை இழுத்து தூசண வார்த்தைகளை மகிந்த...கொட்டித் தீர்த்திருக்கிறார். 

அதனால் தனக்கு எதிரான அரசியல் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ள மகிந்த,  யார் யார் எப்பபோது தன்னை விட்டு ஒட்டுண்ணிகள் கழண்டு செல்வது போல் ஒவ்வாருவராக கழண்டு போவார்கள் என தடுமாறிப் போய் தூக்கம் இன்றிப் புலம்புகிறார். இந்த நிலையில்  கிராம மட்டத்தில் செல்வாக்கு இழந்தவர்களும், வாக்கு வங்கி அற்றவர்களும், சமூக மட்டத்தில் வெறுக்கப்படுபவர்களுமே அவரைச் சுற்றி எஞ்சி இருக்கிறார்கள்.

நேற்று (21.11.14) அன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவரின் பிரதான அமைச்சரான ஜனக பண்டார தென்னக்கோண் இதனை தெளிவாக சொன்னார்.. 'போதைப் பொருள், எதனோல், சாராயக் கடத்தல்காரர்கள் எல்லோரையும் பாராளுமன்றிற்கு கொண்டு வந்த பெருமை மகிந்த அரசாங்கத்தையே சாரும்' இதில் இருந்து யார் மகிந்தவுடன் எஞ்சியிருப்போரில் பலர் யார் என்பது புலப்படும்.

இத்தகைய சூழலில், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைகள் என்று சொல்லப்படுகிற பொலநறுவை, அனுராதபுரம், களுத்துறை, கம்பகா, மத்திய மமாகாணம், தெற்கின் காலி மாத்தறை, உள்ளட்ட மிக முக்கிய மாகாண மாவட்டங்களின் முக்கயஸ்த்தர்கள் தாமே உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி என தெரிவித்து சந்திரிக்கா, மைத்திரிபால சிரிசேன பக்கம் நிற்கிறார்கள்...

உள்ளுராட்சி சபைகளின் - பிரதேச சபைகள் - நகர சபைகள் - மாகாண சபைகளின் முக்கியஸ்தர்கள் என  கட்சியின் அடிமட்டத்தினரில் பெரும்பான்மை சீறீலங்கா சுதந்திரக் கட்சியின் மீட்பர் அணியில் உள்ளனர். 

தவிரவும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் ஜேவீபீ – சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கடும் போக்குடைய பிரதான கட்சிகளும், மேல்மாகாணத்தில் வாக்கு பலத்தை கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியினரும்,  பிரதான எதிர் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் வரலாற்றில் முதன் முறையாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள்.

விமல் வீரவன்சவின் ஜே என்பி கட்சியில் இருந்தும் விமலைத் தவிர முக்கியஸ்தர்கள் எதிர் கட்சிகளின் பக்கம் செல்கின்றனர். செவி வழி வந்த செய்தி ஒன்று கூறுகிறது விமல் வீரவன்சவும் மைத்திரிபாலவுடன் கதைத்த போதும் அணி மாறுதலை அவர் அதனை நிராகரித்ததாக.

தினேஸ் குணவர்த்தனா தற்போது மௌனமாகி இருக்கிறார். அவரது நிலைப்பாடு வெளியாகவில்லை. மலையக கட்சிகள் எப்போதுமே ஐக்கியதேசியக் கட்சி சார்பு நிலை எடுப்பது உண்டு. ஏற்கனவே ஒருவர் எதிரணிக்கு பாய்ந்துள்ளார்.  

முஸ்லீம் கட்சிகள் எதிரணிக்கு சென்றால் என்ன செல்லாவிட்டால் என்ன வடக்கு கிழக்கு  உள்ளிட்ட நாட்டின் பரந்து வாழும் முஸ்லீம்கள் கோத்தாபய தலைமையிலான பொதுபல சேனாவின் புண்ணியத்தால் எதிரணி வேட்பாளருக்கே வாக்களிக்கும் நிலை காணப்படுகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறதோ இல்லையோ மகிந்த சகோதர எதிர்பலை என்றும் இல்லாதவாறு அதிகரித்திருக்கும் நிலையில் மகிந்தவுக்கு எதிராக, பேய் அல்லது  பிசாசை நிறுத்தினாலும் அதற்கு வாக்களிக்க 90 வீத தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்... கடந்த பொதுத் தேர்தலில் யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ராணுவத்தின் தளபதியாக இருந்து மகிந்தவுக்கு எதிராக சரத் பொன்சேகா களமிறங்கிய போது வடக்கு கிழக்கில்தான் அதிகளவு வாக்குகள் அவருக்கு விழுந்திருந்தன.

இந்த நிலையில் வழமையான புலிப் பூச்சாண்டி – புலம் பெயர் தமிழர்களினால் ஆபத்து, மேலைத்தேய நாடுகளின் சதி, என்ற பம்மாத்துகள் இந்தத் தேர்தலில் எடுபட வாய்ப்பில்லை. கொழும்பின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கிறார். காரணம் அதனை முன்பு கூறிய கடும் போக்காளர்கள் இப்போ மைத்திரியின் பக்கம் இருக்கிறார்கள்...

தவிரவும் முன்பு போல் அல்லமால் பிராந்திய அரசியலும் மாறியிருக்கிறது... சீனாவின் நெருக்கம் இந்தியாவைப் புறக்கணிப்பது என்பது மோடி அரசாங்கத்தை சற்று கொதி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது... 

மோடிக்கு முன்னரான காலம் சோனியா தலைமையிலான காங்கிரஸ் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு இருந்தது. இப்போ அந்த நிலை மாறியிருக்கிறது...

ஆக வரப் போகும் தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் நடைபெறுமாக இருந்தால், கணனிகள் வாக்களிக்காது இருந்தால், தேர்தல் ஆணையாளரை அலரி மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்காது இருந்தால் மகிந்த சாரம்ராச்சியம் சரிவதை எவராலும் தடுக்க முடியாது.... இவ்வளவு விடயங்களையும் மகிந்த கோத்தாபய அணி மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் முன்பு போல் ஆட்சியை இலகுவாக தக்கவைக்க முடியும் என்பது பகல் கனவே. 

No comments

Powered by Blogger.