Header Ads



உணவு பரிமாறும் ரோபட் சீன ஓட்டலில் அசத்தல்

சீனாவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வருவோருக்கு ரோபட்கள் உணவு பரிமாறுகின்றன. ஆங்கிலப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் போன்று அந்த ஓட்டல் செயல்படுவது வாடிக்கையாளர்களை பிரமிக்க வைக்கிறது. சீனாவின் கிழக்கே சுஸ்ஹாவ் பிராந்தியத்தில் குன்சான் என்ற துணை நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சோங் ஜுகாங் என்பவர் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்குள் நுழைந்தால் ஒரு நிமிடம் பயந்து விடுவீர்கள். காரணம், அங்கே அறிவியல் கூடம் போல் ரோபட்கள் நடமாடிக் கொண்டிருக்கும். சாப்பிடுவோருக்கு, அவைதான் உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாறும். ஓட்டல் வாசலிலேயே உங்களை ரோபோ ஒன்று வரவேற்கும். வாடிக்கையாளர்கள் வந்து அமர்ந்ததும் மற்றொரு ரோபோ வந்து ஆர்டர் கேட்கும். வாடிக்கையாளர்கள் வழக்கமாக கேட்கக் கூடிய உணவு வகைகளை அவை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரோபட்கள், வழக்கமான 40 வாக்கியங்களை புரிந்து கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆர்டர் எடுப்பதில் பிரச்னை இல்லை. அதே போல், உணவுகளை 4 ரோபட்கள் எடுத்து வருகின்றன. 

இது பற்றி, சோங் ஜுகாங் கூறியதாவது:ஒரு ரோபட் விலை ரூ.4 லட்சம். மொத்தம் 12 ரோபட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் ஓட்டலில் ரோபட்டுகள் பரிமாறும் அழகை பார்த்து, நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இப்போதெல்லாம் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. மேலும், ஓட்டல் பணியாளர்களுக்கு தரும் சம்பளத்தை விட, இதன் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது. இதனால், இதே போல் இன்னொரு ரோபட் ஓட்டலை திறக்கும் ஐடியா உள்ளது. ரோபட்டுகளை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், 5 மணி நேரம் இடைவிடாமல் வேலை செய்கிறது. இந்த ரோபட்டுகளை மேலும் நவீனப்படுத்தினால், அவை வீடு மற்றும் ஓட்டல் பராமரிப்பில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள உதவும் இவ்வாறு ஜுகாங் கூறினார்.

No comments

Powered by Blogger.