Header Ads



கருமலையூற்றுப் பள்ளிவாசல் உடைந்ததா..? உடைக்கப்பட்டதா...??

(மூதூர் முறாசில்)

2014.08.17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   காலை... 'கருமலையூற்றுப் பள்ளிவாசல் செய்தி தெரியுமா...?'  கொழும்பிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு செய்திப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வினவினார் என்னிடம். 'இல்லை சேர்... சொல்லுங்க...' என்று நான் கூறியதும்  'கருமலையூற்று பள்ளியை உடைகிறார்களாம்... கொஞ்சம் விசாரித்துப் பாருங்கோ...'  என்றார் அவர். 

உடனடியாக நான் கருமலையூற்று பள்ளியோடு சம்பந்தப்பட்ட ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்... 'பள்ளியை இராணுவத்தினர் உடைத்து விட்டார்கள்... உங்களுக்கு 'கோல்' எடுக்க இருந்தோம்...  நீங்கள் முந்திவிட்டீர்கள்.....' என்றார் அவர். 

'இராணுவத்தின் கட்டுப்பாட்டில்   உள்ள அந்தப் பள்ளியை, வீதியிலிருந்து பார்ப்பதற்கும்  விளங்காத தூரத்தில் இருக்கும் அதனை உடைத்து விட்டதாக எப்படி உங்களால் உறுதியாக கூறமுடியும்...?' செய்தியை உறுதிப்படுத்துவதற்காக விசாரித்தேன் அவரிடம்.

'பள்ளிக்கு அண்மையாக உள்ள குடாவில் நான்  மீன்பித்தொழிலில் ஈடுபடும்போது பள்ளியை அவதானிப்பது வழக்கம். இன்று   பள்ளியைப் பார்த்தேன்...  இருந்த இடத்தில் அது இருக்கவில்லை. அப்போது சற்று நெருக்கமாகச் சென்று பார்த்தேன்;;... நிச்சயமாக பள்ளியைக் காணவில்லை' என்று கவலையோடு கூறினார் அவர்.

'சரி நேரில் பேசுவோம்...' என்று தொலைபேசித் தொடர்பை இடைநிறுத்திய நான்  கிண்ணியா பிரதேசத்திற்கு அண்மையாக இருக்கும் வெள்ளைமணல் கருமலையூற்று பகுதியை நோக்கி நேராகச் சென்றேன்.

கருமலையூற்று இராணுவ காவலரணுக்கு அருகில் இளைஞர்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு பேசுவதற்காக அணுகினேன். அப்போது   கொழும்பிலிருந்து என்னோடு கைபேசியல் தொடர்பு கொண்ட ஊடக நண்பர் ஒருவர்    'கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் லால் பெரேரா குறித்த இடத்தில் பள்ளி எதுவும் இல்லை ...' என்று கூறிவிட்டதாக  கூறினார். 

அதுவரை பள்ளி உடைக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்த முடியாதிருந்த போதும் கட்டளைத் தளபதியின் 'பள்ளி எதுவும் இல்லை' என்ற கருத்து அங்கிருந்த பள்ளி உடைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.

கருமலையூற்றுப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு விட்டதாக பொலிஸில் முறைப்பாடு:

இராணுவம் குறித்த பகுதியில் பள்ளியொன்று இல்லையென்று கூறியதும்; மீன் பிடிக்கச் சென்றவர்கள் பள்ளி இருந்த இடத்தில்  இல்லை என்பதை உறுதி செய்ததும்  'பள்ளி உடைக்கப்பட்டு விட்டது' என்பதை   சான்றுப் படுத்தியதனால்  பள்ளி நிருவாகிகள்  சீனக்குடா பொலிஸ் நிலையத்தில்   முறையிடுவதற்கு  முடிவு செய்தனர். 

கருமலையூற்றுப் பள்ளிவாசலானது நீண்ட காலமாக செயற்பட்டு வந்ததற்கும் அது கருமலையூற்று மலைப்பகுதியில் இராணுவத்தினரின் பிடிக்குள் சிக்கியிருந்ததற்கும் தேவையான ஆவணங்களை உடன் கொண்டு சென்ற அவர்கள் இப்பொழுது குறித்த கருமலையூற்றுப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு விட்டதென்று பொலிஸிடம் (2014.08.17) முறையிட்டனர்.

பள்ளி உடைக்கப்பட்டதற்கான பொலிஸ் முறைப்பாடு ஊஐடீஃ398ஃ73ஆம் இலக்கத்தில் பள்ளி நிர்வாகிகளான கருமலையூற்றைச் சேர்ந்த எம்.வை.எம்.ஆஸாத், எம்.ஐ.சுபைர், எம்.எம்.முனவ்பர் ஆகியோர்களின் பெயரில் பதிவு செய்ய்பட்டிருந்தது.

என்ற போதும் அன்றைய தினம் மாலை கருமலையூற்று சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் 'கருமலையூற்று பள்ளிவாசல்' உடைக்கப்பட்டது சம்பந்தமாக  கூட்டமொன்று இராணுவம் - மக்கள் பிரதிநிகள் மற்றும் பொதுமக்களுக்கிடையே இடம்பெற்றது.  அக்கூட்டம் மக்களின் நிலைப்பாட்டை இராணுவத்திற்கு தெளிவுறுத்துவதியது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்; உள்ளிட்ட குழுவினர் பள்ளி இல்லை என்ற இராணுவத்தினரின் கருத்தை முற்றாக மறுத்து, அங்கு பள்ளி இருந்ததை ஆவணங்களூடாக மெய்ப்பித்தனர்.
இதனால் திங்கட் கிழமையன்று (2014.08.18)  'பள்ளி எதுவும் இல்லை' என்ற தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட   இராணுவம் இல்லாத பள்ளியைப் பார்ப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதை மட்டும் அழைத்துச் சென்றதோடு நில்லாது  'பள்ளியை நிர்மாணித்து தருவதாக இராணுவம் உறுதியளித்துள்ளது' என்று அவரை பேசவும் செய்தது. இச்செயற்பாடு  பள்ளியை இராணுவம் உடைத்துவிட்டது என்று கூறுவது போலவே  இருந்தது.

மாகாண சபையால் பாதுகாக்க முடியாது போன  வரலாற்றுப் பொக்கிஷமும் 
பள்ளி உடைப்பிற்கெதிரான வெப்புசாரமும்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க் கிழமையன்று (2014.08.19) இடம்பெற்ற போது கருமலையூற்றுப் பள்ளிவாசல் விவகாரம் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்; அவசரப்; பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

பிரேரணையைச் சமர்ப்பித்து அவர் அங்கு பேசும்போது, தொடர்த்தேர்ச்சியாக வணக்கஸ் தலங்கள் குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருவது நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் ஆரோக்கியமானதல்ல.     அரசாங்கம் தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் அக்கறை எடுத்துவரும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தொன்மைவாய்ந்த இப்பள்ளிவாசலைப் பாதுகாப்பதற்கு தவறியமை குறித்து கவலையடைவதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். அமீர் அலி பள்ளிவாசல் உடைக்கப்பட்ட விடயத்தை மாபெரிய அநியாயமென சுட்டிக் காட்டியதோடு   இந்த அநியாயத்தை ஏன் செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கான காரணத்தை முதலமைச்சரே ஏற்கவேண்டுமெனவும் கூறினார். கருமலையூற்று பள்ளிவாசலையும் பொது மக்களது காணிகளையும் உரியவர்களுக்கு வழங்குதல் சம்பந்தமாக தனிநபர் பிரேரணையொன்றை 2012.11.06ஆம் திகதியன்று தான் கொண்டுவந்தபோது அது சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் செயற்படுத்தப்படவில்லை என்பதை நினைவுறுத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல்   பேசும்போது, முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயத்திற்கு இந்த அரசாங்கத்திடம் இருந்து எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் சில முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகளையும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு தலைமைகளையும் அவர்களது அழைப்பையேற்று சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள்குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய தேவை இருந்தது. இத்தகைய நிலைமையில் கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருப்பதானது மேலும் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தப்போகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பள்ளிவாசல் உடைக்கப்பட்டது குறித்து கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாகாண சபையில் பலரது குரல்களும் ஓங்கியொலித்தன. கருமலையூற்றுப் பள்ளியை இராணுவமே உடைத்துள்ளது என்ற கருத்திலேயே பெரும்பாலானோரின் உரை அமைந்திருந்தது. பள்ளிவாசலை  நிர்மாணித்துத் தருவதாக இராணுவம் கூறுவதாயின் பள்ளியை உடைத்ததும் இராணுவம்தான் என்ற கருத்து வலிமையாக முன்வைக்கப்பட்ட அதேவேளை பள்ளியை இராணுவம் நிர்மாணித்துக் கொடுத்தாலும் அது வரலாற்றுச்சின்னமாக எப்படி அமையும் என்ற பலமான கேள்வியும் அங்கு எழுப்பப்பட்டது.

சபையில் பேசிய பலர் பள்ளிவாசலானது இயற்கை அனர்த்தத்தினால் உடைந்துள்ளதா அல்லது அதனை இராணுவத்தினர் உடைத்துள்ளனரா என்று அறிந்து கொள்வதற்கு சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இக்கோரிக்கையை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றுவதாக இணக்கமும் காணப்பட்டது. இருந்தபோதும் இப்பள்ளிவாசலையும் பொது மக்களது காணியையும் உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டு  அது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டு 21 மாதங்கள் கடந்த நிலையிலும் அதனை செயலுருப்படுத்த முடியாமல் போனதென்பது கவலைக்குரிய விடயமேயாகும்.

இதனால் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை, முஸ்லிம் முதலமைச்சரை தலைமையாகக் கொண்ட கிழக்கு மாகாண சபையினாலேயே பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.

முஸ்லிம் முதலமைச்சருக்கு முன்னாள் உள்ள பொறுப்பு:

இராணுவம் கருமலையூற்றில் பள்ளி இல்லை என்று சொன்னாலும் பின்பு இல்லையென்று சொன்ன பள்ளியை இருக்கின்றது என்று சொன்னாலும் அது ஏன் அவ்வாறு சொல்லப்பட்டதென்று மக்கள் பெரிதாக கணக்கெடுக்கவில்லை.இராணுவம் அல்லது   அரசாங்கம்   என்றால்  அப்படித்தான் சொல்லும் என்ற மனோபாவமே இப்போது மக்களிடம் இருக்கின்றது. ஆனால்,முஸ்லிம் முதலமைச்சர் எவ்வாறு அவ்வாறு கூறமுடிம் என்பதுதான் மக்களது கேள்வியாக எழுந்திருக்கின்றது.

கருமலையூற்றுப் பள்ளியையும் அதன் அயலில் உள்ள முஸ்லிம்களின் காணிகளையும் இராணுவத்தினரின் பிடியிலிருந்து மீட்டுத் தருமாறு சம்பந்தப்பட்ட பொதுமக்களும் ஏனையவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும் 2012ஆம் ஆண்டு குறித்த பள்ளிவாசலையும் காணிகளையும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது சம்பந்தமான தனிநபர் பிரேரணை சபையின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்று முதலமைச்சரின்  கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு முதலமைச்சர் தாமாகவே விதித்த வாக்குறுதிகளை அவரே காலாவதியாக்கிவிட என்னென்னமோ இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் உடைக்கப்பட்டிருந்தால் அதே இடத்தில் புதிதாக பள்ளிவாசலை விரைவாக அமைப்பதற்கும் அதனை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பதற்கும் அப்பள்ளிவாலில் மக்கள் தொழுவதை சாத்தியப்படுத்துவதற்கு அருகிலுள்ள காணிகளில் மக்களை மீளக்குடியேற்றுவதற்கும் விவேகத்துடன் வேகமாக இயங்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு முன்னால் உள்ளது. அதுவல்லாமல் பள்ளியை புதிதாக அமைத்துவிட்டு, அப்பள்ளியில் தொழுவதற்கும் தொழும் வகையில் மக்களை குடியமர்த்துவதற்கும் வழிசெய்யப்படாது விட்டால் அப்பள்ளியினால் எவ்வித நன்மையும் இல்லை. அதேபோல் எவரும் தொழாத நிலையில் இராணுவம் மட்டும் இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள்  பள்ளியை   அமைப்பதில் எவ்வித தேவையும் இல்லை.  எனவே, பள்ளி புதிதாக அமைக்கப்படவேண்டும் என்பதோடு பள்ளிக்கு அண்மையாக உள்ள முஸ்லிம்களின் காணிகளில் அவர்கள் குடியமர்வதற்கு வழிசெய்யப்படவேண்டும் என்பதும்; கருமலையூற்றைப் பொறுத்தமட்டில் சமகாலத்தில் இடம்பெறவேண்டிய இணைந்த பணிகளாகும்.

முஸ்லிம் சமூகத்தின் வகிபங்கு:

கருமலையூற்றுப் பள்ளியானது இராணுவத்தினால் உடைக்கப்பட்டதென்ற கூற்று உண்மையாக இருக்குமெனில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இராணுவத்தால் உடைக்கப்பட்ட முதலாவது தொன்மையான பள்ளிவாசல் என்ற பதிவு கருமலையூற்றுப் பள்ளிவாசலுக்கு கிடைத்துவிடும் என்பது கசப்பான விடயமாகும்.

இராணுவம் இப்பள்ளியை உடைத்திருக்குமெனில் அது இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக பகிரங்கமாகச் செயற்பட்டு வரும் இனவாதிகளுக்கு ஒரு தவறான முன்மாதிரியாகவும்; அமைந்துவிடக்கூடும். அத்தகைய நிலை இனவாதிகள் தாம் நினைத்தவாறு பள்ளியில் கைவைப்பதற்கு ஒரு வழியாகவும் உருவெடுக்கக் கூடும். இப்பள்ளி உடைப்பின் மூலம்; இத்தகைய தவறான முன்மாதிரி ஒன்றை இனவாதிகள் பெற்றுக் கொள்வதற்கு வழிசமைக்காதிருக்க வேண்டிய  முக்கிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்தை சார்ந்திருக்கின்றது

எனவே, கருமலையூற்றுப் பள்ளிவிவகாரத்தை முஸ்லிம் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும்  இருக்கின்றார் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்றோ அல்லது அம்மாவட்டத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை கையாளட்டும் என்றோ விட்டுவிட்டு ஏனையவர்கள் விலகிக் கொள்ள முடியாது. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் இவ்விடயத்தில் போதிய கரிசனை காட்டுவது அவசியமாகும்.

1 comment:

  1. Parliament mp um innum sila mp kkalum thannudia pocket ai nirappumpoluthu enga kuralkodukkapohintarhal as war hajiyar ponta mp kkal Appadi ontrum nadakkavillai entru sollathayangavum maddarhal inthamuslikalainambi kalathil irangamudiyathu

    ReplyDelete

Powered by Blogger.