Header Ads



ஹஜ் கோட்டா நெருக்கடி - உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த உறுதி

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் இம்முறையும் முறைகேடு நடந்துள்ளமையாலே உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக செரண்டிப் ஹஜ், உம்ரா அமைப்பு தெரிவித்தது.

செரண்டிப் ஹஜ், உம்ரா அமைப்பில் அங்கத்தர்வர்களாக உள்ள 65 முகவர்களில் 15 முகவர்கள் இணைந்தே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக இதன் தலைவர் எம்.எஸ்.எச்.மொஹமட் தெரிவித்தார்.
ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து புதன்கிழமை(22) கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் இருந்து 2,240 ஹாஜிகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 89 முகவர்கள் ஊடாகவே இவர்கள் மக்காவுக்கு செல்லவுள்ளனர்.

இந்த 89 முகவர் அமைப்புகளும் கடந்த பல வருடங்களாக ஹஜ் கோட்டாவை பெற்றுக் கொண்ட போதிலும் தொடர்ந்தும் பல முகவர் நிலையங்கள் பழிவாங்களுக்கு உள்ளாகி வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

இந்நிறுவனங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற கூட்டிச் செல்லும் ஹாஜிகளுக்கு வழங்கக்கூடிய ஒரு சில சில்லறை பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொண்டு ஹஜ் கோட்டாவை குறைத்து வழங்குவதோடு எவ்வித குறைகளும் இன்றி செயற்படும் ஹஜ் முகவர் நிலையங்களுக்கும் குறைவான கோட்டாவையே வழங்குகின்றனர்.

குறிப்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள புள்ளி வழங்கும் அட்டவணைக்கேற்ப கோட்டா பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகின்ற போதிலும் உயர்வான புள்ளிகளை பெறும் முகவர் நிலையங்களுக்கு உயர் கோட்டாவும் குறைவான புள்ளிகளை பெறும் நிலையங்களுக்கு குறைந்தளவான கோட்டாவும் வழங்க வேண்டும். எனினும் உயர் புள்ளிகளை பெறும் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படும் கோட்டா அதே அளவு புள்ளிகளைப் பெறும் நிறுவனத்திற்கு குறைவாக வழங்கப்படுகின்றது.

குறிப்பாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தனக்கு தேவையான மற்றும் தனது அரசியல் செயற்பாடுகளின் போது பல்வேறு வகையில் உதவிகளை வழங்கிய நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து ஹஜ் கோட்டாவை வழங்குவதுடன் அவருடன் நெருக்கமான தொடர்பின்றி செயற்படும் நிலையங்களுக்கு ஹஜ் கோட்டாவில் பாகுபாடு காட்டுவதாகவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி ஒரு சில முகவர் நிலையங்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்படும் சிரேஷ்ட அமைச்சர், தனது மகனின் அரசியல் செயற்பாடுகளில் நிதி உதவி வழங்கிய ஒரு சில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாகவே 2006, 2012, 2013ம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினோம். இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறே பிரதமர் தி.மு.ஜயரத்ன மற்றும் புத்த சாசன அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இந்த விடயம் தொடர்பாக ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதுடன் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.