Header Ads



டுபாயில் காணாமல் போயுள்ள இலங்கை பெண்..!

பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற மாத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவர் இரண்டு வருட ஒப்பந்த காலம் உட்பட ஐந்து வருடங்கள் கடந்தும் நாடு திரும்பவில்லை.

அத்துடன் இவர்பற்றிய தகவலும் இல்லாதிருப்பதாக யுவதியின் தாயார் மேரி நவஜீவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரபாஜினி என்ற 34 வயது நிரம்பிய யுவதியே இவ்வாறு டுபாய் நாட்டுக்குச் சென்று தகவல் இல்லாதுள்ளவராவார்.

தனது மகளின் தகவல்களைப் பெற்றுத்தருமாறும் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டுபாய் சென்ற சுப்பிரமணியம் பிரபாஜினி என்ற யுவதி ஒப்பந்த காலத்தின்போது தனது குடும்பத்தாருடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் பணம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் பின்னரே அவரிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லாது போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் யுவதியின் தாயார் மேரி நவஜீவனம் கூறுகையில்;

எனது மகள் பிரபாஜினி கடந்த 2009  ஏப்ரல் மாதம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று டுபாய் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றார்.

அவருக்கான ஒப்பந்த காலப்பகுதியில் எம்மோடு தொடர்பில் இருந்ததுடன் பணமும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

எனினும் இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து மேலும் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. ஐந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் எனது மகளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது கூற என்னால் கூற முடியாதுள்ளது.

எனது மகளை நாட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் தந்துவிடுமாறே நான் மன்றாடிக்கேட்கிறேன். 

எனது மகளின் நிலைமைகளைக் கண்டறியுமாறும் அவரோடு தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் எனது மகளை வேலைக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமும் முறைப்பாடுகளை செய்துள்ளேன்.

எனினும், எவருமே இதுவரையில் எனக்கு உரிய பதிலையும் தரவில்லை. எனது மகளையும் மீட்டுத்தரவில்லை. இவ்விடயத்தில் பாராமுகம் காட்டியும் அலட்சியப்படுத்தியும் வருகின்றனர்.

எனது மகளின் நிலைமையை நினைத்து கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லாது தவிக்கிறேன். அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மேற்படி யுவதியின் நிலைமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கடைப்பிடித்து வரும் அசமந்தப்போக்கு தொடர்பில் மலையகத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தலைமைகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவ முன்வர வேண்டும் என்றும் பொதுவான கோரிக்கை விடுக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.