Header Ads



மலேசிய விமானத்தில் உயிர்தப்பிய குடும்பம், எயிட்ஸ் நிபுணர்களை காவுகொண்ட விமானமும்..!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு நேற்று வந்துகொண்டிருந்த எம்எச் 17 என்ற மலேசிய விமானம் உக்ரைன் நாட்டின் மேலே பறந்துகொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதிலிருந்த ஊழியர் குழு உட்பட 298 பேர் இந்த விபத்தில் மரணத்தைத் தழுவினர். பலரின் உயிரிழப்பிற்குக் காரணமான இந்த விபத்து ஒரு சிலரின் மரணத்தைத் தவிர்த்துள்ளது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டு தம்பதியரான பர்ரி சிம் மற்றும் அவரது மனைவி இஸ்ஸி ஆகியோருக்கு மலேசிய நிறுவன விமானங்களில் பயணம் செய்வதே பிடித்தமான ஒன்றாகும். அதுபோல் நேற்று மேற்கொள்ள வேண்டிய தங்களின் பயணத்திற்கும் அவர்கள் எம்எச்17யே தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர்கள் டிக்கெட் பதிவு செய்யப் போனபோது அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளுக்கான பதிவுகளும் முடிந்திருந்தன. விருப்பமில்லாதபோதும் வேறு வழியின்றி அவர்கள் கேஎல்எம் விமானத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

எம்எச்17 தாக்குதலுக்கு உள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் சிம் நமக்கும் மேலே ஒருவன் இதனைத் தீர்மானிக்கின்றான் என்று கடவுள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

‘என்னுடைய குழந்தை உட்பட மூன்று பேருக்கும் இந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் எம்எச்370 என்ற மலேசிய விமானம் 370 பயணிகளுடன் மாயமாய் மறைந்தது பற்றி இன்னமும் தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் இதேபோல் மற்றொரு விபத்து நடைபெறக்கூடும் என்று என் மனைவி கூறியதால் விருப்பத்திற்கு மீறி வேறொரு விமானத்தைத் தேர்வு செய்தேன். இந்த முடிவுக்காக நான் இப்போது மகிழ்ச்சி அடைகிறேன்” என்று சிம் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. 

உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த கொடூர சம்பவத்தில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர். 

பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் ஒழிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தலைசிறந்த நிபுணர்கள் என்பதும், அவுஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நடைபெறும் 20-வது சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற போது இவர்கள் இந்த கோர முடிவை சந்தித்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

பலியானவர்களில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிளென் ரேமண்ட் தாமஸ், தாயின் கருவில் இருந்து குழந்தையை தாக்கும் எய்ட்ஸ் தொற்றுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோயெப் லேஞ்ச், அமெரிக்க டாக்டர் சீமா யாஸ்மின் உள்ளிட்ட பலர் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஆராய்ச்சி, பிரசாரம் மற்றும் தொண்டுகளின் மூலம் இந்த உலகுக்கு அரிய சேவையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Correction It's not 298 it's 295...

    ReplyDelete
  2. யாராக இருந்தாலும் அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பு என்பது பரிதாபத்திற்குரியதுதான். அதிலே இரு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதிலும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் பெருந்தொகையாக அழிந்திருப்பது மனிதகுலத்திற்கே பேரிழப்பு. இனிமேலாவது இவ்வாறான மாநாடுகளுக்கு நிபுணர்கள் விமானப்பயணத்தில் ஒரே விமானத்தில் ஒன்றாகச் செல்வதைத் தவிர்த்து சிறுசிறு குழுக்களாகச் செல்வது உத்தமம்.

    ReplyDelete

Powered by Blogger.